TNPSC Thervupettagam

தாவரங்களுக்குப் பார்வை உண்டா

March 13 , 2024 305 days 232 0
  • நம் பூமியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் தாவரங்கள் வித்தியாசமானவை. தாவரங்கள் என்றால் அசையாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும், மிக எளிய உயிரினம் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், தற்போது நிகழ்ந்துவரும் ஆய்வுகள் தாவரங்களுக்கு இடையில் மொழிகள் உண்டு, தாவரங்களுக்கு அறிவாற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத் தற்போது தாவரங்களுக்குப் பார்வை இருக்கலாம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
  • தென் அமெரிக்காவின் சிலே, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உள்ள மழைக்காடுகளில் வாழும் ஒரு கொடிவகைதான் நகல் தாவரம் (Boquila Trifoliolata). இந்தத் தாவரம் தன் அருகில் வாழும் வேறு தாவரங்களின் இலைகளை நகல் எடுத்து, அவற்றைப் போலவே தன் இலைகளை மாற்றிக்கொள்கிறது.
  • குறிப்பாக எதிரிகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் பூச்சிகள், நத்தைகள் போன்றவை அண்டாத இலைகளை இவை நகல் எடுப்பதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
  • இது மட்டுமல்லாமல் இந்தத் தாவரத்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தாவரங்களின் இலைகளை நகல் எடுக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது தன்னுடைய ஒரே கொடியில் இரண்டு தாவரங்களின் இலைவடிவங்களை இவற்றால் உருவாக்க முடியும்.
  • இது எப்படிச் சாத்தியம் என்று ஆராய்ந்ததில் இரண்டு வகை சாத்தியக்கூறுகள் தென்பட்டன. ஒன்று கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் (Horizontal Gene Transfer).
  • பெற்றோராக இல்லாத ஓர் உயிரினம் தனது மரபணுக்களை மற்றோர் உயிரினத்திற்கு அனுப்புவதைக் கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் எனக் கூறுவர். பொதுவாக ஒரு செல் உயிரினங்களிடையே இந்தப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பாக்டீரியாக்கள் தடுப்பு மருந்துகளில் (Antibiotic) இருந்து தப்பிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன.
  • அதாவது தடுப்பு மருந்துகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்ட ஒரு பாக்டீரியா, அந்த மரபணுத் தகவலை மற்ற பாக்டீரியாக்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இதன் மூலம் அவை மொத்தமாக அந்தத் தடுப்பு மருந்துக்கு எதிரான எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்கின்றன.
  • பல செல் உயிரினங்களிடம், குறிப்பாகத் தாவரங்களிடம் இந்தக் கிடைமட்டப் பரிமாற்றம் அரிதாக நடைபெறுவது வழக்கம். இதேபோன்ற ஒன்றால்தான் நகல் தாவரமும் மற்ற தாவரங்களின் மரபணுக்களைப் பெற்று அவற்றைப் போலவே தம்மை மாற்றிக்கொள்கிறது. ஆனால், இந்த நகலெடுப்பு எவ்வாறு சாத்தியம் என்பது புதிராகவே இருந்தது.
  • நீங்கள் யாரோ தெரியாத ஒரு நபருடன் கைகுலுக்கும்போது, அவரது மூக்கு வடிவம் உங்களுக்கு வந்துவிடுகிறது என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அதேபோன்ற ஒன்றுதான் அந்தத் தாவரத்திலும் நடைபெற்றது. ஆனால், விஞ்ஞானிகள் 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், காற்றில் பரவும் பாக்டீரியா ஒன்று தாவரத்தின் மரபுப் பொருள்களை எடுத்துச் சென்று நகல் தாவரத்திற்கு வழங்குவதாகச் சொல்லப்பட்டது.
  • நகல் தாவரத்தின் இலைகளில் உள்ள பாக்டீரியாவின் டி.என்.ஏவையும், அந்தத் தாவரம் பிரதி எடுத்த தாவரத்தின் இலைகளில் உள்ள பாக்டீரியாவின் டி.என்.ஏவையும் சோதனை செய்ததில் இரண்டுக்கும் இடையே சில பொருத்தங்கள் இருந்தன. இதை வைத்து இரண்டு தாவரங்களுக்குள்ளும் மரபணுப் பொருள்களைப் பரிமாற்றம் செய்வதில் பாக்டீரியாக்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டது.
  • ஆனால், அந்த முடிவுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சில அறிஞர்களால் ஏற்கப்படாமல் மறுக்கப்பட்டது. பின் வேறு எந்தக் காரணத்தினால் இந்த உருவ மாற்றம் நிகழலாம் என்று ஆராய்ந்தபோதுதான், நகல் தாவரத்துக்குக் கண் பார்வை இருக்கலாம் என்கிற ஊகமும் எழுந்தது.
  • தாவரங்களுக்குப் பார்வை உண்டா எனும் ஆராய்ச்சி 1905ஆம் ஆண்டில் இருந்தே நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த தாவரவியல் விஞ்ஞானியான காட்லீப் ஹேபர்லேண்ட், தாவரங்களுக்குப் பார்வை உண்டு என்று வாதாடியுள்ளார். தாவர இலைகளின் வெளிப்புற அடுக்கில் அமைந்திருக்கும் சில செல்கள் லென்ஸ்களைப் போலச் செயல்பட்டு, ஒளியின் வேறுபாட்டை அறிந்து, சுற்றுப்புறத்தை அவதானிக்கின்றன என்று அவர் வாதிட்டார்.
  • அவர் சொன்னது போலவே தாவரங்களில் ஒளி ஏற்பிகள் (Photoreceptors) இருப்பது உண்மைதான். ஆனால், அவை தாவரங்கள் வடிவங்களை அறிவதற்கும் நிறங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும் உதவுகின்றனவா என்றால் உறுதியான பதில் இல்லை. இதனால் இந்தக் கூற்று மறுக்கப்பட்டது.
  • ஆனால், நகல் தாவரம் பற்றிய சோதனையில் அவற்றின் உருமாற்றப் பண்புக்குப் பார்வைத் திறன் முக்கியமான காரணமாக இருக்கலாமா என்று விஞ்ஞானிகள் பரிசோதிக்கத் தொடங்கினர்.
  • 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் விஞ்ஞானிகள் சில பிளாஸ்டிக் தாவரங்களை நகல் தாவரங்களின் அருகே வைத்து அதன் வடிவத்தை அவை பிரதி எடுக்கின்றனவா என்று சோதித்தனர். உண்மையான தாவரத்தை மட்டும் அந்தத் தாவரங்கள் நகல் எடுக்கின்றன என்றால், அதற்கு மரபணுப் பரிமாற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
  • ஒருவேளை பிளாஸ்டிக் தாவரங்களையும் அவை பிரதி எடுக்கின்றன என்றால் நிச்சயம் அவை தன் அருகில் இருக்கும் தாவரங்களைப் பார்த்தே தம் உருவத்தை மாற்றிக்கொள்கின்றன என விஞ்ஞானிகள் நிறுவ முனைந்தனர்.
  • அந்தச் சோதனையின் முடிவில் ஆச்சரியமூட்டும் வகையில் பிளாஸ்டிக் செடியின் இலைகளையும் நகல் தாவரங்கள் பிரதி எடுத்து அவற்றைப் போலவே இலைகளை வளர்த்தன. இது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அந்தத் தாவரத்துக்கு நிச்சயம் பார்வை உண்டு என்று சோதனை செய்த விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
  • ஆனாலும் அந்தச் செயல்பாடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதற்கான போதுமான விளக்கம் இல்லாததால் அறிவியல் உலகம் இதையும் முழுமையாக ஏற்கவில்லை. இருப்பினும் இந்த ஆய்வு தாவரங்களுக்குப் பார்வை இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிசெய்வதற்கான புதிய தொடக்கமாக அமைந்துள்ளது என்பதை மட்டும் அனைவரும் ஏற்கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்