TNPSC Thervupettagam

தாவரங்கள் பேசிக்கொள்ளுமா?

June 18 , 2023 573 days 320 0
  • தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறதே, அப்படி என்றால் அவற்றுக்கு உணர்வு இருக்குமா? தங்களுக்குள் உரையாடிக்கொள்ளுமா? ஆம், தாவரங்களும் உரையாடுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ’வாசனை’ என்கிற மொழியின் மூலம் பேசிக்கொள்கின்றன.
  • ஆப்பிரிக்கக் காடுகளில் வளரும் மரங்களில் ஒன்று குடை முள்வேல மரம் (Umbrella Thorn Acacia). இந்த மரங்களின் இலைகளை ஒட்டகச்சிவிங்கிகள் விரும்பி உண்ணும். ஆனால், அந்த மரங்களுக்கோ தங்களை ஒட்டகச்சி விங்கிகள் தீண்டுவது பிடிக்காது. எனவே அந்த விலங்குகளை விரட்டு வதற்காக மரங்கள் இலைகளின் ஊடே நச்சு வாயுவைப் (Ethylene) பீய்ச்சி அடிக்கின்றன.
  • ஒரு மரம் நச்சு வாயுவை வெளியிட்டவுடன் இவற்றைப் புரிந்துகொண்ட அடுத்தடுத்த மரங்களும் நச்சு வாயுவைச் சுரக்கத் தொடங்குகின்றன. இதனால் ஒட்டகச்சிவிங்கிகள் தகவல் அறியாத வெகு தொலைவில் உள்ள மரங்களிலிருந்து இலைகளைச் சாப்பிடுகின்றன. அதுவும் இந்த வாயு, காற்று வீசும் திசையில் பரவும் என்பதால் காற்றுக்கு எதிர்த் திசையில் சென்று அங்கிருக்கும் மரங்களில் உள்ள இலைகளைச் சாப்பிடுகின்றன. இவற்றை மரங்களுக்குள் நிகழும் உரையாடல் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
  • மரங்கள் அசையாமல் இருந்தாலும் அவற்றுள் மின்சமிக்ஞைகள் தொடர்ந்து பயணிக்கின்றன. ஆபத்தான பூச்சிகள் ஏதாவது தீண்டினால் அந்தத் தகவல் மரம் முழுமைக்கும் அனுப்பப்பட்டு உடனே அவற்றை விரட்டும் வாசனையை மரங்கள் கசியவிடுகின்றன. தங்களைத் தீண்டும் பூச்சிகளைக்கூட மரங்கள் சரியாக அடையாளம் கண்டறிகின்றன.பூச்சிகளில் இருந்து வெளிவரும் உமிழ்நீரின் வேறுபாடுகளை அறிந்து, தங்களை எந்தப் பூச்சி கடித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதை விரட்டுவதற்கு வேண்டிய ரசாயனங்களை வெளியிடுகின்றன.
  • சில நேரம் வாசனை மூலம் வேறு உயிர்களைக்கூட மரங்கள் உதவிக்கு அழைக்கின்றன. பைன் மரங்களைக் கம்பளிப்பூச்சிகள் கடித்தால், அவற்றுக்கு எதிரியான ஒட்டுண்ணிக் குளவிகளை ஈர்க்கும் வாசனையைச் சுரக்கின்றன. அதை முகர்ந்துவிட்டு வரும் குளவிகள், அந்த மரத்தைத் தாக்கும் கம்பளிப்பூச்சிகளின் உடலில் முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவந்தவுடன், கம்பளிப்பூச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிடுகின்றன. மரங்கள் இத்தகைய தற்காப்பைப் பயன்படுத்துகின்றன.
  • வாசனை மட்டுமல்ல, மரங்கள் வேறு சில மொழிகளையும் அறிந்து வைத்திருக்கின்றன. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மரங்கள் வேதிச் சமிக்ஞைகளை அனுப்பி ஒன்றுக்கொன்று எச்சரித்துக்கொள்கின்றன எனக் கண்டறிந்துள்ளனர். இது மரங்களின் வேர்களின் மூலம் நடைபெறுகிறது.
  • மரங்களின் வேர்களில் படரும் சில வகை பூஞ்சைகள் இந்தத் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. பூமிக்கு அடியில் வளரும் பூஞ்சைகள் மரங்களின் வேர்களை ஒரு வலைப்பின்னல்போல இணைக் கின்றன. இதனால் ஒரு மரம் அனுப்பும் சமிக்ஞைகள் தொலைதூரத்தில் உள்ள மரங்களையும் சென்றடைகின்றன. இன்று நாம் பார்க்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்போல இந்தப் பூஞ்சைகளின் வலைப்பின்னல்கள் தகவல்களைப் பரிமாற்றம் செய்கின்றன.
  • பூச்சிகளின் தாக்குதல், நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு ஆபத்துகள் குறித்த செய்திகள் பூஞ்சைகள் மூலமாகப் பரிமாறப்படுகின்றன. தங்களைப் போட்டியாளர் களாகக் கருதிக் கொள்ளும் இரு வேறு மரங்கள்கூட ஆபத்து என்று வரும்போது ஒன்றாக இணைந்து அவற்றை எதிர்கொள்ளத் திட்டமிடு கின்றன.
  • எவ்வளவு தகவல்கள் பறிமாறப்படுகின்றன, அவை எப்படி நடைபெறுகின்றன என்பது குறித்த ஆய்வுகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. மரங்களுக்கு உதவுவதன் மூலம் பூஞ்சைகள் தங்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பு போன்றவற்றை அவற்றிடமிருந்து பெறுகின்றன.
  • மரங்கள் மட்டுமல்ல, எல்லாத் தாவரங்களும் இது போன்ற உரையாடல்களை நிகழ்த்துகின்றன. ஆனால், காட்டில் இருந்து பிரித்து எடுத்துவரப்பட்ட தாவரங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் உரையாடும் பண்பை இழந்துவிடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களால் நடப்படும் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அவை மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் (Selective Breeding) மூலம் வளர்க்கப்படுவதால் அந்தப் பயிர்கள் உரையாடும் ஆற்றலை இழந்துவிடுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் அவற்றுக்கு இயற்கையான தற்காப்பும் போய்விடுகிறது.
  • இதுவே பயிரிடப்பட்ட தாவரங்களுக்கு இடையே, அதே இனத்தைச் சேர்ந்த காட்டுத் தாவரங்களை அறிமுகம் செய்வதன் மூலம் அந்தத் தாவரங்கள் தங்களுக்குள் இழந்த தகவல் பரிமாற்றப் பண்பை மீண்டும் பெறுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் நாம் பூச்சிக்கொல்லிகளைக் குறைத்து மண் வளத்தைக் காக்கலாம் என்கிறனர் விஞ்ஞானிகள்.
  • ஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தாவரங்களால் ஒலிகளின் மூலம் உரையாட முடியுமா என ஆய்வு செய்தனர். தாவரங்களைப் பரிசோதனைக் கூடத்தில் வளர்த் தவர்கள், அவற்றைச் சுற்றி ஒலிகளைப் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்தினார்.
  • சில நாள்களிலேயே தாவரங்களின் வேர்களில் இருந்து 220 hertz அலைவரிசையில் வெடிப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது. இந்தச் சத்தம் வரும்போது அருகில் இருந்த தாவரங்கள் தங்கள் இலைகளை விரிக்கின்றன எனத் தெரியவந்தது. இதன் மூலம் ஒலிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் தாவரங்களுக்கு உண்டு என்கிற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
  • ஆனால், இந்த ஆய்வுகள் எல்லாம் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன.
  • இந்த முயற்சிகள் வெற்றியடையும் போது எதிர்காலத்தில் நாம் தாவர மொழிகளைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம். அவை பேசிக் கொள்வதை ரசிக்கலாம். மனிதர்களும் தாவரங்களும் பேசிக்கொள்ளும் காலம்கூடக் கனியலாம்.

நன்றி: தி இந்து (18 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்