- இந்திய நாட்டின்மீது படிந்திருந்த காரிருளை, எட்டயபுரத்தில் எழுந்த எழுஞாயிறு ஓட ஓட விரட்டியடித்தது.
- அதனால்தான் 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதியாரை, ஆங்கிலேயர்கள் 34 நாட்கள் கடலூர் சிறையிலே அடைத்து வைத்தனர்.
- கடந்த காலத்தைப் பற்றிப் பாடுகின்ற கவிஞர்களை, நிகழ்கால மக்கள் மறந்துவிடுவர்; நிகழ்காலத்தைப் பற்றிப் பாடுகின்றவர்களை, எதிர்காலம் மறந்துவிடும்.
- ஆனால், மகாகவி பாரதியை முக்காலமும் நினைக்கும்; எக்காலமும் நினைக்கும். "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என அந்தக் கரிசல் காட்டுக் கவிஞன் பாடியதை, இமயமலையின் அடிவாரத்தில் ஒருவன் உற்றுக் கேட்பானானால், அக்கனல்வரி எதிரொலிக்கும்.
- குமரிக் கடற்கரை அலைகளை ஒருவன் நிதானித்துக் கேட்பானானால், "நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை' எனும் கீதத்தை அவை ஆனந்தமாக ஆர்ப்பரிக்கும்.
- மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி எனப்பாடிய மகாகவியை, நாம் மறந்தாலும் சோவியத் மக்கள் மறக்க மாட்டார்கள்.
- வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மிவிம்மி விம்மிவிம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே எனும் சோக கீதத்தை நாம் மறந்தாலும், பிஜித் தீவிலே வாழும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
- சொந்த நாட்டின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த அந்த யுகக்கவிஞன், அடிமைப்பட்ட நாடுகள் அனைத்திற்கும் சேர்த்தே குரல் கொடுத்தான்.
- பழம்பெருமையை எடுத்துச் சொல்லித்தான் அடிமைப்பட்ட மக்களுக்கு எழுச்சியையும் உணர்ச்சியையும் ஏற்படுத்த முடியும். எனவே,
- "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
- இருந்ததும் இந்நாடே - அதன்
- முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
- முடிந்ததும் இந்நாடே - அவர்
- சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
- சிறந்ததும் இந்நாடே - இதை
- வந்தனை கூறி மனதில் இருத்தி என்
- வாயுற வாழ்த்தேனோ? இதை
- வந்தே மாதரம் வந்தே மாதரம்
- என்று வணங்கேனோ'
- எனப் பாடினார்.
- கடந்த காலத்தைப் பாடிய பாவலர், நிகழ்காலத்தில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் எடுத்தியம்பினார்.
- "நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
- நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...
- சிப்பாயைக் கண்டஞ்சுவார் - ஊர்ச்
- சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
- துப்பாக்கிக் கொண்டு ஒருவன் - வெகு
- தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒளிப்பார்
- அப்பால் எவனோ செல்வான் - அவன்
- ஆடையைக் கண்டுபயந்து எழுந்து நிற்பார்
- எப்போதும் கைகட்டுவார் - இவர்
- யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார்'
- என மறந்தும் மரத்தும் கிடந்த மக்கள், எழுச்சி பெற்று எழும்படியாகப் பாடினார்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
- பாரதி கொண்டிருந்த நிகழ்கால இலட்சியங்களில் சில நிறைவேறின; சில நிறைவேற வில்லை.
- "சந்தர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
- சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்'
- என பாரதி, இலட்சிய கீதம் பாடினான். நாம் நிலாவைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சோறூட்டிக் கொண்டிருந்த காலத்தில், பாரதி அறிவியல் பார்வையோடு நிலாவைப் பார்த்தான்.
- தெருப்பெருக்கும் தொழிலை ஒரு காலத்தில் தோட்டிமைத் தொழிலாகப் பார்த்தோம். அந்தத் தொழில் செய்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருந்தோம்.
- அத்தொழிலைச் செய்தவர்களை "தோட்டிகள்' என அழைத்தோம். ஆனால், பாரதி அதனை "சாத்திரம்' என்றான். இன்றைக்கு அந்தத் துப்புரவுத் தொழிலை எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் செய்து வருகிறார்கள்; எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் செய்து வருகிறார்கள்.
- பாரதி இந்த நாட்டு இளைஞர்களைப் பெரிதும் நம்பினார். "சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்று பாடினார்.
- ஆனால், இந்திய மக்களின் வரிப்பணத்திலே கற்று, அயல் நாடுகளுக்குச் செல்கின்ற இளைஞர்கள், அங்கிருக்கும் கலைச்செல்வங்களை இங்குக் கொண்டு வந்து சேர்ப்பதில்லை.
- யூதர்கள் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார்கள். சென்ற அவர்கள் மற்ற மற்ற நாடுகளில் இருக்கும் அறிவுநுட்பங்களை, தொழில்நுட்பங்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
- ஆனால், இங்கிருந்து வளர்ந்த நாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கு வேலைவாய்ப்பினைப் பெறுகிறார்கள்; கை நிறைய சம்பாதிக்கிறார்கள். அப்படிச் சம்பாதித்தவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்களாகி, அங்கேயே சொத்து சுகங்களைத் தேடிக்கொண்டு, அந்தந்த நாடுகளைத் தாய்நாடுகளாக்கிக் கொண்டு தங்கிவிடுகிறார்கள். பாரதி பாடியது போல் கலைச் செல்வங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்ப்பதில்லை'.
- ஒரு காலத்தில் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்கத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் (மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சயாம்) சென்றவர்கள் அங்கங்கு நம்முடைய ஆன்மிகத்தையும், சிற்பக் கலைகளையும் நிறுவிவிட்டுத் தேடிய செல்வங்களையும் கொண்டு வந்து குவித்தார்கள்.
- பாரதி எதிர்பார்த்த இலட்சியம் அதுதான். வளர்ந்த நாடுகளுக்குச் செல்பவர்கள் நம்முடைய கலாசாரத்தைக் கைவிட்டுவிட்டு, அந்த நாட்டினுடைய கலாசாரத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இதற்காகவா பாரதி "சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' எனப் பாடினார்?
சரியான சாட்சிகள்
- மற்றவர்கள் மண் விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டிருந்தபோது, பாரதியார் ஒருவர்தாம் மண் விடுதலையோடு பெண் விடுதலையும் வேண்டும் எனப் போராடினார்.
- 1910-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் "பீட்டர்மாரிட்ஸ் பர்க்' என்ற நகரத்தில் "பெண் விடுதலைச் சங்கம்' தொடங்கப் பெற்றதைத் தமது பத்திரிகையில் பாராட்டி எழுதுகிறார்.
- அவ்வாறே சீனப் பெண் விடுதலைப் போராளி சியூசின்'பற்றிய செய்திகளை எல்லாம், நம் நாட்டு மக்கள் உணரும்படியாக பத்திரிகையில் எழுதினார்.
- பெண்மைக்கு முதலிடம் தருவதற்காகவே பாரதி, "பாஞ்சாலி சபத'த்தைப் பாடினார். அந்தக் குறுங்காப்பியத்தின் முடிவில் வீமன் சபதம் உரைக்கின்றான்;
- அர்ச்சுனன் சபதம் உரைக்கின்றான்; இறுதியில் பாஞ்சாலி சபதம் உரைக்கின்றாள். வீமன், அர்ச்சுனன் சபதங்களை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு, பாஞ்சாலியின் சபதத்தையே அந்தக் காப்பியத்திற்குத் தலைப்பாக வைத்தமைக்குக் காரணம், பெண்மைக்கு முதன்மை வேண்டியே!
- கவிதையில் போதாதென்று உரைநடையிலும், "ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கு அடங்காது.
- அதை ஏட்டில் எழுதியவர் இல்லை; அதை மன்றிலே பேசியவர் எவரும் இல்லை' என மனம் நொந்து எழுதினார்.
- பாரதியின் பேச்சாலும், எழுத்தாலும் பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டதோடு, திமிர்ந்த ஞானச் செருக்கோடும் திகழத் தொடங்கினார்கள்.
- அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்தியப் பெண்கள் வியக்கத்தக்க பதவிகளைப் பெற்று வருகிறார்கள்.
- என்றாலும், இன்றைக்குப் பெண்கள் காமுகர்களால் சீரழிக்கப்படுவதையும், கொலை செய்யப் படுவதையும் நினைத்தால் இதயம் நடுங்குகிறது.
- கற்பிக்கும் ஆசிரியர்களில் சிலரால் பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலதிகாரிகள் சிலராலும் பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
- வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய, இந்தக் கொலை பாதகத்திற்குத் தீர்வு கிடையாது.
- பாரதி ஓர் அற்புதமான மகாகவி மட்டுமன்று; அவர் ஒரு தீர்க்கதரிசியும் ஆவார். நம்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' எனப் பாடிய திரிகால ஞானி பாரதியார்.
- வந்த சுதந்திரத்தை மட்டுமன்று; இன்று வந்து கொண்டிருக்கும் நோய்களையும், அதற்குரிய மருந்தினையும் சொன்ன மருத்துவ மாமணி பாரதி.
- இன்றைக்கு உழைத்து வாழக்கூடிய ஒரு சராசரி இந்தியனுக்கு, கிடைக்க வேண்டிய அத்தனை வசதிகளும் கிடைக்கின்றன. என்றாலும், வானத்தை முட்டுகின்ற அளவுக்கு ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அற்ப ஆயுளிலேயே மாண்டு போகிறான்.
- இன்றைக்குப் பெருவழிச் சாலைகளில் எதிரும் புதிருமாக ஆர்ப்பரித்துச் செல்லுகின்ற ஆம்புலன்சுகளே இதற்குச் சரியான சாட்சிகளாகும்.
இன்றைக்கும் என்றைக்கும் பாரதி
- நமது உடம்பிலே பலவிதமான உறுப்புகள் இருந்தபோதிலும், இருதய வலியாலே இறப்பவர்களே மிகுதி. சான்றாக பாரதியார், தம் தந்தையையே எடுத்துக்கொண்டு, "நாசக் காசினில் ஆசையை நாட்டினன்; நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்' என்றெழுதுகிறார்.
- "ஆசைக்கோர் அளவில்லை, விடயத்துள் ஆழ்ந்த பின்னங்கு அமைதியுண்டாமென மோசம் போகலீர்' என எதிர்காலத்திற்கும் ஓர் எச்சரிக்கை விடுத்தார் அந்த மாமனிதர்.
- இப்பொழுது இருதய நிபுணர்கள் சொல்வதை எல்லாம், அன்றைக்கே சொல்லிச் சென்றார் பாரதியார். "கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்; கொடுங்கோபம் பேரதிர்ச்சி ... அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்; கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்' என எதிர்காலத்தை நாடிப்பிடித்து பாடிவைத்தார் அப்பாவலர்.
- தம் வரலாற்றில் பாடியதை பாரதியார் சிறுகதையின் வாயிலாகவும் இயம்பிச் சென்றுள்ளார். "மானுடா மனம் இறந்த பிறகுதான் உபசாந்தியுண்டு, அது இருக்கும் வரையில் கவலைகள் நீங்கி இருக்கலாம் என்ற எண்ணம் வீண்.
- கவலைகளாகிய அசுரர்களை இடைவிடாது பெற்றுத் தள்ளிக் கொண்டிருக்கும் தாய், மனமே ஆகும். உனக்கு அந்தப்பொய்யரக்கியிடம் இன்னும் பிரேமைத் தீரவில்லை.
- பக்குவம் வந்த பிறகு நீ, தானே இங்கு வந்து சேரலாம்; இப்போது போய் வா' என நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னது போல் எழுதியிருக்கிறார் அப்பெருமகன்.
- இந்த மகாகவி இன்றைக்கும் என்றைக்கும் தேவை என்பதை பாவேந்தர் பாரதிதாசன்,
- "திங்கள்கதிர் உள்ளமட்டுமுன் கீர்த்தியுண்டு
- செவிபெற்ற பாக்கியத்தால் இங்குன் பாட்டில்
- பொங்கிவரும் சுவையனைத்தும் உண்ணுகின்றோம்'
- என்று செப்பேடுபோல் செதுக்கி வைத்திருக்கிறார்.
நன்றி: தினமணி (13 - 12 - 2021)