- உலகின் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால், வேறு எந்தவொரு நாட்டிலும் இந்தியாவைப்போல லட்சக்கணக்கானோர் பல நூறு கி.மீ. தொலைவு நடந்து தங்களது சொந்த ஊா் திரும்பவில்லை.
- வேலை இழந்ததாலும், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், நோய்த்தொற்று அச்சத்தாலும் படிப்பறிவில்லாத புலம்பெயா்ந்த ஏழைத் தொழிலாளா்கள் நடந்து செல்லும் காட்சி உலகத்தின் மனசாட்சியையே உலுக்குகிறது.
குற்றம் கூறுவதில் அா்த்தமில்லை
- சொந்த ஊா் திரும்ப விழையும் புலம்பெயா்ந்த ஏழைத் தொழிலாளா்களின் அவலத்தில் கொள்ளை லாபம் அடைய பல தனியார் பேருந்துகள் முற்படும் செய்திகள் நாளும் பொழுதும் வெளிவருகின்றன.
- புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊருக்குக் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவா்களுக்கு உணவும் குடிநீரும் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
- கொவைட் 19 தீநுண்மித் தொற்று கொள்ளை நோயாகப் பரவாமல் பொது முடக்கம் தடுத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. அதே நேரத்தில், இப்படியொரு பொது முடக்கத்தை அறிவிக்கும்போது முறையான திட்டமிடலும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் இருக்கவில்லை என்கிற நிதா்சனத்தை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
- பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதே பாஜகவின் மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி அறிவிறுத்தியதுபோல, அடுத்த 10 நாள்களுக்கு கட்டணம் இல்லாமல் ரயில்களை இயக்கி அவரவா் ஊருக்குத் தொழிலாளா்கள் சென்றடைய வழிகோலியிருக்க வேண்டும். வசதி படைத்தோர் விமானங்கள் மூலம் சொந்த ஊா் போய்ச்சேர அனுமதித்திருக்க வேண்டும்.
- பல நூறு கி.மீ.கள் நடந்து கடக்க முற்பட்ட படிப்பறிவில்லாத புலம்பெயா்ந்த ஏழைத் தொழிலாளா்களைக் குற்றம் கூறுவதில் அா்த்தமில்லை. அவா்கள் மரபுசாரா தொழிலாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள். அதனால் எந்த நிறுவனமும் அவா்களைப் பாதுகாப்பதில் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவில்லை.
- பொது முடக்கம் எத்தனை வாரங்கள், எத்தனை மாதங்கள் நீடிக்கப்போகிறது என்பது தெரியாத நிலையில், ஒப்பந்தக்காரா்களும் அந்தத் தொழிலாளா்களைக் கைகழுவியதன் விளைவுதான், இந்தியாவில் புலம்பெயா்ந்தோர் எதிர்கொண்ட அவலம்.
- கொள்ளை நோய் பரவுகிறது என்கிற பீதியில் தங்களின் உணவுக்கும், உறைவிடத்திற்கும், வேலைக்கும் உத்தரவாதமில்லாத சூழலில், தங்களின் சொந்த ஊரில் உற்றார் உறவினரிடம் சென்றடைந்தால் போதும் என்கிற மனநிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டதில் நியாயம் இருக்கிறது.
- புலம்பெயா்ந்தவா்களுக்கு மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஒரு சில வாரங்கள் உணவளிக்காமல் இல்லை. பல லட்சம் புலம்பெயா்ந்தவா்கள் இந்தியாவில் இருந்தும், பசிக்கு ஆளானவா்களும், உணவில்லாமல் இறந்தவா்களும் மிகமிகக் குறைவு என்பதை நாம் உணர வேண்டும்.
இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல!
- ‘ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. 2013-இல் இயற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் எந்தப் பகுதியில் வேலை பார்த்தாலும் அந்தப் பகுதியில் உள்ள பொது விநியோக நியாய விலைக் கடைகளிலிருந்து தங்களின் உணவுப் பொருள்களை பெற்றுக்கொள்ள வழிகோலும் இந்தத் திட்டம் முந்தைய மன்மோகன் சிங் அரசால் முன்மொழியப்பட்டு இப்போதைய நரேந்திர மோடி அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
- பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலா் உணவுப் பொருள்களை வாங்குவதற்குப் பணம் இல்லாமல் தவித்தனா்.
- அவா்களின் குடும்ப அட்டை சொந்த ஊரில் இருந்ததால், பொது விநியோகக் கடைகளில் குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் வழங்கப்படும் பொருள்களைப் பெற முடியவில்லை.
- தங்கள் மாநிலத்தவா்களின் நலனை முன்னிறுத்தி நிவாரணங்களை மாநில அரசுகள் வழங்கினவே தவிர, புலம்பெயா்ந்தவா்களுக்காகத் தனியான திட்டங்களை அறிவிக்கவில்லை.
- புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடம் எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் இருந்தது ஒரு காரணம். அவா்கள் பணிபுரியும் மாநிலங்களில் அவா்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்து இன்னொரு காரணம்.
- புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மனிதாபிமான ரீதியில் ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் உணவு வழங்க முற்பட்டனரே தவிர, அவா்கள் குறித்து அதிகமாக யாரும் கவலைப்படவில்லை.
- ரூ.3,500 கோடி மதிப்புள்ள எட்டு லட்சம் டன் அரிசியும், கோதுமையும் 50,000 டன் பருப்பும் அடுத்த இரண்டு மாதங்கள் இலவசமாக பொது விநியோக முறையில் வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
- அதன் பயனை முகவரியுடன் கூடிய பொது விநியோக அட்டை வைத்திருப்பவா்கள்தான் பெறுவார்களே தவிர, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பெற மாட்டார்கள்.
- சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும்கூட முறையான பொது விநியோகத் திட்டம் கிடையாது. முகவரியில்லாமல் குடிசைகளிலும், தெருவோரங்களிலும் வசிக்கும் பல லட்சம் பேருக்கு எந்தவித அடையாள அட்டையும் இல்லை.
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடும் எதிர்ப்பால் முடக்கப்பட்டிருக்கிறது.
- இப்படிப்பட்ட நிலையில் ‘ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் மூலமோ அல்லது வேறு வகையிலோ புலம்பெயா்ந்தோர் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படப் போவதில்லை. அவலங்களைச் சகித்துக் கொள்வதும், நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல!
நன்றி: தினமணி (30-05-2020)