TNPSC Thervupettagam

திட்டங்களைச் செயல்படுத்த பணியாளர்கள் வேண்டாமா?

August 8 , 2024 157 days 193 0

திட்டங்களைச் செயல்படுத்த பணியாளர்கள் வேண்டாமா?

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை​யிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்​து​விட்டன. பல்வேறு துறைகளில் முற்போக்கான பல திட்டங்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிக் குழந்தை​களுக்குக் காலை உணவுத் திட்டம், கல்வி - வேலைவாய்ப்புத் துறை சார்ந்த ‘நான் முதல்​வன்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் குறிப்​பிடத்​தக்கவை.
  • குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’த் திட்டம், ‘இலவசப் பேருந்துப் பயண’த் திட்டம் ஆகியவை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்​தக்​கூடியவை. ஆனால், இத்திட்​டங்கள் அனைத்​தையும் செயல்​படுத்​து​வதற்கான மனித வளம் அரசுத் துறைகளில் உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.

காலிப் பணியிடங்கள்:

  • தி​முகவின் 2021 சட்டப்​பேரவைத் தேர்தல் அறிக்​கை​யில், ‘அரசு அலுவல​கங்​களில் உள்ள காலிப் பணியிடங்​களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்​கப்​படுவர்’ என்கிற வாக்குறுதி அளிக்​கப்​பட்​டிருந்தது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து​விட்ட நிலையில், அரசு அலுவல​கங்​களில் காலிப் பணியிடங்​களின் எண்ணிக்கை உயர்ந்து​கொண்டுதான் வருகிறது.
  • அரசுத் துறைகளில் நிலவும் பல்வேறு காலிப் பணியிடங்கள், ஏற்கெனவே இருக்கும் அரசு ஊழியர்​களால் கூடுதல் பொறுப்பின் கீழ் நிர்வகிக்​கப்​பட்டு வருகின்றன. இதனால் பெரிய திட்டங்களை அறிமுகப்​படுத்​தும்​போது, அரசு ஊழியர்​களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படு​கிறது. இதனைத் தடுக்கக் காலிப் பணியிடங்கள் நிரப்​பப்பட வேண்டும்.
  • ஆனால், தற்போது அரசு அலுவல​கங்​களில் இருக்கும் தட்டச்சர் போன்ற பணியிடங்​களுக்குத் தொகுப்​பூதிய முறையில் பணியாளர்களை நியமித்து​வருவது வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறு பணியமர்த்​தப்​படும் ஊழியர்​களுக்குப் பணி நிரந்தரம் கிடையாது. அரசு ஊழியர்​களுக்கு வழங்கப்​படும் உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்​படு​வதில்லை. அரசின் இதுபோன்ற அணுகுமுறை எதிர்​காலத்தில் அரசுத் துறைகள் தனியார்​மய​மாவதற்கே வழிவகுக்​கும்​.

பெண்கள் நலன்:

  • பெண்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் தமிழக அரசால் கொண்டு​வரப்​பட்​டாலும், பெண்கள் படுகின்ற இடர்ப்​பாடுகள் தொடர்ந்து​கொண்டுதான் இருக்​கின்றன. இதற்கு ஓர் எடுத்துக்​காட்டு, நியாய​விலைக் கடைகளில் பணிபுரியும் பெண்களின் துயரங்கள். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்​களில் நியாய​விலைக் கடைகளைக் காலை 8.30 மணிக்கே திறக்க வேண்டும். நண்பகல் 12.30 வரை இயங்கும் கடை மீண்டும் 3.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்க வேண்டும்.
  • வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்​தாலும் அவர்கள்தான் வீட்டிலும் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது நமது நாட்டில் எழுதப்படாத விதி. வீட்டில் அவசரஅவசரமாக வேலையை முடித்​து​விட்டு, நியாய​விலைக் கடைக்கு வந்தால் இங்கு விற்பனை இயந்திரத்தில் பில் போட்டு​விட்டு, அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை என்று இத்தனை பொருள்​களையும் எடையிட்டு வழங்க வேண்டும். இப்பொருள்கள் 50 கிலோ மூட்டைகளாகக் கடைகளுக்கு வந்துசேர்​கின்றன.
  • இந்த மூட்டைகளையும் தனிநபர்​களாகவே பெண்கள் கையாள வேண்டி​யிருக்​கிறது. ஒரு நியாய​விலைக் கடையில் ஒரு விற்பனையாள​ரும், ஓர் எடையாளரும் இருக்க வேண்டும். ஆனால் 90% கடைகளில் ஒரே ஒரு நபர்தான் இருவருக்கான வேலையையும் செய்து​வரு​கிறார். காலிப் பணியிடங்கள் நிரப்​பப்​படு​வதில்லை. ஒரு கடைக்குச் சராசரியாக 1,000 முதல் 1,500 குடும்ப அட்டைகள் வரை இருக்​கின்றன. இந்தச் சூழ்நிலை​யில், இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்​தின்கீழ் வழங்கப்​படும் பொருள்​களுக்குத் தனியே பில் போட வேண்டி உள்ளதால், ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு பில்கள் போட வேண்டி​யிருக்​கிறது.
  • இவை அனைத்​தை​யும்விட அவலமான நிலை, 90% நியாய​விலைக் கடைகளில் கழிப்பிட வசதி கிடையாது. காலை முதல் மாலை வரை இயற்கை உபாதைகளைக் கட்டுப்​படுத்​திக்​கொண்டோ அல்லது இதற்காகக் கடையின் அருகில் உள்ள வீட்டாரிடம் கூச்சப்​பட்டுக் கேட்கும் நிலையிலோதான் நியாய​விலைக் கடையில் பணிபுரியும் பெண்கள் இருக்​கின்​றார்கள்.
  • இவ்வளவுக்கும் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்​திற்காக வீடு வீடாகச் சென்று ‘டோக்கன்’ வழங்கியதும், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியைப் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்குக் கொண்டுசேர்க்கத் துணைநின்​றதும் இவர்கள்​தான். இந்த ஊழியர்​கள்தான் இத்தகைய அவலநிலையில் பணிபுரிந்து வருகிறார்​கள்​.

பழைய ஓய்வூதியத் திட்டம் கனவுதானா?

  • 2021 தேர்தல் அறிக்​கையில் அரசு ஊழியர்​களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த முக்கியமான வாக்குறுதி, புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்​பட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்பது. இந்த வாக்குறு​தியைக் கொடுப்​பதில் திமுகவும், அதிமுகவும் ஒன்றுக்​கொன்று சளைத்தவை அல்ல.
  • ஒவ்வொரு தேர்தலின்​போதும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்கிற வாக்குறு​தியைக் கொடுப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை வசதியாக மறந்துபோவதும் வாடிக்கையாகிப் போயிற்று. நிறைவேற்ற முடியாத ஒரு வாக்குறுதியை ஏன் கொடுக்க வேண்டும்?
  • ஓர் அரசின் நிர்வாக​மானது செம்மையாக நடைபெறவும், அரசின் திட்டங்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடையவும் முக்கியமான கருவியாக இருப்பது அரசு ஊழியர்கள். அவர்கள் நலன் சார்ந்த விஷயங்​களில் அரசு அலட்சியமாக இருப்பது தவிர்க்​கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு துறையிலும் புதிய திட்டங்கள் அறிமுகப்​படுத்​தும்போது கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது, அத்திட்​டங்கள் சிறப்​பாகச் செயல்​படுத்​தப்​படு​வதற்கு உதவும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்​படு​பவர்கள் அரசு ஊழியர்​கள். பாலம் பல​வீனமாக இருப்ப​து அரசு நிர்​வாகத்துக்கு ஒருபோதும் நல்​லதன்​று.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்