திமிங்கிலங்களின் பாடல்கள்
- பூமியில் உள்ள மிகப்பெரிய பாலூட்டி திமிங்கிலம். 1970-களில், கலிபோர்னியா கடல் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் ரோஜர் பெய்ன் முதன்முதலில் திமிங்கிலங்களின் பாடல்களைத் துல்லியமாகப் பதிவுசெய்து ஆராய்ந்தார். இந்த ஒலிகள் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையையும் தொடர்ச்சியையும் ரிதத்தையும் கொண்டுள்ளன என்று நிரூபித்தார். அதன் பிறகு, கோர்னல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கேத் சால்ஸ் இந்த ஒலிகளை ஆழமாக ஆராய்ந்து, திமிங்கிலங்களின் ஒலியில் வடிவங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் அவை ஒன்றோடு மற்றொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் திறன்கொண்டவை. அவை உருவாக்கும் பாடல்களும் விசில்களும் வெறும் ஒலிகள் மட்டுமல்ல.
- கூன் முதுகுத் திமிங்கிலங்களின் மொழி ஒரு பாடலைப் போன்றது. கிட்டத்தட்ட 20 முதல் 30 நிமிடங்கள் வரை அது நீளும். நூறு கிலோமீட்டருக்கும் அதிகத் தொலைவில் உள்ள மற்ற கூன் முதுகுத் திமிங்கிலங்களுக்கும் இந்தப் பாடல்கள் கேட்கும். அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு தாளமும் ஏற்ற இறக்கமும் ஒரு தகவலைக் கொண்டிருக்கும்.
- வெவ்வேறு கடல்களில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த கூன் முதுகுத் திமிங்கிலங்கள், ஒத்த பாடல் அமைப்பைப் பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனிதர்களுக்கு ரசனையில் மாற்றம் ஏற்படுவதுபோல், திமிங்கிலங்களின் பாடல்களும் காலப்போக்கில் படிப்படியாக மாறி இருக்கின்றன. அதுமட்டுமன்றி, இந்த மாற்றங்கள் கூட்டத்தில் உள்ள அனைத்து திமிங்கிலங்களாலும் பின்பற்றப்படுகின்றன.
- நீலத் திமிங்கிலங்கள் மிகவும் தாழ்ந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை (10-39 Hz) உருவாக்குகின்றன. இந்த ஒலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. விஞ்ஞானிகள் சிறப்பு ஒலிப்பதிவு கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஒலிகளைப் பதிவுசெய்துள்ளனர். இந்தத் தாழ்ந்த அதிர்வெண் ஒலிகள் இனப்பெருக்கம் மற்றும் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை கடலில் 1600 கி.மீ.க்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
- ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் 'கிளிக்' ஒலிகளை உருவாக்குவதில் சிறப்புப் பெற்றவை. இவை உருவாக்கும் ஒலி அலகுகளின் தொகுப்பை 'கோடா' என்று ஆராய்சியாளர்கள் அழைக்கின்றனர். அதாவது, ஒரு முறை ’கிளிக்’, மீண்டும் ஒரு முறை ’கிளிக்’ அதற்குப் பின் மூன்று முறை தொடர்ந்து ‘கிளிக்' ஒலி எழுப்பும் முறையை ஒரு கோடா என்று சொல்லலாம். இதைப் போல் பல நூறு கோடா வடிவங்கள் உள்ளன. திமிங்கிலங்களின் தகவல் தொடர்பைப் பல ஆண்டுகளாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் வெவ்வேறு குழுக்களுக்கிடையே வேறுபட்ட 'கோடா' வடிவங்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். இவை ஒரு வகையான குழு அடையாளமாகவும் செயல்படுகின்றன.
- ஆர்கா திமிங்கிலங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தகவல் தொடர்புத் திறன்களைக் கற்பிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெற்றோர் திமிங்கிலங்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சிக்கலான ஒலிகளை உருவாக்கும் முறையைக் கற்பிக்கின்றன. அதேபோல் குழந்தைகள் இந்த ஒலிகளை நகல் எடுத்து, காலப்போக்கில் அவற்றை மேம்படுத்துகின்றன. இந்தச் செயல்முறை நம் குழந்தைகள் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதை ஒத்திருக்கிறது. இந்த ஆய்வின் மூலம், திமிங்கிலங்களும் சமூகக் கற்றல் திறன் கொண்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆர்கா திமிங்கிலங்கள் இடம்சார்ந்த விழிப்புணர்வைக் கொண்டுள்ளன. தங்கள் இருப்பிடத்தையும், மற்ற திமிங்கிலங்களின் இருப்பிடத்தையும் துல்லியமாகக் கண்டறியும் திறன்கொண்டுள்ளன. திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலிகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல செய்திகளை அவற்றால் அனுப்ப முடியும்.
- திமிங்கிலங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப, தங்கள் ஒலிகளை மாற்றியமைத்துக்கொள்ளும். குறிப்பாக, கப்பல் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதிகளிலும் மனிதர்களால் ஒலி மாசுபாடு அதிகமாக உள்ள இடங்களிலும், திமிங்கிலங்கள் உயர் அதிர்வெண் ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. இது அவற்றின் புத்திக்கூர்மையையும், சூழலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனையும் காட்டுகிறது.
- ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹேன்ஸ் போஸ்டெல், ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் மூளையின் அமைப்பை எம்.ஆர்.ஐ. பயன்படுத்தி ஆராய்ந்தார். ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் மூளையில் உள்ள நரம்பு செல்களின் எண்ணிக்கை, மனித மூளையைவிட 5 மடங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக, மொழி மற்றும் சமூகத் தொடர்புகளை நிர்வகிக்கும் நரம்பியல் சுற்றுகள் அதிகம் உள்ளது என்று கண்டறிந்தார்.
- சமீபத்திய ஆண்டுகளில், 'CETI' (Cetacean Translation Initiative - திமிங்கில மொழிபெயர்ப்பு முன்முயற்சி) போன்ற திட்டங்கள் திமிங்கிலங்களின் தகவல் தொடர்பை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்துவருகின்றன. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி திமிங்கிலங்களின் ஒலிகளை ஆராய்கின்றனர். எனினும், திமிங்கிலங்களின் மொழியை நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு புதிய ஆய்வும் திமிங்கிலங்களின் அறிவாற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறன்கள் குறித்த புதிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உதவியுடன், திமிங்கிலங்களின் மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)