TNPSC Thervupettagam

திரவிடியன் ஸ்டாக்கும் திராவிட மாடலும்

September 15 , 2022 694 days 454 0
  • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 1938 - இல் வெளியிட்ட, ஹெச்.ஜி. ரௌலின்சன் எழுதிய "எ கான்சிஸ் ஹிஸ்டரி ஆஃப் தி இண்டியன் பீப்பில்' என்கிற ஆங்கில வரலாற்று நூலில் "திரவிடியன் ஸ்டாக்' என்கிற சொல் காணப்படுகிறது. அண்ணா காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
  • அங்கு ஏப்ரல் 1962- இல் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் "ஐ பிலாங் டு திரவிடியன் ஸ்டாக். ஐயம் ப்ரௌட் டு கால் மைசெல்ஃப் எ திரவிடியன்' (நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன், திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்பவன்) என்று கூறினார்.
  • "திராவிடம்' என்று சொல்லுக்கு எதிர்வினையாக சிலர் பேசி வருவது ஆரோக்கியமானது அல்ல. இந்த எதிர்வினைக்கு கோட்பாட்டு ரீதியாக பதில்கள் உள்ளன. இனம் என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும் தொடக்கத்தில் மரபினங்கள் இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இந்த அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற நிலம், அவர்களுடைய மரபு ரீதியிலான மாநிலமாகவும் நாடாகவும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • நம் பழைய மரபினத்தின் பெயர் "திராவிடர்' என்பது. ஆனால் இன்று "திராவிடம்' என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஆதிச்சநல்லூர், கீழடி என பல களங்கள் சாட்சியாக நம்மிடையே இருக்கின்றன.
  • ஆதிசங்கரர், காஷ்மீரின் பண்டைய இலக்கியம் எனத் தொடங்கி பக்தி இலக்கியங்கள், தாகூர், கால்டுவெல், ஜி.யு.போப், சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை வரை பலர் வழிமொழிந்ததுதான் திராவிடம்.
  • "திரவிடியன் ஸ்டாக்' என்பது தொன்மையான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாடு மட்டுமல்லாமல், தமிழிலிருந்து பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் இன மக்களின் கலாசாரமும் புவியியலும் இணைந்ததாகும். "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று சொன்ன அண்ணா, தமிழ் மக்களின் உரிமைகளையும் தனித்தன்மையையும் பாதுகாக்க மாநில சுயாட்சியும் அவசியம் என தனது உயிலாக "காஞ்சி' ஏட்டில் எழுதினார்.
  • மாநில சுயாட்சி என்பது, திராவிட இயக்கத்தின் குரல் மட்டுமல்ல, திலகர் பூர்ண சுயராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தே அது தொடங்குகிறது. காங்கிரஸின் லக்னெள உடன்படிக்கை, மோதிலால் நேரு தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கை ஆகியவற்றில் "மாகாண ஸ்வராஜ்ஜியம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே "மாநில சுயாட்சி' ஆகும்.
  • அண்ணா "காஞ்சி' இதழின் தைத்திருநாள் சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இதை அண்ணா ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இதுவே அவரின் இறுதி உயிலாகும்.
  • திராவிடம் என்பது தமிழ்நாட்டின் நலனுக்காக, உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதே. இதன் அடிப்படையில் உருவானதே மாநில சுயாட்சி. அண்ணாவின் உயிலை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞர் கருணாநிதி மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 1974- இல் பெற்று, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்தார். மாநில சுயாட்சியை கலைஞர் கருணாநிதி முன்னெடுத்து மாநிலங்களுக்கு தனிக்கொடி, மாநில முதலமைச்சர்கள் விடுதலை நாளான ஆகஸ்ட் 15- இல் கொடியேற்றுதல் ஆகியவற்றை முன்னெடுத்தார்.
  • இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடனும், மாநில சுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதே அண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் "திரவிடியன் ஸ்டாக்' என்று குறிப்பிட்டார்.
  • அதுமட்டுமல்ல, சமூகநீதி, தமிழ்மொழி பாதுகாப்பு, இங்குள்ள, உலகு எங்கும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு, தமிழ் கலாசாரம், தமிழக உரிமைகள் ஆகியவற்றுக்கு தனித்தன்மையோடு குரல் கொடுக்கக் கூடிய கொள்கை, கோட்பாடுகள், தத்துவங்களே "திரவிடியன் ஸ்டாக்' எனப் பொருள்படுகின்றது.
  • இதே போன்று "திரவிடியன் மாடல்' பற்றியும், தமிழக பொருளாதாரம் வளர்ந்த விதம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய காலகட்டத்தில் அவசியமானதாகிறது. அதாவது இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்க வேண்டும். இந்திய அரசு ஒரு மாநிலத்தைச் செழிப்புறச் செய்து, மற்றொரு மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துவதை அறவே ஒழித்திட வேண்டும்.
  • அனைத்து மாநிலங்களுக்கும் சமன்பாடான நிதியை ஒதுக்கி, இந்தியத் திருநாட்டின் அனைத்துப் பகுதிகளும் சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களிடையே பாகுபாடற்ற நடைமுறைகளே உண்மையான கூட்டாட்சிக்கும் மாகாணங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
  • இந்திய அரசியல் சாசனம், உலகிலேயே அதிகப் பக்கங்களையும் பிரிவுகளையும் கொண்டது. இதில் கடந்த 75 ஆண்டுகளில் 110 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இவற்றில் 105 திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன. சில, திருத்த மசோதாக்களாக நிலுவையில் உள்ளன.125 முறை பிரிவு 356 - ஐப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசு தென்மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவு நிறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இத்தனை தடங்கல்களையும், தடைகளையும் தாண்டி, தமிழகம் பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதையில் சென்று, முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இதுதான் "திராவிட மாடல்' என்று தெளிவாகக் குறிப்பிடலாம்.
  • அதே சமயம், திமுக இந்திய ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் முன்னோடியாகவும் திகழ்கிறது. சீனப் போர், பாகிஸ்தான் போர், வங்கதேசம் உதயமான காலங்களில் திமுக போர் நிதி திரட்டித் தந்து மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தது.
  • தமிழகம், புதுவையைப் பொறுத்தவரையில் மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நமது மாநில பிரச்னைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும்.
  • அதன் மூலம் அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதி, திட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, நதிநீர் பிரச்னையை எடுத்துக்கொண்டால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம்.
  • இவை உயிர்நாடியான பிரச்னைகள்தாம், மறுக்கவில்லை. ஆனால், மற்ற நதிநீர் பிரச்னைகளைப் பேசத் தவறிவிட்டோம்.
  • இப்படி தமிழகத்தின் தொன்மைமிக்க பிரச்னைகளை எல்லாம் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கி விரைவான தீர்வு பெறும் வகையில் உரையாற்ற வேண்டும். அதுதான் "திரவிடியன் ஸ்டாக்'. மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் திட்டங்களை திராவிட ஆட்சியாளர்களே அதிகம் கொண்டு வந்துள்ளனர்.
  • சமீபத்தில் விவாதப் பொருளான இலவசங்கள் வேறு, நலத்திட்டங்கள் வேறு. பொதுவாக கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்காக இலவசம் வழங்கினால் அவற்றை இலவசங்கள் என்று சொல்ல முடியாது. இவை நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் நல அரசு வழங்குகின்ற உதவிகள்தாம்.
  • இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம், கை ரிக்ஷா ஒழிப்பு (மேற்கு வங்கத்தில் இன்றும் கைரிக்ஷா உள்ளது), குடிசை மாற்று வாரியம், சமச்சீர் கல்வி, எல்லா கிராமங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் இவற்றை 1974 - லேயே நிறைவேற்றிவிட்டனர். மற்ற மாநிலங்களில் 2010 - இல்தான் இவையெல்லாம் முழுமையடைந்தது. பள்ளி மாணவர் இலவச உணவுத்திட்டம் போன்ற பல முன்னோடித் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றன. இதுவே "திராவிட மாடல்' ஆகும்.
  • தமிழக மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம்தான் "திராவிட மாடல்'. "திரவிடியன் ஸ்டாக்' என்பது நம் உரிமைகளை நாடே கேட்க உரக்க எடுத்துரைத்து, உரிமைகளைப் பெறுவது. அதாவது, "உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கைகொடுப்போம்'. திரவிடியன் மாடல் என்பது, நம் வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கடப்பாடு என்ன, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகள் என்னென்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்வது.
  • தமிழக அரசில் 34 துறைகள் உள்ளன. இதில் சமூகநலத்துறை, புள்ளிவிவரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை இவற்றிலிருந்து அரசுக்கு அதிக அளவில் வருவாய் வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாய் ஈட்ட வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வர வேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.
  • "திரவிடியன் ஸ்டாக்', "திராவிட மாடல்' இவற்றை கொள்கை ரீதியாக, அறிவியல் ரீதியாக பலவகையாகப் பகுக்கலாம். இதுதான் அண்ணா வகுத்துத் தந்து, கலைஞர் கருணாநிதி முன்னெடுத்த திராவிடத் தத்துவம்!

திராவிடம் வழியே மக்கள்நலப் புரட்சியை ஏற்படுத்துவோம்...

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

நன்றி: தினமணி (15 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்