TNPSC Thervupettagam

திராவிட மாடல் பொருளாதாரம்: ஒரு பார்வை

April 28 , 2022 831 days 739 0
  • திராவிட இயக்க சித்தாந்தங்கள் சமூகநீதிக் கொள்கை, இன உணர்வு, மொழி உணர்வு, மாநில உரிமை என்று நீளும். இவையெல்லாம் வரவேற்கத்தகுந்தவையே.
  • சுதந்திரத்திற்குப் பின்னால், மிட்டா மிராசுகள், நிலச்சுவான்தார்கள், பண்ணை முதலாளிகள், நிறுவன உரிமையாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதாவது செல்வம் படைத்தவர்கள் மட்டுமே சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்கிற நிலை இருந்தது. அதை உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கங்கள்

  • திராவிட இயக்கங்களாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அடித்தட்டில் இருக்கிறவர்களும் அமைச்சர்களாக உயர முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
  • இவையெல்லாம் திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்கள். இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது.
  • தற்போது திராவிட மாடல் பொருளாதாரம் என்ற ஒன்றை முன்வைக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
  • எந்தக் கட்சியும் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில்லை. பொருளாதாரத்தை காங்கிரஸ் பொருளாதாரம், பாஜக பொருளாதாரம், திமுக பொருளாதாரம், அதிமுக பொருளாதாரம் என்றெல்லாம் வகைப்படுத்தி விட முடியாது.
  • உலகப் பொருளாதாரம்தான் உள்ளூர் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. திறந்தவெளி பொருளாதாரம் என்று கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தபோது, இந்தியாவும் அப்பொருளாதாரத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • அதன் அடிப்படையில் இந்தியாவிலும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் திறந்தவெளி பொருளாதாரம் கொண்டுவரப்பட்டது.
  • ஆகவே, உலகப் பொருளாதாரத்தை மையமாக வைத்தே இந்திய பொருளாதாரமும், இந்தியாவில் இருக்கிற மாநிலங்களின் பொருளாதாரமும் அமையும். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பீட்டை வைத்தே ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி தீர்மானிக்கப்படுகிறது.
  • இந்த நிலையில், பொருளாதாரத்தை நாம் எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்குவது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறிதான்.
  • ஆனால், உலகப் பொருளாதாரம் அதனை அனுமதிப்பதில்லை. உலக நாடுகளில் நாம் பெற்றிருக்கும் கடன்களால் உலக வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை.
  • தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் பெருகுவதற்கு நம்முடைய பொருளாதாரம் மட்டுமே துணை புரிவதில்லை.
  • இந்த மாநிலத்தின் அமைதித் தன்மை, படித்த இளைஞர்களின் ஆற்றல், துறைமுகங்கள், குறைந்த அளவு ஊதியம் பெறுகிற அதிக மனித ஆற்றல் இவையே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்குக் காரணமாக அமைகின்றன.
  • இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கென்று ஒரு பொருளாதாரத்தை நாம் எப்படி ஏற்படுத்தி விட முடியும்?
  • கல்வி மேம்பாடு என்று பார்த்தாலும், பெரும்பாலான சிறந்த கல்வி நிறுவனங்கள் தனியார் வசமே இருக்கின்றன.
  • தொழில் வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அதற்கு அடிப்படைக் காரணமே பன்முக ஆற்றல் படைத்த படித்த இளைஞர்கள்தான்.
  • ஆகவே, இப்படி உற்பத்தித் துறையும், சேவைத் துறையுமே பொருளாதாரத்தை தீர்மானிக்கிறபோது ஒரு கட்சிக்கென்று தனியாக ஒரு பொருளாதாரம் எப்படி அமையும்? இந்திய வர்த்தக சந்தையில் சரக்கு - சேவை வரி நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து அதிக அளவிலான வர்த்தக பாதிப்புகளையும், வருவாய் பாதிப்புகளையும் எதிர்கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். இவற்றை திராவிட மாடல் பொருளாதாரம் எவ்வாறு மாற்றி அமைக்கும்?
  • மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் 3 % முதல் 8 % வரை வரி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முதலில் தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டது. சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருள்களை 3 % வகைக்கும், மீதமுள்ளவற்றை 8 % வகைகளுக்கும் மாற்ற திட்டமிட்டுள்ளது.
  • இதனால் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் ஒரு சதவீத உயர்வு மூலம் வருடத்திற்கு சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த வரி மாற்றத்தின் மூலம் மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகைக்காக மத்திய அரசை நம்பி இருக்கும் நிலை மாறும். ஆனால், இந்தப் புதிய வரிவிதிப்பின் மூலம் வேறு பல புதிய பாதிப்புகளும், பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.
  • ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் 0 - 5 சதவீத வரிவிதிப்பில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் - சேவைகள், சாமானிய, நடுத்தர மக்கள் பயன்படுத்துபவையாகவே உள்ளன.
  • ஆகவே, இதன் மூலமாக சில பொருட்கள் விலை குறையும் என்றாலும், வேறு சில பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்பதே நிதர்சனம்.
  • அதாவது 3 சதவீத பிரிவில் உள்ளவற்றில் 20 முதல் 30 சதவீத பொருட்களை ஒதுக்கி விட்டு மீதமுள்ள 70 அல்லது 80 சதவீத பொருட்களை 8 சதவீதத்துக்கு கீழ் மறுசீரமைப்பு செய்தால் சாமானிய, நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள்.
  • ஏற்கெனவே, வர்த்தக 4 அடுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் சில குழப்பங்கள் இருந்த நிலையில், மேலும் கூடுதலாக ஒரு சதவீத வரிவிதிப்பின் மூலம் கூடுதலான சுமைதான் உருவாகும்.
  • இதனால்தான் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் 5 சதவீத ஸ்லாட் நீக்கம் குறித்து பரிசீலித்து வருகிறது.

தவிர்க்க முடியாத கேள்வி

  • கடந்த 2017-இல் மத்திய அரசு இந்தியாவில் ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு - சேவை வரியை அறிமுகம் செய்தது. அப்போது 5 சதவீதம் 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என பல்வேறு அளவுகளில் வரி விதிக்கப்பட்டது.
  • இவற்றில் தற்போது குறைந்தபட்சமாக உள்ள 5 சதவீத வரிவிகிதத்தை நீக்கலாம் என்று அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
  • மே மாதம் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
  • இதனால் 5 சதவீத வரி செலுத்துபவர்கள் கூடுதலாக வரி செலுத்தக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.
  • ஏற்கெனவே அதிகரித்துள்ள விலைவாசி, எரிபொருள் விலையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகம் இந்த அதிகரிப்பினால், கூடுதல் சுமையை சுமக்க வேண்டியதாகும்.
  • 5 சதவீத வரிவிகிதத்தில் பெரும்பாலும் உணவுப் பொருட்களே வருவதால் இவற்றை எந்த வரிவிகிதத்தில் சேர்ப்பது என்கிற முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் எடுக்க வேண்டும்.
  • பொட்டலம் இடப்படாத உணவுப்பொருட்களை 3 சதவீத வரிவிகிதத்திற்கு உயர்த்த திட்டமிடுவதாகத் தெரிய வருகிறது.
  • கரோனா பாதிப்பிற்குப் பிறகு பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. தொழில் வளர்ச்சியும், வர்த்தகமும் அதிகரித்து வருகின்றன.
  • இதன் காரணமாக ஜி.எஸ்.டி. வரிவசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
  • கடந்த மார்ச் மாதம் மட்டும் 1,42,095 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. 25,830 கோடி ரூபாயாகவும், மாநில ஜி.எஸ்.டி. 32,378 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூபாய் 74, 470 கோடியாகவும் உயர்ந்துள்ளது. செஸ் வரி ரூபாய் 9,417 கோடியாக உள்ளது.
  • சில மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று, மக்கள் அதிகம் பயன்படுத்தும் சில பொருட்களை 3 சதவீத விகிதாசாரத்தில் கொண்டு வரவும், அதே சமயம் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. பிரிவில் உள்ள சில அத்தியாவசியமற்ற பொருட்களை 8 சதவீத விகிதாசாரத்தில் கொண்டு வரவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
  • மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டால், அது தொழில் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடும். இந்த நிலையில், திராவிட மாடல் பொருளாதாரம் எந்த வகையில் துணைநிற்கும்?
  • இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களாலும் இந்தியாவில் பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 6.9 சதவீதம் அளவுக்கு உச்சத்தை எட்டி உள்ளது.
  • அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை இதனால் அதிகரித்து விட்டது.
  • இத்தகைய சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட்டால் ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
  • பெட்ரோல், டீசலுக்கான மாநில வரிவிதிப்பை தமிழக அரசு குறைத்துக் கொள்ளாமல் திராவிட மாடல் பொருளாதாரம் என்று பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
  • கைத்தறி துணிகள், பட்டுப் புடவைகள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த அண்மையில் முயற்சி நடந்தது.
  • அவ்வாறு உயர்த்தப்பட்டால் கைத்தறித் தொழில் நசிந்து விடும் என்று பலரும் எச்சரித்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது.
  • உலகிலேயே அதிக ஜிஎஸ்.டி. வரிவிகிதம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் 7விழுக்காடும், கனடா போன்ற நாடுகளில் 5 விழுக்காடும் வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் 18 சதவீதம் வரி விதிக்கப் படுகிறது.
  • பல நாடுகளில் ஒரே அடுக்கு வரி வசூலிக்கப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் 5 அடுக்கு ஜி.எஸ்.டி. வரி நடைமுறையில் உள்ளது.
  • உலகின் பலநாடுகளில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்ட 2 அல்லது 3 ஆண்டுகளில் விலைவாசி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது.
  • இங்கு அது போன்று விலைவாசி குறையவில்லை. ஜி.எஸ்.டி. வரி அறிமுகமாகி, 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எவ்வித மாற்றமும் வரவில்லை.
  • நிலைமை இவ்வாறாக இருக்க திராவிட மாடல் பொருளாதாரம் எதை, எப்படி மாற்றி அமைக்கும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

நன்றி: தினமணி (28 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்