TNPSC Thervupettagam

திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்

March 20 , 2022 870 days 447 0
  • அமெரிக்க பாணி வளர்ச்சி, ரஷ்ய பாணி வளர்ச்சி என்று பேசப்பட்ட காலம் உண்டு. இடையிலேயே கொஞ்சம்போல ஸ்காண்டிநேவியன் நாடுகள் பாணி வளர்ச்சியும் ஒரு குறுக்கீடாக பேசப்பட்டது உண்டு. இந்தியாவிலும் அப்படித்தான் இருந்தது.
  • இப்போது ஒரு தசாப்தமாக தன்னுடைய மாநிலங்களிலேயே சில முன்மாதிரிகளை முன்வைத்துப் பேசுகிறது இந்தியா. முதலில் குஜராத் முன்மாதிரி பேசப்பட்டது. தொழில் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக்கொண்டு பேசப்பட்ட மாதிரி அது. அதற்கு மாற்றாக அடுத்து கேரள முன்மாதிரி பேசப்பட்டது.
  • “குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி அனைவருக்குமானதாக இல்லை. சிறுபான்மையினர் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். மனிதவளக் குறியீடுகள் மோசமாக இருக்கின்றன. மாறாக, கேரளம்  பொருளாதாரத்திலும் கல்வி- சுகாதாரம்- சமஉரிமைக் குறியீடுகளிலும் மேம்பட்டு இருக்கிறது” என்று குஜராத் மாதிரி விமர்சிக்கப்பட்டு, கேரள மாதிரி முன்னிறுத்தப்பட்டது. 
  • இதுவும் நிலைக்கவில்லை. மனிதவளக் குறியீடுகளில் மேம்பட்டு இருந்தாலும், கேரளம் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சியை ஏனையோருக்கு ஒரு முன்னுதாரமாகச் சொல்ல முடியாது. காரணம், கேரளத்தின் செல்வம் பெருமளவில் இங்கிருந்து வெளிநாட்டுக்குப் பிழைக்கப்போனவர்கள் கொண்டுவந்த அந்நியச் செலவாணியைச் சார்ந்தது; இயற்கை வளங்களிலும் அபரீதமான கேரளத்தை ஏனையோருக்கு முன்னுதாரணப்படுத்த முடியாது என்ற குரல்கள் விமர்சனமாகவே வெளிப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் தமிழகம் ஒரு முன்மாதிரியாகப் பேசப்படலானது. 

தமிழக முன்மாதிரி

  • அடிப்படையிலேயே கேரளம் - பஞ்சாபைப் போல நீர் வளமோ, வங்கம் - பிஹாரைப் போல நில வளமோ, ஒடிஷா - ஜார்கண்டைப் போல கனிம வளமோ இல்லாத மாநிலம் தமிழகம். உத்தர பிரதேசர்களைப் போல கைவினைக்கலை மரபோ, மராத்தியர்களைப் போல வணிகப் பண்பாடோ பரவலான மாநிலமும் இல்லை இது. சுமாரான அளவுக்கு இங்கு எல்லா வளங்களும் உண்டு. ஆனால், மனிதவளத்தை முக்கியமான காரணியாக்கி நாட்டின் முன்னணி வளர்ச்சி மாநிலங்களில் ஒன்று எனும் இடத்தை அது அடைந்தது. 
  • தன்னுடைய வளர்ச்சியைப் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது, சமூக நலம் மற்றும் ஜனநாயக தளங்களிலும் சேர்த்து வளர்த்தெடுத்தது. மக்களிடையே ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் சாதி-மத அடிப்படையிலான அரசியலின் தாக்கம் குறைவு; விளைவாக அமைதிச் சூழல் இங்கு நிலவியது.
  • ஒருபுறம் பொருளாதாரரீதியாக தொழில் வளர்ச்சியை முன்னெடுக்கும் மாநிலம்; மறுபுறம் சமூக நலத் திட்டங்களை வளர்த்தெடுக்கும் மாநிலம் என்ற பெயர் தமிழகத்துக்கு எப்போதும் இருந்தது. ஆயினும் ஒரு குஜராத் மாதிரிபோல நாடு தழுவிய கதையாடலாகப் பேசப்பட்ட ஒன்று இல்லை தமிழக மாதிரி. 
  • தமிழகத்தை அரை நூற்றாண்டாக ஆளும் இரு திராவிடக் கட்சிகளும் மாநிலக் கட்சிகள் என்பதும், அகில இந்திய அளவில் பேச வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லாதிருந்ததும் இதற்கு ஒரு காரணம். மாறாக, இன்றைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது, தேசிய அளவில் இதை ஒரு கதையாடலாக உருவாக்க விழைகிறது. குறிப்பாக, நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பொருளாதாரத் துறைசார் பின்னணியைக் கொண்டவர் என்பதும், தனக்கான பொருளாதார ஆலோசகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்துக்கொண்டுள்ள நாடறிந்த பொருளியலாளர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் டப்லோ, ஜீன் த்ரேஸ், அரவிந்த் சுப்ரமணியன், எஸ்.நாராயணன் குழுவும் இந்த முனைப்புக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.

மாற்று முன்மாதிரியா

  • தமிழக முன்மாதிரி என்கிற பெயர் தவிர்க்கப்பட்டு, திராவிட முன்மாதிரி என்கிற பெயர் முன்னிறுத்தப்படுவதன் அரசியல் ஒரு விஷயத்தைச் சட்டென உணர்த்திவிடக் கூடியது.  பிரதமர் மோடியின் காலத்தில் பாஜக பிரகடனப்படுத்தாமல் வளர்த்தெடுக்கும் ‘உத்தர பிரதேச மாதிரி’க்கான மாற்று இது; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மாதிரி என்பதே 'திராவிட மாதிரி'யின் உள்ளடக்கம் என்று கொள்ளலாம். அப்படித்தான் அது  முன்னிறுத்தப்படுகிறது.
  • அரை நூற்றாண்டு கால அனுபவத்தை எடுத்துக்கொண்டால் சாதி அல்லது மத அடிப்படையிலான பாகுபாடுகளைப் புறந்தள்ளி திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் எல்லோருக்குமான வளர்ச்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சிக் காரணிகளுக்கும், சமூக மேம்பாட்டுக் காரணிகளுக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிக்கக் கூடுமான அளவுக்கு முயன்றிருக்கிறார்கள். 
  • ஆனால், பிராந்திய அடிப்படையிலான வளர்ச்சி சமநிலையை அவர்கள் எந்த அளவுக்குக் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால் பெரிய பள்ளம் அங்கே தெரிகிறது.

பிராந்திய சமநிலை எங்கே?  

  • மனிதவள மேம்பாட்டுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியைப் பேசுகையில், தமிழகத்தைச் சில ஐரோப்பிய நாடுகளுடனும் உத்தர பிரதேசத்தை சில ஆப்பிரிக்க நாடுகளுடனும் ஒப்பிட்டு பேசப்படுவது சகஜம். அது உண்மை. இதே அளவுக்கு இன்னொரு உண்மையும் உண்டு; தமிழகத்தின் சில மாவட்டங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கும், சில மாவட்டங்கள் உத்தர பிரதேசத்தோடு ஒப்பிடத்தக்க அளவுக்கும் உள்ளன என்பதே அது. 
  • கோவைக்கும் தருமபுரிக்கும் இடையே உள்ள வளர்ச்சி வேறுபாட்டுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் இன்றளவும் உரிய கவனம் அளிக்கவில்லை. நகரங்கள் அளவில் பொருளாதாரக் குறியீட்டில் சென்னையோடு எப்படி ஏனைய நகரங்களை ஒப்பிட முடியாத ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ, அதைக் காட்டிலும் மோசமான ஏற்றத்தாழ்வை கோவை பிராந்தியத்தோடு பல பிராந்தியங்கள் கொண்டிருக்கின்றன.
  • எப்போதுமே பின்தங்கிய பிராந்தியங்களாகப் பேசப்படும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், தருமபுரி போன்றவற்றில்தான் இந்த நிலைமை என்று இல்லை; ஒருகாலத்தில் மிகச் செழிப்பான பிராந்தியமாகக் கருதப்பட்ட தஞ்சை பிராந்தியமும் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  
  • பொருளாதாரரீதியாக உருவாகி இருக்கும் ஏற்றத்தாழ்வானது, மக்களின் வாழ்க்கைத் திறனிலும் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் பின்தள்ளப்பட்ட ஒரு பிராந்தியத்தில் ஒரு ஏக்கர் விளைநிலம் பத்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றால், வளர்ந்த ஒரு பிராந்தியத்தில் ஒரு ஏக்கர் பத்து கோடி ரூபாய் எனும் அளவுக்கு இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
  • ஈரோடு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு புரிபடும் விஷயத்தைத் நாகை கல்லூரியில் இளநிலைப் பட்டம் படிக்கும் மாணவருக்குப் புரியவைக்க முடியவில்லை. 
  • அடிப்படையான விஷயங்களை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்ப்பதில் திராவிட ஆட்சியாளர்கள் சாதித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை நோக்கி எல்லாப் பகுதியினரையும் ஒன்றுபோல முன்னகர்த்துவதில் பெரும் இடைவெளி இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் தொழில் துறைப் பரவலாக்கம் தொடர்பில் ஒரு மீளாய்வுசெய்ய வேண்டி இருக்கிறது. மாறிவரும் சுற்றுச்சூழல் முன்னுரிமைப் பார்வைக்கு ஏற்ப தமிழகம் எந்ததெந்தத் தொழில்களை எடுத்துக்கொள்ள வேண்டும்; தவிர்க்க வேண்டும் என்று யோசிப்பதோடு, அந்தந்த பிராந்தியங்களின்  தன்மைக்கேற்ப புதிய தொழிற்சாலைகளை வளர்த்தெடுக்க ஒரு செயல்திட்டம்  தேவைப்படுகிறது.
  • வேளாண்மை - தொழில் - சேவை மூன்று துறைகளிலும் உரிய கவனம் செலுத்தும் வகையிலும், தற்சார்பு வலு கொண்டதாகவும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொழில் துறையை வளர்த்தெடுக்க கோவையையே நாம் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். ஆனால், அரசினுடைய கவனம் ஒரு சென்னை அல்லது கோவையில் மையம் கொள்ளக் கூடாது; ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு கோவையை உருவாக்குவதைச் சிந்திக்க வேண்டும்.
  • வளர்ச்சிரீதியாக பின்னே உள்ளே பிரந்தியங்கள் சிறப்புக் கவனத்தைக் கோருகின்றன. இந்திய ஒன்றியத்துடன் இந்தப் பிரச்சினையை ஒப்பிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்படி இந்திய அரசு ஒரு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டுமோ, அப்படி தமிழ்நாடு அரசானது பல மாவட்டங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்க வேண்டி இருக்கிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், பின்தள்ளப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக இந்த பிராந்தியத்தினரை ஆட்சியாளர்கள் கருத வேண்டும்.  
  • துரதிஷ்டமாக முன்னேறிய பகுதிகளுக்கே மேலும் மேலும் கவனம் அளிக்கும் சூழலை இன்றைய அரசியல் கொண்டிருக்கிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் தலைவர் பழனிசாமி அவர் சார்ந்த கோவை பிராந்தியத்தைத் தனக்கான களமாகக் கொண்டு இயங்கும் நிலையில், அதிமுகவுடனான போட்டியை எதிர்கொள்ள திமுக மேலும் தன்னை கோவைக்கு நெருக்கமாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது.
  • திட்டங்கள் - ஒதுக்கீடுகள் எல்லாவற்றிலும் சிறப்புக் கவனத்தை அரசியல்ரீதியான இத்தகு சாய்வுகள் தீர்மானிப்பது ஏற்கெனவே உள்ள பாகுபாட்டை அதிகரிக்கும். மேலும் மேலும் அதிகரிக்கும் இந்த பிராந்தியரீதியிலான ஏற்றத்தாழ்வு ‘திராவிட மாதிரி’ என்று முன்வைக்கப்படும் கருத்து எதிர்கொள்ளும் சவால் மட்டும் இல்லை; தமிழ்நாடு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகளில் ஒன்றும் அது! 
  • இன்றைக்கு வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, கொங்கு நாடு என்றெல்லாம் பேசப்படும் பிரிவினைக் குரல்களின் அடிநாதத்துக்கு எரிபொருள் வழங்குவதாக இந்த ஏற்றத்தாழ்வு வாதங்கள் வளர்ந்துவருகின்றன என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வறிய நிலையில் உள்ள ஒரு பிராந்தியம்,  “நாங்கள் பாதிக்கப்படுகிறோம்; அதனால் தனியே செல்கிறோம்” என்று பிரிவினை பேசினால், செழிப்பில் இருக்கும் ஒரு பிராந்தியம், “வறியவர்களை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? அதனால் தனியே செல்கிறோம்” என்று பிரிவினை பேசும்.
  • உலகெங்கும் இரண்டுக்குமே முன்னுதாரணங்கள் உண்டு. தமிழகத்தின்  பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதிசார் பெரும்பான்மையைக் கொண்டிருப்பது பிரச்சினைக்குக் கூடுதல் அபாயம் தருவதாகும். 
  • அனைவரையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சிக்கான முன்மாதிரியை உருவாக்க முற்படுவது ஆரோக்கியமான கனவு. அப்படி ஒன்றை முன்மொழியும்போது தமிழகம் அதன் முன்னுள்ள இந்தப் பெருஞ்சவாலுக்கு முகங்கொடுப்பது மிகவும் முக்கியம்!  

நன்றி: அருஞ்சொல் (20 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்