- திராவிடக் கட்சிகளின் ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் மறைந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சிகள் தங்களின் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
- பதிவான வாக்குகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும் 67.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அமமுக, மதிமுக ஆகிய சிறிய திராவிடக் கட்சிகளைச் சேர்த்தால் மொத்தம் 70.4% வாக்குகள்.
- இதுதான் திராவிடக் கட்சிகள் இதுவரை பெற்றிருக்கும் இரண்டாவது அதிகபட்ச வாக்குவீதம்; திராவிடக் கட்சிகள் 2016-ல் பெற்ற இதுவரையிலான அதிகபட்ச வாக்குவீதமான 73.9%-ஐவிட இது 3.5% மட்டுமே குறைவாகும்.
- திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதைவிட திராவிடக் கட்சிகள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பது நம் கவனத்தை அதிகமாகக் கவர்கிறது.
எதிர்பார்ப்புகள், விளைவுகள்
- அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிடக் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில், அந்தக் கட்சி தொடர்ந்து வந்த இரண்டு தலைவர்களின் (எம்ஜிஆர், ஜெயலலிதா) ஆளுமைக் கவர்ச்சியையே சார்ந்திருந்தது, கருணாநிதி தனக்குப் பிறகு ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றதுபோல் ஜெயலலிதா தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கவில்லை.
- மேலும், கட்சியின் கட்டமைப்பும் பலவீனமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்கள் பெரிதும் ஒன்றிய அரசையே சார்ந்திருந்தார்கள்.
- மாநிலத்தின் மிதமான மக்கள்நல பாணியை அவர்களால் போதிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை. ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தனத்தை, இந்துப் பெரும்பான்மைவாதத்தை, முழுமையான நவதாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் அல்லது கிட்டத்தட்ட எதிர்க்கவே இல்லை.
- குடியுரிமை (திருத்தச்) சட்டம், ஜம்மு காஷ்மீரை ஒன்றியப் பிரதேசங்களாக ஆக்கியது, பள்ளிக்கல்வியின் வெவ்வேறு தேர்வுகளை மையப்படுத்தியது, விவசாய மானியங்களைக் குறைத்தது, வேளாண்மையைப் பெருநிறுவனமயத்தை நோக்கி முடுக்கிவிட்டது போன்றவைதான் இந்தக் கொள்கைகள்.
- அதிமுகவை திமுக வெற்றிகொண்டது என்றாலும் அதை மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. 3.1% வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றிருக்கிறது.
- திமுகவுக்கு 35.1% வாக்குகளும் அதிமுகவுக்கு 32% வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 2016 தேர்தலைவிட திமுக தற்போது 3.2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது, அதிமுக 9.1% வாக்குகளை இழந்திருக்கிறது.
- பிரதானக் கட்சிகளுக்கு இடையிலான 12.3% வாக்குகள் நகர்வு என்பது முக்கியமானது. இரண்டு பெரிய கூட்டணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 5.7%. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 45.4% வாக்குகளைப் பெற்றது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39.7% வாக்குகளைப் பெற்றது.
- இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் 85.1% வாக்கு வீதமானது தேர்தல்களில் திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம் தொடர்வதைக் காட்டுகிறது.
- வட தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் திமுக ஆதிக்கம் நிலவிய அதே சமயத்தில் மேற்குப் பகுதியில் அதிமுக வலுவாகக் காணப்பட்டது; ஆனால், தெற்கில் அதன் ஆதிக்கம் குறைந்துவிட்டது.
- இதற்கு மாறாக, உறுதியற்ற தலைமை மாற்றத்தால் பலனடையலாம் என்று நம்பிய அரசியல் கட்சிகள் பெரிதும் வளரவில்லை. பழைய தேசியக் கட்சிகள் தேங்கிப்போயின.
- காங்கிரஸ் கட்சியின் வாக்கு வீதம் 6.5%-லிருந்து 4.3%-ஆகக் குறைந்தது, முன்பைவிடக் குறைந்த தொகுதிகளில் (2016 தேர்தலில் 41 இடங்கள், 2021-ல் 25) போட்டியிட்டது இதற்குக் காரணம்.
- 1989-ல் 20.2% வாக்குகள் பெற்றதிலிருந்து சீராகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக 2.9%-லிருந்து 2.6%-ஆகக் குறைந்திருக்கிறது; ஏனெனில் 2016-ல் எல்லாத் தொகுதிகளிலும் நின்ற அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
- இதுவே 2001 தேர்தலில் அதிகபட்சமாக 3.2% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. மக்கள்தொகையில் எல்லாப் பெரிய பிரிவினர்களையும் உள்ளடக்கும் கட்சிகள் தற்போது 13.0% வாக்குகள் பெற்றிருக்கின்றன.
- 2016-ல் 4.4% வாக்குகள் மட்டுமே பெற்றன; 2006-ல் 14.4% வாக்குகள் பெற்றதுதான் அதிகம். குறிப்பிட்ட சாதிகள், மதக் குழுக்கள் அல்லது பிராந்தியங்கள் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் 2011-ல் 8.1% வாக்குகளும், தற்போது 6.7% வாக்குகளும் பெற்றிருக்கின்றன.
- எல்லாத் தரப்புகளுக்குமான புதிய கட்சிகளில் பெரியது நாம் தமிழர் கட்சிதான். அதற்கு 6.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
- அதற்கு அடுத்ததாக அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தலா 2.3% வாக்குகள் பெற்றிருக்கின்றன.
- இந்தக் கட்சிகள் 0.4% வாக்குகள் பெற்ற தேமுதிகவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன. தேமுதிக 2016-ல் பெற்ற 2.4% வாக்குகளோடும், 2006-ல் பெற்ற 8.4% வாக்குகளுடனும் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
- பாமகவை உள்ளடக்கிய கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தற்போதைய தேர்தலில் 6.0% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்சிகள் 2016-ல் 7.7% வாக்குகளும், அதிகபட்சமாக 2011-ல் 8.4% வாக்குகளும் பெற்றிருக்கின்றன.
- பாமக தற்போது 3.8% வாக்குகளே பெற்றிருக்கிறது. அந்தக் கட்சி அதிகபட்சமாக 1991-ல் 5.9% பெற்றது. மதரீதியிலான கட்சிகள் ஒட்டுமொத்தமாக 3.6% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன; இவற்றுள் பாஜக 2.6% வாக்குகளுடன் பெரிய கட்சியாக உள்ளது.
- இவ்வாறாக, 1990-களிலிருந்து திராவிடக் கட்சிகளின் சமூகப் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவந்தாலும் அந்தக் கட்சிகள்தான் தேர்தல்ரீதியாக ஆதிக்கம் செலுத்துகின்றன.
- இந்தத் தேர்தல் போக்குகளைத் தீர்மானித்தது எது? இது எதற்குக் கட்டியம் கூறுகிறது? இந்தியாவின் வேறு இடங்களுடன் அதை எப்படி ஒப்பிட முடியும்? இந்திய அரசியல் களத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தப் போக்குகள் எதை உணர்த்துகின்றன?
நீடித்த வெற்றிக்கான அடித்தளம்
- இடைநிலை சாதிகளையும் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் பிற கட்சிகளும் அரசாங்கங்களும் குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொண்டன.
- 1950-களில் வளர ஆரம்பித்த திராவிடக் கட்சிகள் அந்தப் பிரிவினர்களை அணிதிரட்டுவதன் மூலம் வளர்ந்தன.
- சாதி, மொழி, வட்டார வழக்கு, தொழில் போன்றவற்றின் அடிப்படையில் வெகுமக்களையும் மேல்தட்டினரையும் பிரித்துக் காட்டும் வெகுஜன சொல்லாடல்களைக் கொண்டு திராவிடக் கட்சியினர் இதைச் செய்தனர்.
- அதைத் தொடர்ந்து அவர்களின் ஆதிக்கம் நீடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. கட்சியின் கட்டமைப்புகளை வலுவாக ஆக்கியதும், ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் வகையில் உட்குழுக்களை உருவக்கியதும்தான்; இவையெல்லாம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக் கொள்கைகளின் மூலம் தக்கவைக்கப்பட்டன.
- 1990-களில் ஒன்றிய அரசின் நவதாராளமயப் போக்கை சுவீகரித்துக்கொண்ட பிறகும் அந்தக் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் தக்கவைத்துக்கொண்டன.
- இவற்றுள் மிக முக்கியமானவை உயர் கல்வியிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு (69%), ஏழைகளிடையே ஊட்டச்சத்து, உடல்நலம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்திய மதிய உணவுத் திட்டம், கல்வியிலும் ஆரம்பச் சுகாதாரத்திலும் செய்யப்பட்ட அதிக அளவிலான முதலீடுகள், 2016 வரை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்றான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை.
- திராவிடக் கட்சிகளின் பிற கொள்கைகளும் திட்டங்களும் சமுக அடுக்கில் மேல்நோக்கிய நகர்வுக்குத் தேவையானவற்றை வழங்கின.
- நிலவுடைமையும் குத்தகைச் சீர்திருத்தங்களும் பெரிதும் இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்களுக்கே உதவின; மிகவும் சிறிய அளவிலேயே தலித்களுக்கு அவை உதவின.
- இந்தப் பிரிவினர், பாசனமும் மண்வளமும் குறைந்து போனதால் நிலவுடைமையாளர்கள் விற்ற நிலங்களை வாங்கினார்கள்.
- மானிய விலையில் வழங்கப்பட்ட இடுபொருட்கள், கடன்கள், கடன் தள்ளுபடி போன்ற வற்றால் பலனடைந்தார்கள்.
- இதுபோன்ற கொள்கைகள் சமூக அடுக்கின் கீழ் நடுத்தரப் பிரிவினரும் இடைப்பட்ட நிலையினரும் மேலே வருவதற்கு உதவின. இவை யெல்லாம் சேர்ந்து திராவிடக் கட்சிகள் தங்கள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவின.
நன்றி: இந்து தமிழ் திசை (12 - 05 – 2021)