TNPSC Thervupettagam

திருக்கார்த்திகை: மஞ்சள் காப்பு, சுழுந்து, சொக்கப்பனை, ஓலைக்கொளுக்கட்டை!

December 13 , 2024 13 days 38 0

திருக்கார்த்திகை: மஞ்சள் காப்பு, சுழுந்து, சொக்கப்பனை, ஓலைக்கொளுக்கட்டை!

  • இருளை நீக்கி ஒளி தரும் மாதமான கார்த்திகையில் பல்வேறு சிறப்புகள் கொண்டுள்ளது.

மாடக்குழிகள்

  • கார்த்திகை மாதத்தின் கார்த்திகை மீன் (நட்சத்திரம்), இன்றும்கூட ‘திருக்கார்த்தியல்’ என்னும் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாத்திரமல்ல, கார்த்திகை மாதம் முழுவதும், தெருவாசலில் இருபுறமும் விளக்கேற்றி வைப்பது வழக்கம். அதற்காகவே, வாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் இரண்டு குழிகள் இருக்கும். அவை ‘மாடக்குழிகள்’ என்று அழைக்கப்படும். அம்மாடக் குழிகளில்தான் முன்பெல்லாம் கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றுவார்கள். அப்படிப்பட்ட மாடக்குழிகளை இன்றும்கூட சில வீடுகளில் காணமுடிகிறது என்பது அதிசயமே.

கார்த்திகை விளக்கீடு

  • திருக்கார்த்தியல் அன்று வீடு முழுவதும், வீட்டிற்கு வெளியிலும் நிறைய எண்ணிக்கையிலான புத்தம்புதிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். குன்றுகளின் மீதிருக்கும் முருகன் கோயில்களில் எரியும் அகல்விளக்குகள் தொலைவிலிருந்து பார்த்தாலும், கண்களுக்கு இனிய காட்சியாக அமையும்.

மஞ்சள் காப்பு

  • இன்றும்கூட, எங்கள் பகுதிகளில் (அம்பாசமுத்திரம்) திருக்கார்த்தியல் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்தியல் அன்று இரவு அகல் விளக்குகள் ஏற்றுவது மட்டுமல்ல, வீடுகளில் கதவுகளில் மஞ்சள் காப்பு சாற்றுவதுண்டு. மஞ்சளைக் கரைத்து, அதில் பெண்கள் தங்கள் கைவிரல்களை முக்கி, கதவுகளில் பதிப்பார்கள். கார்த்திகைப்பொரி என்னும் நெல்பொரியும் உண்டு.

எரிவில்

  • நெருப்புப்பொறி பறக்கும் ‘எரிவில்’ சுற்றுவது முன்பு வழக்கத்திலிருந்தது. ஆண்பனையின் காய்ந்த கதிர், மருதம் பட்டை ஆகியவற்றைச் சுட்டுக் கரியாக்கி, அக்கரியுடன் உப்பு சேர்த்து, நீளமான துணியில் பரப்பி, சுருட்டி, ஒரு கவட்டைக்கம்பில் வைத்து அதில் கொஞ்சம் நெருப்பும் வைத்துவிட்டால் அதுதான் ‘எரிவில்’. வேகமாகச் சுழற்றினால், தீப்பொறி பறக்கும். பார்ப்பதற்கு இனிய காட்சியாக இருக்கும்.

சுழுந்தும், சொக்கப்பனையும்

  • மலையில் தேடி அலைந்து சுக்குநாறிப்புல்லின் காய்ந்த குச்சிகளைப் பறித்துவந்து சிறுசிறு கட்டுகளாகக் கட்டி வைத்திருப்போம். திருக்கார்த்தியல் அன்று இரவு, அவற்றைக் கொளுத்துவோம். அது சுழுந்து பிடிப்பது அல்லது கொளுத்துவது என்று சொல்வது வழக்கம். சிறுவர்கள், ஒவ்வொருவரும் ஒரு சுழுந்துக் கட்டைக்கொளுத்திக்கொண்டு கூட்டமாகக் கோயில்களுக்குச் செல்வோம். கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படும். சொக்கப்பனை என்பது ஒரு பனையை வெட்டி வீழ்த்தி, இருபது அடி உயரம்கொண்ட பனைத்துண்டை செங்குத்தாக நாட்டி, அதனைச் சுற்றி புளிய மிளார்களால் வேய்ந்து, அவற்றின்மீது காய்ந்த பனை ஓலைகளை மேய்ந்திருப்பார்கள். சாமி வழிபாடு முடிந்த பிறகு சொக்கப்பனைக் கொளுத்தப்படும். சொக்கப்பனை எரிந்து முடிந்தபிறகு, புளிய மிளார்களைச் சிறுவர்கள் வீடுகளுக்கு இழுத்துச் செல்வார்கள்.
  • அன்றைய காலத்தில், ஆடியில் விதைத்த படர்கொடிகள் பூத்துக் காய்க்கும் பருவத்தில் இருக்கும். அவற்றின்மீது சொக்கப்பனை மிளார்களையும், சாம்பலையும் போட்டால், நோய் வராது என்பது நம்பிக்கை. கையில் சுளுந்தோடு ஒவ்வொரு கோயிலாகச் சொக்கப்பனைக் கொளுத்த சென்ற காலம், எங்கள் இளமைக்காலம்.

ஓலைக்கொளுக்கட்டை

  • கார்த்திகை அன்று அவித்துப் படைக்கப்படும் ஓலைக்கொழுக்கட்டை எங்கள் பகுதியின் சிறப்பாகும். பனையின் குருத்தோலையைக் கொண்டுவந்து சிறுசிறு துண்டுகளாக நறுக்குவார்கள். ஒவ்வோரு நறுக்கையும் பிளந்து அதற்குள் சேர்த்துவைத்த மாவைவைத்து மூடி, பிரிந்துவிடாமல் இருக்க நூல் அல்லது பனைநாரால் கட்டி, ஆவியில் அவிப்பார்கள். ஏற்கனவே மாவில் சேர்ந்திருக்கும் சுக்கும், ஏலமும் நல்ல மணத்தையும், சுவையையும் தரும். மேலும் மணம் வேண்டி, பசுமையான சுக்குநாறிப்புல்லை (மஞ்சம் புல்) ஆவிவருவதற்காகக் கொதிக்கும் நீரில் போடுவதும் உண்டு.

கார்த்திகை விளக்கீடு – தமிழர் கொண்டாடிய பெருநாள்

  • இன்று, தமிழர் திருநாள் என்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள்கூட, எனக்குத் தெரிந்து, சங்க இலக்கியப் பாடல்களில் இருப்பதாகத்தெரியவில்லை. ஆனால், கார்த்திகை விளக்கு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன.
  • “இலையில் மலர்ந்த முகையில் இலவம்
  • கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
  • அஞ்சுடர் நெடுகொடி பொற்பத் தோன்றி’
  • (அகநானூறு, பாடல் 11; ஔவையார்)
  • கோடை வெம்மை மிகுந்துள்ள காட்டில் இலவம் மரங்களில் அரும்பியுள்ள மலர்கள், வரிசையாக ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்குகள்போல் உள்ளன.
  • “உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
  • மழைகால் நீங்கிய மாக விசும்பில்
  • குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந்
  • தறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்,
  • மறுகுவிளக்குறுத்து மாலைதூக்கிப்,
  • பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய,
  • விழவு டனயர வருகதி லம்ம”
  • (அகநானூறு - 141)
  • உழவுத்தொழில் முடிந்த காலம். ஏர்க்கலப்பைகள் வீட்டிற்குள் உறங்குகின்றன. குறுமுயலின் நிறம்போல நிலவு ஒளிர்கிறது. அறுமீன் எனப்படும் கார்த்திகை நாள்மீன் முழுநிலவைச்சேரும் நாள். அன்று, தமிழ் மக்கள் தெருக்களில் வரிசையாக விளக்கேற்றி, ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அந்தக் கார்த்திகைத் திருநாளன்று தன் தலைவன் தன்னுடன் இருக்கவேண்டுமென்று தலைவி ஆசையை வெளிப்படுத்துகிறாள். திருக்கார்த்தியல் அன்று வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவனின் வரவை எண்ணி தலைவி இவ்விதம் கூறுகிறாள்.
  • பெருவிழா விளக்கம்போலப் பலவுடன்
  • இலையில் மலர்ந்த இலவமொடு
  • நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே”
  • (அகநானூறு, பாடல் 185; பாலை பாடிய பெருங்கடுங்கோ);
  • வறட்சியிலும், மலை உச்சியில் இலவமரம், இலைகளே இல்லாமல் கார்த்திகை விளக்கம்போல பூத்துக்குலுங்குகின்றன. கார்த்திகைத் திருநாளை, ‘ பெருவிழா’ என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
  • “துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் ….
  • விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
  • (திருநெறித் தமிழ்முறை)
  • “குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன”
  • - (சிந்தாமணி)
  • திருக்கார்த்தியல் அன்று குன்றுதோறும் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன என்னும் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. அதன் எச்சம்தான் குன்றுகளின் உச்சிகளில் விளக்கு (தீபம்) ஏற்றுவதாகும்.
  • களவளி நாற்பது, பதினேழாவது பாடலில், கார்த்திகை விளக்கு ஓர் உவமையாகக் கையாளப்படுகிறது.
  • “ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
  • தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி
  • கார்த்திகைச் சாற்றிற் சுழிவிளக்கைப் போன்றவே
  • போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன்
  • ஆர்த்தம ரட்ட களத்து”
  • போர்க்களத்தில் போர்வீரர்கள் ஒருவரை ஒருவர் வாள், வேல்கொண்டு தாக்கியதில் அவர்களது வெட்டப்பட்ட உடல்களிலிருந்து கொட்டும் குருதியானது குழம்பாகி, சூரிய ஒளியில் மின்னுவது, கார்த்திகைத் திருநாள் அன்று ஏற்றப்படும் அகல் விளக்குகள் சுடர்விட்டு எரிந்து காற்றில் ஆடுவதுபோல இருக்கிறதாம்.

திருவண்ணாமலை தீபம்

  • திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம், பிரம்மா, திருமாலைவிட தான் உயர்ந்தவன் என்று காட்டுவதற்காக சிவபெருமான் நெருப்பாகப் பூமிக்கும் விண்ணுக்கும் உயர்ந்துநின்று, அடியும், முடியும் காணமுடியாது என்பதை உணர்த்துவதாக அண்ணாமலைப் புராணம் கூறுகிறது.
  • பொதுவாக, முருகன் கார்த்திகை அன்று பிறந்ததால், முருகனுக்கான விழா என்றும் சொல்வதுண்டு. கார்த்திகை விண்மீன் தொகுதியில் ஆறு மீன்கள் இருப்பதால், அந்த ஆறு மீன்களையும் முருகனுக்குப் பாலூட்டி வளர்த்தவர்கள் என்று பொருள்கொள்வதால், ‘கார்த்திகைச்செல்வன்’ என்னும் பெயரும் முருகனுக்கு வந்துசேர்ந்துவிட்டது. என்றாலும், இலக்கியங்களில் நாம் சுட்டிய அத்தனைப் பாடல்களிலும், கார்த்திகை விழாவை எந்த ஒரு கடவுளோடும் இணைத்துப்பேசவில்லை என்பதைக் கவனித்தால், மலை உச்சிகளிலும், தெருக்களிலும், வீட்டு முகப்புகளிலும் விளக்கேற்றும் கார்த்திகை விழா என்பது கடவுள், மதங்கள் தோன்றி நிலைபெறுவதற்கும் முன்பான முற்றிலும் பண்டைத்தமிழரால் ‘பெருவிழா’ என்று கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் மட்டுமே என்று உறுதியாகக் கூறலாம்.

கார்த்திகை மலர்

  • செங்காந்தள் மலர் தமிழ்நாட்டின் தேசிய மலர். ஆண்டிற்கு ஒருமுறை, கார்த்திகை மாதத்தில் பூக்கும் மலர் செங்காந்தள். அதனால் அது ‘கார்த்திகை மலரும்’ ஆகும். பெரிதும் மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும். சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் செங்காந்தள் மலர் இடம்பெற்றுள்ளது. சான்றாக சில பாடல்கள்.
  • “விரவுப்பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
  • அணங்குடை அருந்தலை பைவிரிப் பவைபோல்
  • காயா மென்சினை தோய நீடிப்
  • பல்துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள்
  • அணிமலர் அருந்தாது ஊதும் தும்பி
  • கைஆடு வட்டின் தோன்றும்
  • மைஆடு சென்னிய மலைகிழ வோனே”
  • (அகநானூறு , பாடல் 108)
  • மயிலைக் கண்டு அஞ்சும் பாம்பின் விரித்த படத்தைப்போல, காயா மரத்துக்கு அருகில் வளரும் செங்காந்தள் மலரில் மணமுள்ள தாதினை வண்டுகள் குடைந்துத் திரியும். அக்காட்சி, கையில் வைத்தாடும் சூதுக்காய்கள் போல் தோன்றும்.
  • “அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக்
  • குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள்
  • வரிஅணி சிறகின் வண்டுஉண மலரும்”
  • ( நற்றிணை, பாடல் 399)
  • அருவி ஆர்ப்பரிக்கும் பெரிய மலைச்சாரலில் குருதியை ஒப்பும் செங்காந்தள் மலர்கள், வண்டு தேன் உண்ணுவதற்காக மலர்ந்திருக்கின்றன.
  • “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்”
  • (குறுந்தொகை, பாடல் 167)
  • சோற்றில் தயிர்விட்டுப் பிசையும் பெண்ணின் கைவிரல் செங்காந்தள்போல் இருந்ததாக உவமை கூறப்படுகிறது.

கார்த்திகை மீனின் அறிவியல்

  • பூமியிலிருந்து 410 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விண்ணில் தெரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்களைக்கொண்ட திறந்த விண்மீன்தொகுதி, Pleiades என்று அழைக்கப்படுகிறது. விண்ணின் வடபுலத்தில், குளிர்காலத்தில் தோன்றும். இவ்விண்மீன் தொகுதி, ‘காளை’வடிவில் இருப்பதால், ஆங்கிலத்தில் Taurus என்றும், வடமொழியில் ‘இடபம்’ (ரிஷபம்) என்றும் நடைமுறையில் அழைக்கப்படுகின்றது. தமிழில் காளை எனலாம். இத்தொகுதியைச் சேர்ந்ததுதான் கார்த்திகை நாள்மீன்.
  • 27 மீன்களில் மூன்றாவதாக வருவது தொலைநோக்கியில் பார்த்தால் பெரிய விண்மீன் கூட்டத்தையே காணலாம் என்றாலும், வெறும் கண்களால் பார்த்தபோது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஏழு விண்மீன்கள் தெரிந்திருக்கின்றன. அதனால், ‘ஏழு சகோதரிகள்’ என்று அழைத்திருக்கின்றனர். ஆனால், பிற்காலத்தில், ஆறு மீன்களே தெரிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதை உண்டு. இந்தியாவில், இந்துப் புராணத்தில் ஆறு கார்த்திகைப்பெண்டிர் முருகனை வளர்த்தார்கள் என்று கதை சொல்லப்படுகிறது.

நன்றி: தினமணி (13 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்