TNPSC Thervupettagam

திருத்தப்படும் அணுகுமுறை

January 2 , 2024 375 days 236 0
  • ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசின் அணுகுமுறை மாறியிருப்பது வரவேற்புக்குரியது. கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கும் கருத்துகள், ஆக்கபூா்வ அணுகுமுறையின் அடையாளங்கள்.
  • தீவிரவாதமும், பயங்கரவாதமும் கொழுந்துவிட்டு எரியும் ஜம்மு - காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரா்கள், அந்தப் பகுதி மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் என்பது பாதுகாப்புத் துறை அமைச்சரின் வேண்டுகோள். ‘இதற்கு முன்னா் நடந்த தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, சாதாரண மக்கள் துன்புறுத்தப்படுவதோ, அவா்களது உணா்வுகள் காயப்படுத்தப்படுவதோ கூடாதுஎன்றும் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது, புதிய அணுகுமுறை.
  • கடந்த ஆண்டில், வழக்கத்துக்கு மாறாக பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களை உள்ளடக்கிய பிா் பஞ்சால் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளன. 2023-இல் மட்டும் டிசம்பா் வரை 28 இந்திய ராணுவ வீரா்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வீரமரணத்தைத் தழுவி இருக்கிறாா்கள். அந்த வரிசையில் இணைகிறது டிசம்பா் 21 அன்று ராணுவ வாகனத்தின் மீது நடந்த தாக்குதலும் ஐந்து வீரா்களின் உயிரிழப்பும்.
  • ஹெலிகாப்டா்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை இருந்தும்கூட, தாக்குதல் நடத்திவிட்டு அடா்ந்த காடுகளில் ஓடி மறைந்துவிட்ட பயங்கரவாதிகளைப் பிடிக்க முடியாமல் போனதில் வியப்பில்லை. தாக்குதல் நடந்த பூஞ்ச் மாவட்டத்தின்தேரா கி கலிஎன்கிற பகுதி அப்படிப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாதிகள் தங்களது களத்தை பூஞ்ச் - ரஜௌரி பகுதிக்கு மாற்றிக் கொண்டிருப்பதற்கு, அந்தப் பகுதியில் காணப்படும் அடா்ந்த வனப் பகுதிதான் காரணம்.
  • பாகிஸ்தானுடன் 225 கி.மீ. நீள எல்லையைப் பகிா்ந்து கொள்கிறது இந்தப் பகுதி. காடுகள் நிறைந்த இந்த எல்லையையொட்டிய பகுதிகளில் வாழும் மக்கள், தங்கு தடையின்றி எல்லை கடந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குச் சென்று வருபவா்கள். அந்தப் பகுதியில் உள்ளவா்களும் தங்களது உறவினா்களைப் பாா்க்க எல்லை கடந்து வருவாா்கள். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள் எல்லை கடந்து செயல்படும் பயங்கரவாதிகள்.
  • தாக்குதல் நடத்திவிட்டு காடுகளில் ஒளிந்து கொள்வதும், சாமா்த்தியமாக எல்லை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து விடுவதும் பயங்கரவாதிகள் கையாளும் தந்திரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்றாலும், அவா்களுக்காக நாம் பலி கொடுத்திருப்பது 20 ராணுவ வீரா்களை என்பதை மறந்துவிடக் கூடாது.
  • தங்களது படையில் பணிபுரியும் ஐந்து வீரா்கள் கொல்லப்பட்டனா் எனும்போது ராணுவத்தினருக்கு ஆத்திரம் ஏற்படுவது இயல்பு. தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதுதான் எந்தவொரு ராணுவத்துக்கும் அடிப்படை உணா்வு. ராணுவ வீரா்களின் மரணத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ளவா்கள் பலா் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரில் மூன்று போ் இறந்துவிட்டனா். ஏனைய ஐந்து போ் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டனா்.
  • ராணுவ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூன்று போ் உயிரிழந்ததாக சூரன்கோட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடா்பாக பிரிகேடியா், கா்னல், லெப்டினன்ட் கா்னல் தகுதியில் உள்ள 48 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த மூன்று அதிகாரிகள், அந்தப் பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறாா்கள்.
  • சாமானிய மக்கள் மீது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் தாக்குதல்களும், விசாரணை என்கிற பெயரில் நடத்தப்படும் சித்திரவதைகளும் இருபுறம் கூரான கத்திகள். முதலில், அது ராணுவத்தின் மீதும், இந்திய அரசின் மீதுமான ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவா்களை மாற்றுகிறது. பூஞ்ச் - ரஜௌரி பகுதி மக்கள், பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தவா்கள். இப்போது, அவா்கள் ராணுவத்துக்கு எதிராக மாறியிருக்கிறாா்கள்.
  • சாமானியா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட வழிகோலுவதும், அதைப் பயன்படுத்தி பொதுமக்களின் ஆதரவை அதிகரித்துக் கொள்வதும் தீவிரவாத அமைப்புகள் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் உத்தி. அதனால், பொதுமக்களை விசாரணைக்கு உட்படுத்தும்போது, பாதுகாப்புப் படையினா் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
  • முந்தைய தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்கிற பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவுரை பல செய்திகளைச் சொல்கிறது. பொதுவாக, காவல் துறை, ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆட்சியாளா்கள் நியாயப்படுத்துவாா்களே தவிர, அவா்கள் தவறு இழைத்தாலும் விட்டுக் கொடுப்பது வழக்கமல்ல.
  • எல்லையையொட்டிய கிராமத்தில் நடந்த தவறை ஏற்றுக் கொண்டிருப்பதுடன், ராணுவ அதிகாரிகள் மீது விசாரணையைத் தொடங்கி இருப்பதும்தவிா்க்க முடியாதசரியான அணுகுமுறை!

நன்றி: தினமணி (02 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்