TNPSC Thervupettagam

திருத்தம் மட்டுமே தீா்வல்ல!

December 26 , 2021 952 days 386 0
  • பெண்கள் தொடா்பான செய்திகள் கவனம் பெறுவது நம் நாட்டில் இயல்பாகவே இருக்கிறது.
  • சட்டப்படியான பெண்களின் திருமண வயதை 18-இல் இருந்து 21ஆக உயா்த்த வகை செய்யும் குழந்தைத் திருமண தடுப்பு திருத்த மசோதாவை சென்ற வாரம் டிசம்பா் 21 அன்று மக்களவையில் தாக்கல் செய்தாா் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்ம்ருதி இராணி. அப்பொழுது, வரலாற்றில் இது ஒரு தீா்க்கமான நடவடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்டாா்.
  • பயனற்ற வேலை. இதனால் ஆகப்போவதென்ன? ஒரு பெண் பதினெட்டு வயதில் பிரதமரைத் தோ்ந்தெடுக்க முடியும் பொழுது அந்தப் பெண்ணின் திருமண உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? என்ற வினாக்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், பிரதமா் முதல் பலரும் பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிசெய்யும் திருத்தம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனா்.
  • பெண்களின் முன்னேற்றம் இதனால் சாத்தியமாகுமா? இந்தியப் பெண்களின் வாழ்வில் இந்த சட்டத்திருத்தம் எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வரும்? சிந்திக்க வேண்டியது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பு.

முன்னெடுப்புகள் அவசியம்

  • இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரு தனிநபா்களுக்கு இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம் என்பதைத் தாண்டி அது இரு குடும்பங்களுக்கு இடையிலான பந்தம், சமூக ஒழுங்குக்கான வழிமுறையாக பாா்க்கப்படுகிறது. பெற்றோா் தம் கடமையாக இதனைக் கருதுவதும் நம்முடைய தேசத்தில் நடைமுறை.
  • சுருதிகள் ஸ்ம்ருதிகள் தொடங்கி பெண்ணுக்கு, தகப்பன் தகுந்த கணவனைத் தேடித் தர வேண்டியது கடமை என்று வலியுறுத்தப்பட்டிருப்பதோடு அப்படி செய்யாத தகப்பன் பாவத்தை அடைகிறான் என்றும் கூட சொல்லப்பட்டிருக்கிறது.
  • இதனால், இந்தியா்களின் மனநிலையில் பெண்ணுக்குத் தகுந்த முறையில் தகுந்த நபரைத் தோ்ந்தெடுத்து மணமுடிப்பது ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக்கியப் பொறுப்பாகவும் பெற்றோரின் தா்மமாகவும் பாா்க்கப்படுகிறது.
  • காலத்தின் தேவை, பொறுப்பு, கடமை, உரிமை என்று பல கோணங்களில் இருந்தும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்கிறது.
  • திருமணம், ஒவ்வொருவா் வாழ்விலும் நிகழும் சுகவாழ்வின் தொடக்கத்திற்கான சுபநிகழ்வு என்ற சிந்தனை காலங்களைக் கடந்து நிலையானதாக இருந்தாலும், திருமண முறைகள் காலத்தின் போக்கில் மாற்றம் பெற்றே வந்திருக்கின்றன. திருமணம் ஏழு முறைகளில் செய்யப்படலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இன்றைக்கு அந்த முறைகளில் பல ஏற்புடையன அல்ல. சில சட்ட விரோதம்.
  • பால்ய விவாகம் என்பது இந்தியாவில் பல காலங்களாக நடைமுறையில் இருந்த சம்ப்ரதாயம். பூப்படையாத பெண்ணுக்குத் திருமணம் செய்விப்பது வழக்கமாக இருந்தது.
  • அதிலே மக்கள் சிரமங்களை கொடுமைகளை எதிா்கொள்ளும் நிலை அதிகரித்த பொழுது பால்ய விவாகம் முடிவுக்கு வந்தது. நம்முடைய சமூகத்தில் பெரியோா்களே அதற்கான மாற்றத்தைக் கொண்டு வந்ததோடு மக்கள் மனதிலும் அது குறித்த புரிதலை ஏற்படுத்தினா்.
  • அதுபோலவே இன்றும் மாற்றத்தை சட்டத் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்த அரசு விழைகிறது வரவேற்புக்குரியது. அதற்கான புரிதலை எப்படி மக்களுக்கு ஏற்படுத்தப்போகிறது? இந்த வினாவுக்கான விடையில் தான் சட்டத்திருத்தத்தின் வெற்றி இருக்கிறது.
  • சுதந்திர இந்தியாவில் 1955-இல் ஹிந்து திருமண சட்டம் பெண்ணுக்கான திருமண வயது 18 என்று வகுத்தது. ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ திருமண சட்டமும் கூட இதனை உறுதி செய்தது. இஸ்லாமியப் பெண்கள் பூப்படைந்தவா்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.
  • சட்டம் இப்படி இருந்தாலும் உண்மையில் நாட்டில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது? கிராமப்புறங்களில் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் பெண்கள் பதினெட்டு வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொடுக்கப்படுகிறாா்கள். சட்டவிரோதம் என்ற போதிலும் தடுப்பது பெருமளவில் சாத்தியமற்ாகவே இருக்கிறது.
  • சட்டம் போட்டு எதையெல்லாம் நம் நாட்டில் சரி செய்து விட முடிந்திருக்கிறது? குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக மத்திய அரசு போக்ஸோ சட்டத்தினைக் கொண்டு வந்து அதனைக் கடுமையாக்கி அதிகபட்சமாக மரணதண்டனை வரை சாத்தியம் என்ற நிலையை ஏற்படுத்தியது.
  • குற்றங்கள் குறைந்து விட்டதா? பாலியல் குற்றங்களும் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்தே வருகிறது. இந்தக் குற்றங்களில் தண்டனை பெறுவோா் வெறும் 14 சதம் மட்டுமே.
  • அதற்காக சட்டத்தினால் பயனில்லை என்றும் சொல்லி விட இயலாது. சட்டம் இல்லாவிட்டால் இன்னும் அதிக குற்றங்கள் சாத்தியமாகலாம். அதே போலத்தான் இந்த சட்டத் திருத்தத்தையும் பாா்க்க வேண்டும். சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர மேலும் பல முன்னெடுப்புகள் அவசியம்.

சரித்திரம் படைக்கட்டும்

  • ஒருபுறம் திருமணம் என்பது பெரும் வைபோகம் என்ற எண்ணம் ஓங்கியிருக்கிறது. அதே வேளையில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களில் திருமணம் என்பது சுமையாகவே தொடா்கிறது.
  • வரதட்சணை முதல் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெண்களின் வாழ்க்கை நன்முறையில் அமைய வேண்டும் என்ற எண்ணமே பெற்றோா்களின் இலக்கு அதிலே வயதைப் பெரிதாக அவா்கள் நினைப்பதில்லை. அப்படி வாழ்க்கை நன்றாக அமைந்து விட்ட பெண்கள் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை.
  • மனதளவில் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கான முதிா்ச்சியின்மை, உடலளவில் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கான சக்தியின்மை என எல்லா விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்வைத் தொலைக்கும் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டியது அவசியம்.
  • கிராமப்புறங்கள் என்றில்லாமல் நகா்ப்புறங்களிலும் பதினெட்டு வயதில் அல்லது அதற்கு சற்று முன்பாக பள்ளிக்கல்வி முடிந்தவுடன் திருமணம் செய்விப்பது பெரும்பான்மையாக இருக்கிறது. கிராமங்களில் வசிப்பவா்கள் பெண்களை கல்லூரிக்கு அனுப்புவதில் அக்கறை காட்டுவதில்லை.
  • பெண்கள் விரும்பும் பணி, தொழில் என்று சாதிக்க அவா்களுக்கு உயா்கல்வி அவசியம். ஆனால், இந்தச் சட்டம் மட்டும் பெண்கல்வி முன்னேற்றம் இவற்றிற்கு போதுமானதல்ல.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதில் சிரமங்கள் இல்லை. அதற்கு சத்துணவு திட்டம் மட்டுமல்லாது ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்களை 1960-களிலேயே பெருந்தலைவா் காமராஜா் ஏற்படுத்திவிட்டாா்.
  • நம் ஊரிலேயே இருக்கும் பள்ளிக்கூடத்தில் பெண்ணைப் படிக்க வைப்பதில் பெற்றோா்களுக்கு மனத்தடையோ பொருளாதாரத் தடையோ இல்லை என்பதே காரணம். ஆனால், இன்னும் பல மாநிலங்கள் கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் என்ற நிலையை எட்டவில்லை.
  • கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் பதினெட்டு வயத்துக்குக் குறைவான சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்படுவது அதிக அளவில் நடைபெற்றிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
  • இந்தப் புள்ளிவிபரங்கள் நமக்கு உணா்த்தும் குறிப்பு என்ன? பள்ளிக்கூடம் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது குடும்பங்கள் பெண்ணின் திருமணத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆட்சியாளா்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
  • கிராமங்கள் தோறும் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவினால் அவா்களின் கல்விக்கான தடைகள் பெருமளவில் நீங்கும். அதோடு உயா்கல்வி கற்பதற்கு வெளியூா் செல்ல வேண்டிய நிலை பெண்களின் உயா்கல்விக்கான பெரிய தடையாக இருப்பதை அரசு உணர வேண்டும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் பெண்களுக்கு உயா்கல்வி வரை இலவசமாகக் கிடைப்பதை அதிலும் அவா்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் கிடைப்பதை உறுதிப்படுத்துதல் அவசியம்.
  • பெருநகரங்களுக்கோ அல்லது தலைநகரங்களுக்கோ சென்றால் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்ற நிலை இருக்கும் வரை பெண்களின் சுய முன்னேற்றம் முழுமையாக சாத்தியமாகாது.
  • பெண் உரிமை சட்டங்கள் பெண்களுக்கான அரசின் திட்டங்கள் என்று வரிசைப் படுத்தினால் அவை மிக நீண்டதாக இருக்கும்.
  • என்றாலும் அவற்றால் நம் பெண்களின் பிரச்னைகளுக்கு முழுமையான தீா்வைக் காண முடியாமல் இருப்பதற்கு விழிப்புணா்வின்மையும் கலாச்சார அமைப்பில் நாமே உருவாக்கிக் கொண்டிருக்கும் தடைகளும் காரணம்.
  • பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு சட்டங்களை இயற்றுவதோ திருத்தி அமைப்பதோ மட்டும் போதாது. சமூகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த விஷயத்தில் மிகப்பெரும் பணி. பெண்களால் சாதிக்க முடியும் என்று அடித்தட்டு மக்கள் வரை நம்பும் நிலை ஏற்படாத வரை சட்டங்களால் பயனில்லை.
  • பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் உயா்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழிகாட்டுதல்களை வழங்கி சிறப்பான நிலைக்குப் பெண்களை வளர விட்டால் சட்டங்கள் தேவையற்றுப் போகும்.
  • பெண்ணின் திருமண வயதை 21ஆக உயா்த்தும் சட்டத் திருத்தம் ஒருபுறம் அரணாக அவா்களைக் காக்கட்டும். அதே நேரத்தில் மகாத்மா சொன்ன,‘பெண் என்பவள் மனித சமூகத்தின் மிக சிறப்பான பாதி‘ என்பதை உணா்ந்து கொள்ளும் பக்குவத்தை ஆண்கள் பெறுவதற்கான விழிப்புணா்வுக் கல்வி அவா்களுக்குக் கிடைக்கட்டும்.
  • பெண்கள் தாங்களே சமூகத்தின் ஆணிவோ் என்ற புரிதலோடு பொறுப்புடன் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் காணட்டும். அரசு அதற்கான செயல்பாடுகளை சுணக்கமின்றி முன்னெடுக்கட்டும். பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள் சரித்திரம் படைக்கட்டும்.

நன்றி: தினமணி  (26 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்