- வாக்காளர்களில் 47.1 கோடிப் பெண்களைக் கொண்ட இந்தியாவுக்கு 18ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எந்தக் கட்சியும் புறக்கணித்து விடவே முடியாத வாக்காளர் சக்தியைப் பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஆனால், வழக்கம்போல் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15%ஐத் தாண்டாது என்றே தெரிகிறது. ஒருபக்கம், பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். எப்போது தேர்தல் அல்லாத காலங்களில் இந்தக்கேள்வி முக்கியத்துவம் பெறுகிறதோ, அப்போதுதான் இந்தக் கேள்விக்கான நியாயம் கிடைக்கும்.
முழுமையடையாத திட்டங்கள்:
- மனிதகுல வரலாற்றில் ஆண் தலைமையிலான அரசுகள் தோன்றிய பிறகுதங்கள் தலைமை, ஆளுமை தொடங்கி அடிப்படைமனித உரிமைகள் வரை பலவற்றைப் பெண்கள்இழந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்த நிலையை மாற்றுவதற்கான பல நடவடிக்கைகளை அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் மேற்கொண்டுவருகின்றன.
- ஐநா உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் ஒருபுறமும், இந்தியாவில் தோன்றி வளர்ந்த சமுதாய இயக்கங்கள் ஒருபுறமுமாகப் பெண்களுக்கான திட்டங்களை இந்திய அரசு மேற்கொள்ளக் காரணியாக அமைந்திருக்கின்றன.
- இந்தப் புற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆட்சியை அமைக்கும் கட்சியின் கொள்கை என்பது மிக முக்கியம். மத அடிப்படையிலான ஆட்சி நடக்கும் நாடுகளில், பெண்கள் உரிமைகள் மிகக் கடுமையாக ஒடுக்கப்படுவதைப் பெண்கள் உற்றுநோக்க வேண்டும்.
- இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் பாஜக ஆட்சியானது பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், மகளிர் பாதுகாப்பு, சம மதிப்பு ஆகியவற்றை அடைவதற்காக எடுத்த நடவடிக்கைகள் மிகவும் குறைவு. ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்’, ‘ஒன் ஸ்டாப் சென்டர்’, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 ஆகியவை பெண் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை அதிகரிப்பது மற்றும் பாலியல் வன்முறை யிலிருந்து பாதுகாப்பு ஆகிய நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவை.
- இவற்றில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் சிறிதளவுஉயர்ந்திருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை பலமடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது பிபிசிஅறிக்கை. ஆசிபாவை நாம் மறக்க முடியுமா? அதைவிட அந்த வன்முறையாளர்கள் கொண்டாடப்பட்ட விதம் அதிர்ச்சியானது அல்லவா? மல்யுத்த வீராங்கனைகளின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை களும் அவர்களது வேதனை மிகுந்த போராட்டமும் அலட்சியப்படுத்தப்பட்ட விதம் மறக்க முடியாத வடுவாகிவிட்டது. நிர்வாணமாக அழைத்துச் செல்லப் பட்ட மணிப்பூர் பெண்கள் அனுபவித்த அவமான உணர்வு நம் நெஞ்சங்கள் ஒவ்வொன்றிலும் உறைந்துகிடக்கிறது.
திட்டங்களும் பலன்களும்:
- தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம் (Skill India), ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்கள், தொழிற்சாலைகளிலும் பெருநிறுவனங்களிலும் பெண்கள் பங்களிப்பை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை. கார்ப்பரேட் போர்டுகளில் பெண்களைக் கண்டிப்பாக இயக்குநர்களாக நியமிக்க வேண்டும் என்கிற விதி காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்டது. உலக அளவில் ஒரு முன்னோடித் திட்டம் அது.
- எனினும், இச்சட்டங்கள் அமல்படுத்தப்படும் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாஜக அரசோ இச்சட்டங்களை அமல்படுத்தும் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுகிறது. அங்கு இந்த ஆண்களின் அமைப்பிலான வழக்கமான தொழில் வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.
- எனவே, இச்சட்டங்கள் பெண்களுக்கு ஆதரவான முகம் காட்டினால்கூட அவற்றால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அதன் விளைவுதான் சமுதாயத்தில் நிலவும் பாலின வேறுபாடு அட்டவணையில் (World Economic Forum’s Global Gender Gap Report 2023) உலக நாடுகளில் 127ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள்:
- 2018இல் கொண்டு வரப்பட்ட கடத்தல் தடுப்புச் சட்டம் தவிர, வேறு சட்டம் எதையும் பெண்களுக்காக பாஜக அரசு இயற்றவில்லை. பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துகிற நல்லதொரு திருத்தத்தை இந்த அரசு முன்மொழிந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் ஆட்சே பித்தவுடன், அதைக் காரணம் காட்டி அந்தத் திருத்தத்தையும் முடக்கிவிட்டது.
- அது மட்டுமல்லாமல், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் போகலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த நிலையில், அதையும் முடக்க ஒரு குழுவை அமைத்துவிட்டது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. எனினும், அதை எவ்விதத் தேவையுமின்றி தொகுதி மறுசீரமைப்போடு தொடர்புபடுத்தி 2029 தேர்தலிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது.
- 15 ஆண்டுகள் என்று பெண்களின் இடஒதுக்கீட்டுக்குக் காலவரையறையையும் விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், தாங்கள் நிறைவேற்றுகிற சட்டத்தின் மீதே அவர்களின் உள்ளார்ந்த இசைவின்மையை வெளிப்படுத்துகின்றன.
- உத்தராகண்ட் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள பொது சிவில் சட்டம், பூர்விகச் சொத்தில் பெண்குழந்தைகளுக்கு உள்ள சொத்தைக் கொடுப்பதையும் கொடுக்க மறுப்பதையும் தந்தையின் முடிவுக்கு விட்டுவிடுகிறது. இதன் மூலம் பெண்ணுக்கான சொத்துரிமை மறுக்கப்படுகிறது என்றே புரிந்துகொள்ளலாம்.
- மேலும், விரும்பிய இருவர் திருமணச் சடங்கின்றி இணைந்து வாழும் ‘லிவிங்டுகெதர்’ முறையை இச்சட்டமானது திருமண வரையறைகளுக்குள் கொண்டுவருகிறது. உறவுமுறைகளிலும் தனது மேலாதிக்கத்தைச் செலுத்த முற்படுகிறது (திருமணத்துக்குத் தடை செய்யப்படும் உறவுமுறைகள் பட்டியலை இது கொண்டிருக்கிறது). நாளை இச்சட்டம்இந்தியா எங்கும் நிறைவேற்றப்படும் என்று பாஜககூறுகிறது.
- இஸ்லாமிய தலாக் முறையைத் தடுப்பதாகக் கூறி, திருமணச் சட்டப் பிரிவில் கிரிமினல் சட்டதண்டனை முறையைக் கொண்டுவந்திருக்கிறது. இவையெல்லாம் நாளை சமுதாயத்தில் பெருங்குழப்பங்களை விளைவிக்கும்போது, பெண்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
பெண்களின் பிரதிநிதித்துவம்:
- நிதியமைச்சராக, குடியரசுத் தலைவராகப் பெண்கள் நியமிக்கப்படு கிறார்கள். ஆனால், தேர்தலில் நிறுத்தப்படும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையில் அரசியல் கட்சிகள், குறிப்பாக பாஜகவின் அணுகுமுறை திருப்தியளிக்கவில்லை. பெண் விடுதலைக்கான சிந்தனையோ, பார்வையோ, செயல் திட்டமோ முதன்மையான அரசியல் கட்சிகளிடம்கூட இல்லை.
- ஆண்கள் அமைப்புகளில், பெண்கள் பெறும் பிரதிநிதித்துவத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. அது கண்டிப்பாக வேண்டும். ஆனால், தொடக்க காலப் பெண்ணியவாதிகள் சொன்னதுபோல், நமது எஜமானர்களின் கருவிகளை நாம் எடுக்கும்போது அக்கருவிகள் அவர்களுக்கு எதிராக வேலை செய்யாது என்பதும், உணர வேண்டிய உண்மை. அதனால்தான் நிதியமைச்சராக ஒரு பெண் பதவிவகிக்கும் நாடு பாலின இடைவெளி அட்டவணையில் உலக நாடுகளில் 127ஆவது இடத்தை வகிக்கிறது.
- அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்துகிற கட்சிகள்கூட பெண்ணியப் பார்வை கொண்டவை என்று கருதிவிட முடியாது. ஆனால், வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ள பெருங்கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து காணப்படுவது மிகவும் வேதனைக்குரியது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை.
கோரிக்கைகள்:
- நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும். மகளிர் ஆணையங்கள் பெயரளவிலான ஆணையங்களாக இல்லாமல், முழுமையான சட்ட அதிகாரங்களோடு, கட்டமைக்கப் பட வேண்டும்.
- மகளிர் ஆணையங்களின் செயல் பாடுகள் நாட்டின் கடைக்கோடிப் பெண்ணும் அறிந்துகொள்ளும் அளவில் பரந்துபட்ட அளவிலும், தொடர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும். கருக்கலைப்பு உரிமை பெண்ணின் முழுமையான தனி உரிமையாக்கப்பட வேண்டும். பாலினப் பாகுபாடு தடைச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
- பெண்களுக்கான தனி நிதிநிலை அறிக்கை தேவை. தொழில் நிறுவனங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் பெருகிடப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண்கள் உரிய சுதந்திரத்துடனும் உரிமைகளுடன் வாழும் நாடுகளே உலகுக்கு வழிகாட்டும் என்பதை அரசியலர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 03 – 2024)