தமிழ்நாட்டில் பழம் பெருமையுடன் விளங்கும் திருமடங்கள் பல உள்ளன. சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சமணம் எனப் பல்வேறு சமயங்களைச் சார்ந்துள்ள அவற்றுள், குடைவரைக் கோயில்களைத் தங்கள் ஆளுகையின் கீழ்க் கொண்டுள்ள திருமடமாய்த் திகழ்வது திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடம்தான். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இலங்கும் இத்திருமடத்தின் கீழ் குன்றக்குடியில் மூன்றும் கோளக்குடியில் ஒன்றும் பிரான்மலையில் ஒன்றும் அரளிப்பட்டியில் ஒன்றுமாய் ஆறு குடைவரைகள் உள்ளன. இவை ஆறுமே தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் தனிச் சிறப்புடன் பொலிபவை.
குடைவரை: மலையிலோ, குன்றிலோ, பாறையிலோ முன்னிருந்து பின்னாகக் குடைந்து உருவாக்கப்படும் கோயில்களே குடைவரைகள். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான குடைவரைகள் பாறை அல்லது சிறு குன்றுகளின் கீழ்ப்பகுதியில் அமைய, சிலவே பெரிய குன்றின் அல்லது மலைச்சரிவின் இடைப்பகுதியில் உள்ளன.
குன்றக்குடிக் குடைவரைகள்
குன்றக்குடித் திருமடத்தின் கீழுள்ள ஆறு குடைவரைகளில் குன்றக்குடியிலுள்ள மூன்றும் அங்குள்ள குன்றின் கீழ்ப்பகுதியில் அடுத்தடுத்துக் குடையப்பட்டுள்ளன. குடைவுகளுக்கு இடைப்பட்ட பாறைச் சரிவுகளில் லிங்கத் திருமேனி, பிள்ளையார். மகுடமற்ற தலையுடன் விளங்கும் இப்பிள்ளையார் தனித்தன்மையர். மூன்று குடைவரைகளிலுமே கருவறையில் தாய்ப்பாறையில் உருவான லிங்கத் திருமேனி.
முதலிரு குடைவரைகள்
குடைவரைக் காலச் சிற்பங்கள் ஏதுமற்ற முதல் குடைவரையில் லிங்கத்தின் கோமுகத்தைக் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள பூதம் தலையால் தாங்குகிறது. மசிலீச்சுரம் என்று கல்வெட்டு குறிக்கும் இரண்டாம் குடைவரை, முகப்பின் பக்கச்சுவர்களில் சிவபெருமானின் கருவிகளான மழுவையும் முத்தலை ஈட்டியையும் அடையாளப்படுத்துமாறு, அவற்றை மகுடத்திலும் தோள்களின் பின்னிருக்குமாறும் கொண்ட காவலர் இருவர் சிற்பங்களையும் மேற்குச்சுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவும் கருடனும் தோழமையுடன் நிற்கும் சிற்பக் காட்சியையும் கொண்டுள்ளது. கருடன் மனிதவடிவில் காட்டப்பட்டுள்ளார். தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இது போல் மழுவடியாராகவும் சூலத்தேவராகவும் காவலர்களைக் காண்பது அரிதானது.
மூன்றாம் குடைவரை
மூன்றாம் குடைவரையின் முப்பக்கச் சுவர்களும் பேருருவச் சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது இரண்டு கால்களையும் குறுக்கீடு செய்து எட்டுத் திருக்கைகளுடன் சிவபெருமான் ஆடும் அர்த்தஸ்வஸ்திகக் கரணம். செவல்பட்டிக் குடைவரையிலும் இக்கரணக் காட்சி இடம்பெற்றிருந்தாலும் இங்கு இசைக் கலைஞர்களும் உடனிருப்பது கூடுதல் சிறப்பு.
கோளக்குடிக் குடைவரை
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோளக்குடிக் குடைவரை அவ்வூர்க் குன்றின் நடுப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில் மலையின் அடிவாரத்திலும் இடைப் பகுதியிலும் மலைமேலும் எனப் பல கற்றளிகள் பெற்றுப் பெருவளாகமாக மாறியுள்ள கோளக்குடிக் குடைவரையின் மண்டபச் சுவர்களில் இருபுறத்தும் மலரேந்திய முனிவர்களின் சிற்பங்கள். அகத்தியர், புலத்தியர் என்று கோயிலாரால் அழைக்கப்படும் இத்தகு அருளாளர் சிற்பங்களைப் புதுக்கோட்டை மாவட்டத் தேவர்மலைக் குடைவரையிலும் காணமுடிகிறது. கோளக்குடியின் சிறப்புகளாகக் கருவறை வாயில் மேலுள்ள மகரதோரணத்தையும் குன்றின் ஒருபகுதியில் வெட்டப்பட்டுள்ள எழுவர்அன்னையர் சிற்பத் தொகுதியையும் சுட்டலாம்.
எழுவர் அன்னையர்
தமிழ்நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கிடைக்கும் குடைவரைக் கால எழுவர் அன்னையர் தொகுதிகளில், இங்கு மட்டுமே அன்னையருள் ஒருவரான சாமுண்டி, யமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு, அவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர், அழகில் சிறந்தவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகள் கீழிறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருட, கொண்டையின் முகப்பில் மண்டையோடு. மூன்று தலைகளைச் சுற்றியும் பெரிய ருத்திராக்கங்களாலான தலைமாலை அணிந்து, வலக்கையில் சுரைக்குடுவையுடன் இங்குள்ள நான்முகியின் சிற்பமும் தனித்தன்மையதே. குன்றக்குடி போலவே கோளக்குடியிலும் தாய்ப்பாறைப் பிள்ளையார் மலையின் தென்சரிவில் செதுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை வளாகம் கோளக்குடிதான்.
பிரான்மலைக் குடைவரை
வள்ளல் பாரியின் பறம்புமலையாக அறியப்படும் பிரான்மலையிலுள்ள திருக்கொடுங்குன்றநாதர் கோயில் வளாகத்தின் அளவில் சிறிய குடைவரை, அதன் மண்டப வாயிற்கோட்டங்களில் காவற்பெண்டுகளைக் கொண்டுள்ளது. திருமடத்துக் குடைவரைகள் ஆறனுள் பிரான்மலையில் மட்டுமே தாய்ப்பாறைச் செதுக்கலாகப் பிள்ளையார் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் சிவபெருமானும் உமையன்னையும் இணையாக அருகருகே அமர்ந்துள்ள அழகுக்கோலம் கண்களை நிறைப்பது.
தாய்ப்பாறையில் உருவானவையா, சுதைவடிவங்களா என்றறிய முடியாதவாறு அழகூட்டல்கள் பெற்றுள்ள இவ்விரு இறைத் திருமேனிகளும் கைத்திறன் வல்ல பாண்டிநாட்டுக் கவின்கலைஞர்களின் படைப்புகளாகும். இது ஒத்த இணைக்கோலம் சிவகங்கை மாவட்டத் திருமலைக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெற்றிருப்பினும் பிரான்மலை இணையரின் அழகு சொற்களை மீறிய சுகம்.
அரளிப்பட்டிக் குடைவரை
அரளிப்பட்டி மஞ்சுவிரட்டுக்குப் பெயர் பெற்றிருக்குமாறே, அரவங்கிரிக் குன்றின் கீழ்ப்பகுதியிலுள்ள எளிய குடைவரைக்காகவும் அறியப்பட்ட ஊராகும். குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ளலிங்கத்திருமேனி தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாத ‘பிள்ளையார் லிங்கமாக’ ஒன்றுக்குள் ஒன்றாய் லிங்கபாணத்தில் பிள்ளையார் செதுக்கலைப் பெற்றுள்ளது.
உற்று நோக்குவாருக்கே வடிவம் புலப்படுமாறு, தந்தைக்குள் தனையனைப் பொருத்தமாய்ப் பொளித்திருக்கிறார்கள். இயற்கை எழில் நிரம்பிய சூழலில் அமைந்திருக்கும் இக்குடைவரையின் தாய்ப்பாறை லிங்கம் இத்திருமடக் குடைவரைகளிலேயே அளவில் சிறியதாகும்.
திருவண்ணாமலை ஆதீனமான குன்றக்குடித் திருமடத்தின் ஆளுகையிலுள்ள ஆறு குடைவரைகளும் அங்குள்ள பல்வேறு தாய்ப்பாறைச் செதுக்கல்களும் பொதுக் காலம் எட்டாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. இவையனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் தனித்துக் குறிக்குமளவு சிறப்புப் பெற்றுள்ளமை இவற்றை உருவாக்கிய கைகளின் வளமையையும் பின்னிருந்த உள்ளங்களின் செழுமையையும் காலம் உள்ளளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். இக்குடைவரைகளில், பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளோ பாண்டிநாட்டு வரலாற்றின் சுவையான பக்கங்களைக் கருத்தோடு தேடுவாருக்குக் கனிவோடு வழங்கி மகிழ வல்லன.