TNPSC Thervupettagam

திருமணத்தில் அவசியமா ஆடம்பரம்?

August 5 , 2024 163 days 151 0
  • இந்தியாவில் ஆடம்பரத் திருமணங்​களின் பின்னணியில் எத்தகைய சிந்தனைகளும் நம்பிக்​கைகளும் இயங்க முடியும் என்பதை ஆர்ப்​பாட்டமாக வெளிப்​படுத்தி​யிருக்​கிறது, முகேஷ் அம்பானி இல்லத் திருமணம். ‘இந்தியாவில் ஒரு கோடி ரூபாய் சொத்து கொண்ட ஒரு குடும்பம், அதில் 15 சதவீதத்தைத் திருமணத்துக்​காகச் செலவிடு​கிறது.
  • அம்பானி குடும்பமோ தனது சொத்தில் வெறும் 5 சதவீதத்​தைத்தான் செலவழித்​துள்ளது’ எனச் சிலர் சமூக வலைதளங்​களில் கூறினர். இந்தத் திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவிடப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.
  • ஒரு வியாபாரிக்கான அடிப்படை ஒழுங்கு அம்பானி குடும்​பத்​தா​ரிடம் இருக்​கிறது. எத்தனை மாதங்கள் திருமணக் கொண்டாட்​டங்கள் நீண்டாலும், அனைத்தும் முடிந்து தொழிலில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தும் வாழ்க்​கை முறைக்கு அவர்கள் திரும்​பிவிடு​வார்கள்.
  • இந்த ஒழுங்கோ, போதுமான பணமோ இல்லாதவர்​களும் இந்தத் திருமண முறையைத் தங்கள் அளவுக்குப் பிரதி​யெடுப்​ப​தற்கான சாத்தியம் இருப்​ப​துதான் இதைப் பேசுபொருள் ஆக்கு​கிறது.

கல்வியை விஞ்சும் திருமணம்:

  • இந்தியாவில் திருமணங்களை மையமாகக் கொண்டு இயங்கும் சந்தையின் மதிப்பு ஏறக்குறைய 10.7 லட்சம் கோடி ரூபாய். ஒருவர் மழலையர் கல்வி​யி​லிருந்து கல்லூரிப் படிப்பு வரைக்கும் செலவு செய்வதைவிட, இரண்டு மடங்குத் தொகை அவரது திருமணத்துக்காக மட்டும் செலவழிக்​கப்​படு​கிறது.
  • பணக்கார இந்தி​யர்​களில் 10 சதவீதம் பேர், வெளிநாடுகளில் தங்கள் திருமணத்தை நடத்த விரும்​பு​கின்​றனர். வேறொரு நகரத்தில் அல்லது மாநிலத்தில் திருமணம் செய்து​கொள்ளும் போக்கும் அதிகரித்து​வரு​கிறது. இதெல்லாம் தனிப்பட்ட விருப்பம் அல்லது உரிமை சார்ந்தது. ஆனால், இந்தப் போக்கு சமூகத்தின் ஒவ்வொரு அடுக்​காகப் பயணித்து, இறுதியில் ஏழை எளிய குடும்​பங்​களையும் பீடித்துக்​கொள்​கிறது.
  • மத்திய உள்துறை அமைச்​சகத்தின் தரவுகளின்படி, 2017-2021இல் இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 மரணங்கள் என்கிற விகிதத்தில் வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்​துள்ளன. கரோனா ஊரடங்குக் காலத்​தில், மாத வருமானம் வருவது ஏழைக் குடும்​பங்கள் பலவற்றில் தடைபட்​ட​தால், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வரதட்​சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கத்​தை விட அதிகமான புகார்கள் பதிவு செய்யப்​பட்டு​இருந்தன. இந்த அவலம், ஆடம்பரத் திருமணங்​களுடன் ஒருவகையில் தொடர்​புடையது.

முந்தைய நிகழ்வுகள்:

  • 1995இல் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் தத்தெடுக்​கப்​பட்​டிருந்த வி.என்​.சுதாகரனின் திருமணம் ஆடம்பரமாக நடத்தப்​பட்டது கடும் விமர்​சனங்களை எழுப்​பியது. பிற்காலத்தில் ஜெயலலிதா சொத்துக்கு​விப்பு வழக்கில் சிறை செல்வதற்கு இத்திருமணம் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
  • இந்த ஆடம்பரத் திருமணம், தான் செய்த மிகப் பெரிய தவறு என அவரே ஒரு பேட்டியில் ஒப்புக்​கொண்டார். பண மதிப்​பிழப்பு நடவடிக்​கையின்போது ரொக்கப் பணம் இன்றி பலர் திணறிய நிலையில், பெங்களூரு பேலஸ் திடலில் நடந்த கலி ஜனார்த்தன ரெட்டியின் மகளது திருமணம், நாட்டையே அதிரவைத்தது.
  • 2008இல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்​த​போது, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன். பிற்காலத்தில் பல்லாரி மாவட்​டத்தில் சட்டவிரோத இரும்புச் சுரங்கச் செயல்​பாடுகளுக்​காகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் அவர் கைது செய்யப்​பட்​டார். பிணையில் வெளியே வந்த ஜனார்த்தன், இந்த ஆடம்பரத் திருமணம் மூலம் அரசியலில் தனது செல்வாக்கை மீட்டெடுக்க முயன்​றதாகப் பேசப்​பட்டது.

சட்ட நோக்கிலான முயற்சிகள்:

  • சட்டங்கள் மூலம் ஆடம்பரத் திருமணங்​களைத் தடைசெய்வது அடிப்படை உரிமை மீறல் என்கிற புரிதல் அரசு நிர்வாகம், ஆட்சி​யாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. எனினும் சட்டம் வேண்டும் என்கிற குரல்கள் எழாமல் இல்லை. 1966இல் முன்னெடுக்​கப்பட்ட அசாம் விருந்​தினர் கட்டுப்​பாட்டு ஆணை, சிறிய விழாக்​களில் 25 பேர்; திருமணம், இறுதி ஊர்வலம் போன்ற பெரிய விழாக்​களில் 100 பேர் மட்டுமே கலந்து​கொள்ள வலியுறுத்​தியது.
  • 2004இல் ஜம்மு - காஷ்மீர் அரசாங்கம், திருமண விழாக்​களில் சைவ விருந்​துகளில் 250 பேரும் அசைவ விருந்​துகளில் 200 பேரும் மட்டுமே அனுமதிக்​கப்​படலாம் என உத்தர​விட்டது. எனினும், இது உயர் நீதிமன்​றத்தால் தடை செய்யப்​பட்டது. 2017இல் மூன்று தனிநபர் மசோதாக்கள் ஆடம்பரத் திருமணங்​களைத் தடுக்க நாடாளு​மன்​றத்தில் அறிமுகப்​படுத்​தப்​பட்டன.
  • பிஹாரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், திருமண மசோதா (கட்டாயப் பதிவு - ஆடம்பரத்துக்குத் தடை) என்பதை முன்வைத்​தார். ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவு செய்து திருமணம் செய்வோர், ஏழைப் பெண்களின் திருமண நிதிக்காக 10 சதவீதம் செலுத்த வேண்டும் என்பது அதன் முக்கியமான அம்சம். பஞ்சாப் காங்கிரஸ் எம்பி ஜஸ்பிர் சிங் கில் முன்வைத்த மசோதா, ஊர்வலத்தில் 50 பேர் வரையிலும் விருந்தில் அதிகபட்சம் 10 உணவு வகை வரையிலும் மட்டுமே அனுமதிக்​கப்​படலாம் என்றது.
  • ‘பலர் ஆடம்பரத் திருமணம் நடத்தி, நிதிச் சுமைக்கு ஆளாகிறார்கள். திருமணத்தில் ஆடம்பரத்தைத் தவிர்ப்பது, பெண் பிள்ளைகள் சுமையாகப் பார்க்​கப்​படு​வதைத் தவிர்க்​கும். சிசுக்​கொலைக் குற்றங்​களும் குறையும்’ என அவர் கூறினார். அப்போதைய பாஜக எம்பி கோபால் சின்னையா ஷெட்டி​யும், இதே நோக்கத்​துடன் ஒரு மசோதாவை முன்வைத்​தார். கேரள மகளிர் ஆணையமும் ஆடம்பரத் திருமணங்​களைத் தடைசெய்யும் ஒரு திட்டத்தை முன்வைத்தது. எனினும் இவை எதுவும் சட்டமாக​வில்லை.

தீர்வு:

  • நல்ல முன்னுதா​ரணங்​களும் உரையாடலுமே தீர்வைத் தரும் எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்​றனர். பல்வேறு துறைப் பிரபலங்கள் இதை முன்னெடுக்​கலாம். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் மகளும் தற்போதைய எம்பியும் ஆன சுப்ரியா சுலேவின் திருமணம், 1991 மார்ச்சில் சரத் பவாரின் அன்றைய தொகுதியான பாராமதியில் நடந்தது. ராஜிவ் காந்தி போன்ற தலைவர்​களிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து​கொண்ட வகையில் அது பரபரப்​பாகப் பேசப்​பட்டது.
  • சுப்ரியா சுலே 2024 எம்பி தேர்தலை​யொட்டி அதே பாராமதியில் பேசும்​போது, “பொது​வாழ்க்​கையில் ஈடுபடுவோர் மற்றவர்​களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களை மக்கள் பின்பற்று​வார்கள். நான் இயல்புக்கு மீறிய பொருள்​செலவில் நடக்கும் திருமணங்​களுக்கு எதிரானவள் அல்ல.
  • அத்தகைய திருமணங்​களால் பலதரப்பட்ட தொழிலா​ளர்​களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்​கிறது. எனினும் அது கட்டாயம் ஆகிவிடக் கூடாது. என் திருமணத்தில் பட்டாசுகள் வெடிக்க​வில்லை; பாண்ட் வாத்தியக் கச்சேரி இல்லை; மலர் அலங்காரங்கள் இல்லை. எனது திருமணத்துக்கு வந்தவர்​களுக்கு ஒரே ஒரு பேடா (இனிப்பு வகை) மட்டும் வழங்கப்​பட்டது. நான் எனது மகள் திருமணத்தை எளிமையாகவே நடத்து​வேன்” என்று பேசினார்.
  • மறைந்த கன்னடக் கவிஞர் குவெம்பு, தன் மகனின் திருமணத்தை எளிமையாக நடத்த விரும்​புவ​தாகவும் நண்பர்கள் தங்களுக்கு வசதிப்பட்ட நாளில் வந்து மணமக்களை ஆசிர்​வதிக்​கலாம் எனவும் அவர்களுக்குக் கடிதம் எழுதி​யிருந்​தார். திருமணத்​தின்போது வாசிக்​கப்பட ஒரு வாழ்த்​தையும் அவரே எழுதினார். அந்த வாழ்த்து, பிற்காலத்தில் ‘மந்திர மாங்கல்யா’ எனப்பட்டது.
  • 1966இல் நடைபெற்ற இத்திரு​மணம், கர்நாடகத்தில் பல இளைஞர்களை ஈர்த்தது. இதில் வட மொழி மந்திரங்​களுக்கும் ஆடம்பரத்துக்கும் இடமிருக்​காது. 200 பேருக்கு மேல் அனுமதி​யில்லை. மூத்தவர் ஒருவர், குவெம்​புவின் வாழ்த்தை வாசித்து நம்பிக்கைப் பிரமாணம் செய்து​வைப்​பார். சில தம்பதி​யினர் திருமணம் முடிந்​ததும், தற்போது நினைவிடமாக உள்ள குப்பலி என்கிற ஊரில் உள்ள குவெம்​புவின் வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்​துவர்.
  • தமிழகத்தில் சுய மரியாதைத் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், தமிழ்​வழித் திருமணங்கள் போன்றவை ஒரு குறுகிய வட்டத்​திலேனும் நிகழ்ந்து​கொண்டுதான் உள்ளன. சடங்கு சம்பிரதாயங்​களுடன் கூடிய வழக்கமான திருமணங்​களையும் ஆடம்பரமின்றி நடத்த வழிகாட்​டுவது தமிழக அரசியல் தலைவர்​களால் சாத்தி​ய​மாகிற பணிதான்.
  • கரோனா தொற்றுப் பரவலின்போது ஒரு திருமணத்தில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து​கொள்​ளலாம் என அரசு அறிவித்​திருந்தது. வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்​கப்​பட்​டதையே பெரும் சலுகையாக மக்கள் கருதி​யிருந்த சூழலில், அரசு விதித்த திருமணக் கட்டுப்​பாடுகளை அவர்கள் அப்படியே ஏற்றுக்​கொண்டனர்.
  • நடை சாத்​தப்​பட்ட கோ​யில் வாசலில், வீட்டு மொட்​டைமாடிகளில், முற்​றங்​களில்கூட திரு​மணங்கள்​ நடை​பெற்றன. திரு​மணத்துக்கான சேமிப்​பில் 75 சதவீதம் மிச்​சப்​பட்​டதாக அப்போது சிலர் கூறினர். திரு​மணங்​களில் இன்றைய தேவை சிக்​க​னமல்ல; மிகையான ஆடம்​பரத்​தைத்​ த​விர்​ப்​ப​தே.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்