TNPSC Thervupettagam

திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை

November 9 , 2023 429 days 297 0
  • திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரியா சக்ரவர்த்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த வகையில்,தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
  • அதே நேரம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் அனைத்து வகையான துன்புறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருப்பதற்கு நீதிமன்றத்தைப் பாராட்ட வேண்டும். ஆனால், தீர்ப்பில் உள்ள பிழை மிகவும் அடிப்படையானதும் மிக விரைவாகச் சரிசெய்யப்பட வேண்டியதும் ஆகும்.

வழக்கின் பின்னணி

  • 2009இல் நாஸ் ஃபவுண்டேஷன் (Naz foundation) வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்தது. 2013இல் சுரேஷ் குமார் கெளஷல் வழக்கில் பிரிவு 377 ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இறுதியாக, 2018இல் நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில் நாஸ் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உறுதிப் படுத்தியது.
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377, எதிர்பாலினத்தவர் அல்லாத இணையர்களுக்கு இடையிலான பாலியல் உறவை 10 ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக்கியது. இதன் விளைவாகப் பால் புதுமை சமூகத்தினர் (LGBTQI) குடும்பத்தினரிடமிருந்தும் காவல் துறையிடமிருந்தும் மிரட்டல், சித்ரவதை, வன்முறை, துன்புறுத்தல் ஆகியவற்றை எதிர்கொண்டனர்.
  • 1997இலிருந்து லாயர்ஸ் கலெக்டிவ் (Lawyers Collective) வழக்கறிஞர் அமைப்பிடம் சட்ட உதவி கோரிக்கை விடுத்து வந்தவர்களிடம் கேட்ட கதைகள் இத்தகையவைதான். எனவேதான் பிரிவு 377க்கு எதிராக வழக்குத் தொடர 2001இல் நாங்கள் முடிவுசெய்தோம்.. நாஸ், நவ்தேஜ் ஜோஹர் ஆகிய இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளும் பிரிவு 377ஐ ரத்து செய்தன. 18 வயதை நிறைவுசெய்த, எதிர்பாலினத்தவர் அல்லாத இணையர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் அந்தரங்க வெளிகளில் உடல்ரீதியான உறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என்பதை இந்தத் தீர்ப்புகள் உறுதிசெய்தன.
  • இந்நிலையில், நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்புக்கு முன்பாகவேதேசிய சட்ட சேவைகள் ஆணைய (NALSA) வழக்கில்மனிதர்களுக்கு அவர்களின் பாலினத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.ஒருவர் ஆணாகப் பிறந்திருக்கலாம். ஆனால் அவர் தன்னைப்பெண்ணாகவோ திருநங்கையாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினால், அதற்கு அவருக்கு உரிமை உண்டு.
  • இதன் தொடர்ச்சியாக, திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு)சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம், ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கான சிகிச்சைக்கு அனுமதி அளித்தது. அத்தோடு, அரசு அல்லது தனியாருக்குச் சொந்தமான வெவ்வேறு நிறுவனங்கள், வெளிகளில் திருநர்கள் பாகுபாட்டுக்கு ஆளாவதற்கு எதிரான பாதுகாப்பையும் இது வழங்கியது.

களங்கத்துக்கு உள்ளாக்கப்படுதல்

  • நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளின் வழியாக இந்தியாவில் ஒவ்வொருவரும் தனது சுயசார்பு, கண்ணியம், அந்தரங்கம், தான் விரும்பும் இணையருடன் திருமணம் செய்து கொண்டோ அல்லாமலோ சேர்ந்து வாழ்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.
  • ஒரு நபர் எந்தப் பாலினத்தையும் எந்தப் பாலியல் ஈர்ப்பையும் உடைய நபருடன் வேண்டுமானாலும் அந்தரங்க உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது நவ்தேஜ் ஜோஹர் தீர்ப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, உடல்ரீதியான உறவு வைத்திருக்கும் இணையர்கள், திருமணம்உள்ளிட்ட நீண்டகால உறவுநிலைகளை உருவாக்கிக் கொள்ள விரும்புவார்கள் என்பது வெளிப்படை.
  • வேறெதையும்விட எந்த ஒரு - சேர்ந்துவாழும் உறவுக்கும் சமூகத்தின் நிந்தனையிலிருந்து காப்பாற்றும் புனிதத்தன்மையைத் தருவது திருமணம்தான். திருமணம் அல்லாத உறவு என்பது திருமண உறவுக்கு இணையான அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதில்லை. இந்த அங்கீகாரம் இல்லாமல், பால் புதுமை இணையர்கள் களங்கத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விளைவாக, பால் புதுமை இணையர்கள் திருமண உரிமைக்காக வலுவான கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கினர்.
  • டெல்லி, கேரள உயர் நீதிமன்றங்களில் இதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் சுப்ரியா சக்ரவர்த்தி வழக்கில் எதிர்பாலினத்தவர் அல்லாத இணையர்களின் திருமணத்துக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான உரிமை குறித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்ளப் பட்டது.

மனித உரிமைப் பிரகடனம்

  • சுப்ரியா சக்ரவர்த்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையான உள்ளீடான முடிவானது, இந்தியாவில் திருமணம் செய்துகொள்வது அடிப்படை உரிமை அல்ல என்பதே. இந்த முடிவுக்கு வந்த நீதிமன்றம், உலகின் அனைத்து மனித உரிமைகளுக்கும் அடிப்படையான ஆவணமாகக் கருதப்படும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் (Universal Declaration of Human Rights) இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்பதைக் கவனிக்க மறந்துவிட்டது.
  • பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவில் நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்கள் அனைத்தும் அந்தப் பிரகடனத்துடன் ஒத்துப்போவதாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்திய நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கும் பிறசாசனங்களுக்கும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்,பிற சர்வதேச உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போகும் வகையிலான விளக்கத்தை அளித்துள்ளன.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருமணம் செய்துகொள் வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை என்று இந்தத் தீர்ப்பின் ஆதரவாளர்கள் வாதிடக் கூடும். ஆனால், இந்திய நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளுக்குத் தாராளவாத நோக்கிலும், விரிந்த பொருளிலும் விளக்கம் கொடுத்துப் புதிய உள்ளார்ந்த உரிமைகளை வழங்கியுள்ளன. அதற்கு நமது அரசமைப்புச் சட்டவியல் இடம் கொடுக்கிறது.
  • அரசமைப்பு உரிமைகளை விளக்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் ஷரத்துகளைப் பயன்படுத்தியுள்ளது. அந்த வகையில் கைகளுக்கு விலங்கிடுதலும் சித்ரவதைக்கு உள்ளாக்குதலும் அரசமைப்புக் கூறு 21க்கு எதிரானவை என்று தீர்ப்பளித்த பிரேம் சங்கர் சுக்லா வழக்கில், உச்ச நீதிமன்றம் மனிதஉரிமைப் பிரகடனத்தின் கூறு 5ஐ மேற்கோள் காண்பித்தது.
  • “தொடர்புடைய சாசனங்கள், அரசமைப்புச் சட்டரீதியான விவகாரங்களை விவாதிக்கும்போது, அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் கூறு 5 இல் கூறப்பட்டுள்ள மையமான கொள்கையை இந்த நீதிமன்றமும் வழக்கறிஞர்களும் மறந்துவிடக் கூடாது” என்றது.
  • ஃபிரான்சிஸ் கொரேலீ முல்லின் வழக்கின் தீர்ப்பில் இதை மீண்டும் வலியுறுத்தியது. மேனகா காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் கூறு 10ஐ அடிப்படையாகக் கொண்டு, நிர்வாகச் செயல்முறையில் இயற்கை நீதியின் கோட்பாடுகளை இணைத்தது.
  • எனவே, அரசமைப்புச் சட்டக் கூறுகள் 19, 21 ஆகியவற் றில் திருமணம் செய்துகொள்வதற்கான உரிமை என்னும்கோட்பாட்டை இணைப்பது நியாயமானதே. அதுவும் சுப்ரியாசக்ரவர்த்தி வழக்கின் தீர்ப்பிலேயே நெருக்கமான உறவு வைத்துக்கொள்வதற்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டு விட்டது, இதற்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.
  • திருமணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டுச் சட்டவியலைப் பயன்படுத்த முடியாது என்று சுப்ரியா சக்ரவர்த்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சொல்வது ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், அந்தத் தீர்ப்பிலேயே அமெரிக்கச் சட்டவியலிலிருந்து கடன்பெற்றுத்தான் நெருக்கமான உறவு என்னும் கோட்பாட்டை நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருநர்களின் திருமண உரிமை

  • ஒரு திருநம்பி ஒரு பெண்ணையும், ஒரு திருநங்கை ஒரு ஆணையும் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. இது சரியானதே. ஆனால், திருமண அங்கீகாரத்தை உயிரியல்ரீதியான பாலினத்திலிருந்து ஒருவர் தன்னை இன்னதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் பாலினத்துக்கு நீட்டிக்க முடியும் என்றால், உயிரியல்ரீதியான பாலினத்திலிருந்து ஒருவரின் பாலியல் ஈர்ப்புக்கு ஏன் நீட்டிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
  • தன்பாலின இணையர்களின் திருமணத்தை அங்கீகரிக்க மறுப்பது அவர்களைப் பாகுபாட்டுக்கு உள்ளாக்குவதாகும். அது மட்டும் அல்ல. இந்தத் தீர்ப்பின் எதிர்பாரா விளைவாகத் ‘தன்பாலின இணையர்கள் திருமணத்துக்குத் தகுதியானவர்கள் அல்ல’ என்னும் எண்ணம்காலத்துக்கும் தொடரும். இந்தச் சிந்தனைக்கு நாட்டின்மிக உயரிய நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது.இதன் மூலம் தன்பாலினத்தவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு விரைவாக இந்தப் பிழை சரிசெய்யப் படுகிறதோ அவ்வளவு நம் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கு நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்