திருமணம் வரைதான் மல்யுத்தம்! வீராங்கனைகள் நிறைந்த செனகலின் வினோத வழக்கம்!
- பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்ட வேண்டிய சூழலில், செனகல் நாட்டிலுள்ள பெண்களில் பலர் மல்யுத்த வீராங்கனைகளாக உள்ளனர்.
- மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டின் காசாமான்ஸ் மாகாணத்தில் போதிய கல்வி அறிவு இல்லையென்றாலும், மல்யுத்தத்தில் பயிற்சி எடுத்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெண்கள் சிறந்த வீராங்கனைகளாக விளங்குகின்றனர்.
- பெண்கள் மல்யுத்தம் செய்ய எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால், செனகல் நாட்டின் அநேக பகுதிகளில் உள்ள பெண்கள் மல்யுத்த வீராங்கனைகளாக இருப்பதைக் காணலாம். முறைப்படி பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான வீராங்கனைகள் சர்வதேச மேடைகளில் நட்சத்திரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் அனைவருக்குமே ஒரு நிபந்தனை உண்டு. அதுதான் திருமணம்.
- மல்யுத்தம் செனகல் நாட்டின் தேசிய விளையாட்டு என்பதால், மல்யுத்தம் புரிபவர்கள் நட்சத்திரங்களாகக் கொண்டாடப்படுகின்றனர். இங்கு பொழுதுபோக்கிற்காகவும், பாரம்பரிய சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகவும் மல்யுத்தம் நடத்தப்படுகிறது.
- செனகல் நாட்டின் வோலோஃப் (Wolof), ஜோலா (Jola) ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த பெண்கள் அதிகம் மல்யுத்தம் செய்கின்றனர். மல்யுத்தமானது வோலோஃப் மொழியில் லாம்ப் (laamb) என அழைக்கப்படுகிறது. வோலோஃப் செனகல் நாட்டின் தேசிய மொழி.
- செனகல் நாட்டின் காசாமான்ஸ் மாகாணத்துக்குள்பட்ட பகுதியில் ஜோலா இனக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பாரம்பரியமாக ஆண்களுடன் மல்யுத்தம் செய்கிறார்கள். மியோம்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றவர்களில் ஏராளமானோர் இளம்பெண்கள்.
- ஆனால், திருமணம் வரை மட்டுமே அவர்கள் இதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு மல்யுத்தப் பயிற்சியை நிறுத்திவிட்டு பாரம்பரிய மரபுப்படி குடும்பத்தைப் பேணுவதிலேயே பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
- இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், 9 முறை ஆப்பிரிக்க மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவருமான - பயிற்சியாளர் இசபெல் சம்பூ பேசுகையில், ''மல்யுத்தம் எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது. எங்கள் கிராமத்தில் பெண்கள் மல்யுத்தம் புரிவார்கள். எனது தாயார் மல்யுத்த வீராங்கனை. என்னுடைய அத்தையும் மல்யுத்த வீராங்கனைதான்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
- சம்பூவின் அத்தை அவா ஸீ பேசுகையில், ''எனக்கு 80 வயதாகிறது. என்னுடைய இளமைக்காலத்தில் எனது கிராமத்தின் சாம்பியன் நான். சில ஆண்களும் என்னிடம் தோற்றதுண்டு. எனக்கு மல்யுத்தம் செய்யப் பிடிக்கும். அது என்னை வலிமையாக உணர வைக்கிறது. எனக்குத் திருமணம் நடைபெற்ற பிறகு யுத்தம் செய்வதை நிறுத்திவிட்டேன்.
- திருமணத்துக்குப் பிறகு மல்யுத்தம் செய்ய அனுமதிக்காதது ஏன் என அப்போது நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால், என்னுடைய சகோதரனின் மகளுக்கு அப்படி இல்லை. அவளின் பணிவான நடத்தையாலும், இலக்கின் மீது இருந்த உறுதித்தன்மையாலும் பல்வேறு தடைகளைத் தாண்டி அவர் தொழில்முறை விளையாட்டு வீராங்கனையாகி இருக்கிறாள்'' என்றார்.
- இறைவனின் தூதுவராக கருதப்படும் ஒஸ்ஸௌயே அரசனை ஜோலா இன மக்கள் வழிபடுகின்றனர். அவரின் பெயரில் நடத்தப்படும் ஆண்டுவிழாப் போட்டி, பெண்கள் கலந்துகொள்ள ஏதுவான ஒன்று. இப்போட்டியில் இசபெல் சம்பூ பங்கேற்றதைப் பார்த்த, மல்யுத்த பயிற்சியாளர் ஒருவர் அவரை சர்வதேச அரங்கிற்கு அழைத்துச் சென்றார்.
- ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி குறித்தும், தேசிய பெண்கள் அணி குறித்தும் பயிற்சியாளர் எடுத்துரைத்தார். எனினும் அவரின் சகோதரர் ஒப்புதல் அளித்த பிறகே விளையாட ஒப்புக்கொண்டார் சம்பூ.
- பள்ளிப் படிப்பைக்கூட முழுவதும் முடிக்காத சம்பூ, லண்டன் மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சக வீராங்கனைகளைத் திணறடித்தார். ஒரு பழமைவாத சமுதாயத்தில் இருந்து வந்த அவரை, புழுதித் தரையில் மேற்கொண்ட பயிற்சிகள் வெற்றிகரமான தொழில்முறை வீராங்கனையாக்கியது.
- தாய் நிலத்திலிருந்து சர்வதேச மேடை வரையிலான தனது அனுபவங்களை நினைவுகூர்ந்த சம்பூ, ''நீங்கள் பெண் மல்யுத்த வீராங்கனை என்றால், பல ஏளனங்களை சந்திக்கக்கூடும். மல்யுத்த ஆடை அணிந்து சென்றால் இது பெண்ணா? ஆணா? என கேலி பேசுவார்கள். உடலமைப்பைக் கண்டு, இனி நீ பெண்ணாகவே இருக்க முடியாது என்றும் கூறுவார்கள். இதுபோன்ற விமர்சனங்கள் மனதில் ஓடும். எனினும், நான் எனக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது (மல்யுத்தம்) என்னுடைய ரத்தத்தில் உள்ளது. இதுவே இன்று நான் இருக்கும் இடத்திற்கு அழைத்துவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு என்னுடைய 30வது வயதில் ஓய்வை அறிவித்துவிட்டு, சொந்த கிராமத்துக்கே செல்ல நினைத்தேன். வேறு வேலை தேடிக்கொண்டு, குடும்ப வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என எண்ணினேன். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை.
- என்னுடைய எதிர்கால குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதைவிட, பதக்கம் வெல்ல முடியாமல்போன தனது கனவை, பல சிறுமிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை பதக்கம் வெல்லச் செய்வதன் மூலம் நனவாக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் இது மிகவும் கடினமாக செயல். பெண்கள் விளையாட்டை ஊக்குவிக்கப் போதிய நிதி ஒதுக்குவதில்லை எனக் குறிப்பிட்டார்.
- சம்பூவின் கிராமத்தில் உடற்பயிற்சி நிலையம் இல்லை. ஒலிம்பிக் மல்யுத்தப் பயிற்சி பெற ஏதுவான சிறப்புக் காலணிகள் இல்லை. மல்யுத்தம் புரிய ஏதுவான தரை விரிப்புகள் (mats) இல்லை. வெறும் காலில், புழுதித் தரையில் மல்யுத்தப் பயிற்சி எடுக்கின்றனர். இது எதுமே இல்லாமல் இப்பெண்களின் மல்யுத்தக் கனவு நனவாகியுள்ளது.
- செனகல் தலைநகர் தாகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்க இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில், சம்பூவின் மாணவர்கள் 10 பேர் பதக்கம் வென்றுள்ளனர். அதில் 6 தங்கப் பதக்கங்கள்.
- எல்லா தடைகளையும் மீறி அற்புதமாகச் செயல்பட்டதால் அவர்களுக்கு இந்தப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. நாட்டுக்காகவும் மல்யுத்தத்துக்காகவும் என்னை நான் (சம்பூ) அர்ப்பணித்தேன். இப்போது என்னிடம் எதுவுமே இல்லை. சொந்தமாக வீடு கூட இல்லை. அது ஒருவகையில் சிறு சோகம்தான்.
- தொழில்முறை விளையாட்டு வீராங்கனையாக இருப்பது கடினம். இதற்காக அனைத்தையும் விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது என்றார் சம்பூ.
- தற்போது செனகல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெற்றோர்கள் பாலின வேறுபாடின்றி தங்கள் குழந்தைகளை மல்யுத்தப் பயிற்சிக்காக சம்பூவிடம் அனுப்புகின்றனர்.
- காலம் அனைத்தையும் மாற்றுகிறது. செனகல் நாட்டில் பெண்கள் விளையாட்டின் மீதுள்ள பார்வை தற்போது மாறத் தொடங்கியுள்ளது. அதற்கு உதாரணம், இரு ஆண்டுகளில் செனகல் நாட்டில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்தான்.
- ஆப்பிரிக்க மண்ணில் நடைபெறவுள்ள முதல் ஒலிம்பிக் விளையாட்டாக இது அமையவுள்ளது.
- தன்னை ஒலிம்பிக் விளையாட அனுமதித்த அண்ணனின் 17 வயதான மகள் மமே மாரே சம்பூ, செனகலில் நடைபெற்ற இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். சர்வதேச அளவில் மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பதே இவரின் கனவு.
- இது குறித்து அவர் பேசுகையில் ''என்னுடைய அத்தையால் மல்யுத்தத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நான் விளையாட ஆரம்பித்தபோது, பெண் மல்யுத்தம் செய்வதைப் பலர் கேலி செய்தார்கள். ஆனால் நான் அதற்கு செவி சாய்க்கவில்லை. நான் என் அத்தையைப் போல இருக்க விரும்புகிறேன்'' என்றார்.
- காலவெள்ளத்தில் என்றாவது ஒரு நாளில் செனகலிலும் வீராங்கனைகளுக்குள்ள கட்டுப்பாடுகள் உடையும். திருமணத்துக்குப் பிறகும் மல்யுத்த மேடையேறுவார்கள், சாதனைகளைத் தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினமணி (15 – 08 – 2024)