TNPSC Thervupettagam

திருவள்ளுவரின் பார்வையில் பணம்

June 12 , 2023 391 days 293 0
  • ‘உலகத்தார் இருக்கிறது என்று சொல்வதை, தன் அறியாமையால் இல்லை என்று சொல்பவன், உலகத்தாரால் பேயாக கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்’ என்பது வள்ளுவம் சொல்லும் 1,330 முத்துகளில் 850-வது முத்து.
  • உலகத்தார் உண்டு என்று சொல்லும் பலவற்றுள் முக்கிய ஒன்று, பணம். அது இல்லாமல் இங்கு எதுவும் அசையாது. முற்றும் துறந்தவர்கள் நடத்தும் மடங்கள்கூட பணம் இல்லாவிட்டால் முடங்கிப் போகும். பணம் ஈட்டும் முறைகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, பணமே, பொருளீட்டுவதே தவறு அல்ல. பணம் இல்லாமல் தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், கட்சிகள், தேசங்கள் எதுவுமே வாழவோ, வளர்ச்சி காணவோ முடியாது.
  • அதனால்தான் ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ . ‘செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு’ என்றெல்லாம் மென்மையாக சொன்ன திருவள்ளுவர், பின்பு ‘பணம் சம்பாதியுங்கள்’ என்பதை, ‘செய்க பொருளை’ என்று ஒரு கட்டளை போல சொல்கிறார்.
  • நம்மை ஏளனமாகப் பார்ப்பவர்கள் கர்வத்தை அடக்க பணத்தைவிட கூர்மையான ஆயுதம் வேறு இல்லை என்று காரணமும் சொல்கிறார். இந்த டிஜிட்டல் காலத்தில் வாழ ‘உணவு. உடை, வீடு’ என்பவை மட்டும் போதாது. இன்னும் பல தேவைகள் உருவாகிவிட்டன அவற்றில் பல இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சமாளித்துக் கொள்ளக்கூடிய சவுகர்யங்களோ, எனக்கெதற்கு என்று தவிர்க்க வேண்டிய ஆடம்பரங்களோ இல்லை.
  • செல்போன், இன்சூரன்ஸ், சொந்த வாகனங்கள் இல்லாமல் வாழ்வது சுலபமா? உயர் கல்வி, மருத்துவம், பாதுகாப்பான பயணம், சுயதொழில், சுற்றுலா, பிறர்க்கு உதவி என தனக்கு செய்துகொள்ள, பிறருக்கு செய்ய பணம் தேவைப்படுகிறது. ‘சம்பாதிக்க ஆரம்பித்தபின் நீங்கள் உணரும் வேறுபாடு என்ன?’ என்று கேட்டபோது ஒரு இளைஞர் சொன்னது, ‘‘பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசித்து யோசித்து ஓட்டலில் சாப்பிடுவது போய், வேண்டியதை தைரியமாக சாப்பிடமுடிகிறது” என்றார். பலருக்கு அந்த இளைஞர் சொன்னது வியப்பாக இருக்கும். இப்படிக்கூடவா! என்று தோன்றும். இல்லாதவர்களுடைய வலியை, ஒருபோதும் அதற்காக சிரமப்படாதவர்களால் உணர முடியாது.
  • ஒருமுறை வாடகை காரில் பயணப்பட்டபோது, வண்டி ஓட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தேன். டிப்ளமா படித்தவர். உக்கிரமமான வெயில் இருக்கும் தூரதேசம் ஒன்றில், கொஞ்சமும் சுவாரசியம் இல்லாத, நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கு மேல், கடுமையான அதிக உடலுழைப்பு தேவைப்பட்ட வேலையை ஒருவருடைய வீட்டில் செய்ததாக சொன்னார். அப்போது பழக்கமில்லாத உணவை சாப்பிட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்திலும் சொந்த ஊரையும் உறவுகளையும் நினைத்துக்கொண்டு தூங்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார்.
  • வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் வேலை பெற, தரகருக்கு தொகை கொடுக்கவேண்டி, கந்து வட்டிக்கு கடன் வாங்கினார். போனவரை நிறுவன வேலையில் சேர்க்கவில்லை. நிறுவன முதலாளியின் வீட்டில், எல்லா வேலைகளையும் செய்யச் சொன்னார்கள். 4 ஆண்டுகள் வெளிவர முடியவில்லை. சம்பாதித்த பணம் அசலுக்கும் வட்டிக்கும் சரியாக இருந்தது.
  • தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து சேர்ந்திருக்கிறார். வசிக்க நினைக்கிற ஊரில் இருக்க, விரும்பும் வேலையை செய்ய, பிடிக்காதவற்றைத் தவிர்க்கவெல்லாம் எல்லோராலும் முடியாது. பணம் இருந்தால்தான் அந்த சுதந்திரம் கிடைக்கும். பணம் இல்லாதவர்கள் உடல் சிரமங்களை மட்டுமல்ல, ஏளனங்களையும் அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டி வரும். தகுதியற்றவர் அதிகாரங்களுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். பணம் பலவற்றைப் பெற்றுத் தரும் வல்லமை உடையது.
  • நமக்காக.குடும்பத்திற்காக.பெற்றோருக்காக.மற்றவர்களுக்கு உதவுவதற்காக என்று பணத்திற்கு பல தேவைகள் இருக்கின்றன. பெரும் பணம் அவசியமில்லைதான். அதே சமயம் அவசியங்களுக்கு பணம் இல்லாமல் முடியாது. எனவே செய்வோம் பொருளை.பல்வேறு நிறுவன ஊழியர்கள் மற்றும் என்னை தொடர்பு கொண்டவர்கள் என்று குறைந்தபட்சம் சில ஆயிரம் நபர்களை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய நிதிநிலை குறித்து தெரிந்து கொள்ளவும் பேசவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  • அந்த அனுபவங்களை வைத்து பொதுவாக சொல்வதென்றால், இப்படிச் சொல்வேன். பலருக்கு பணத்தை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. அந்த பலரில் மெத்தப் படித்தவர்களும், வசதியானவர்களும் உண்டு. தவிர, அவர்களில் பலருக்கு, தங்களுக்கு பண நிர்வாகம் குறித்து தெரியவில்லை என்பதே தெரியவில்லை. ‘கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்’ என்று பாரதியார் பாடியதைப் போல ‘அன்கான்ஷியஸ் இன்காம்பிடென்ஸ்’ இல் பலர் இருக்கிறார்கள்.
  • எல்லா மட்டங்களிலும். சிலர் செய்வதை கவனமாக, நேர்த்தியாக மிகச் சரியாகக் கூட செய்வார்கள். ஆனால், அதை செய்வது அவசியம்தானா, அல்லது வேறு எதுவும் செய்ய வேண்டுமா என்பது போன்ற ‘பெரும் பார்வை’ (பிக் பிக்ச்சர் வியு) இல்லாமல் இருக்கிறார்கள்.
  • நிதி விஷயத்திலும், கேள்விப்பட்டது, பார்த்தது, படித்தது என்று பலவற்றையும் செய்கிறார்கள், பின்விளைவுகள் தெரியாமலே. மூன்றாவதாக பலரிடமும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் அவர்கள் நிதிசார் முடிவுகளை ஒரு மொத்த திட்டத்தின் பகுதிகளாக செய்வதில்லை. அவ்வப்போது கையில் பணம் கிடைக்கும்போது, அல்லது எவரேனும் கட்டாயப்படுத்தும்போது ‘ரியாக்டிவ்’ ஆக செய்வார்கள். இதை ‘பிட்ஸ் & பீசஸ்’ அணுகுமுறை எனலாம். தெளிவுபடுத்தி விடலாம்.

நன்றி: தி இந்து (12 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்