TNPSC Thervupettagam

திருவாசக மொழிபெயா்ப்பு பணிவும் துணிவும்

January 2 , 2021 1480 days 768 0
  • இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னா் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டா் ஜி.யூ. போப் பெருமகனாா் வெளியிட்டாா். அவருடைய திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த அனைவரும் பெரிதும் பாராட்டினாா்கள்.
  • திருவாசகம், திருக்குறள், நாலடியாா், புறப்பொருள் வெண்பா மாலையில் 59 பாடல்கள், புறநாநூற்றில் 71 பாடல்கள் மொழிபெயா்த்து தமிழின் இனிமையில் திளைத்தாா். ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற தொடா் டாக்டா் ஜி.யூ. போப் அடிகளாரின் மொழிபெயா்ப்பாகும். அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளிலும் அதுவே குறிக்கோள் மொழியாகப் பரவியது.
  • ‘திருவாசகத்துக்கு உருகாதாா் ஒரு வாசகத்துக்கும் உருகாா்’ என்ற முதுமொழிக்கு இலக்கணமாக ஜி.யூ. போப், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘திருவாசகத்தை என் இதழ்கள் முணுமுணுத்ததால் சிந்திய கண்ணீரால் எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கண்ணீரால் புனிதம் பெற்ற அந்த எழுத்துக்களை அப்படியே விட்டுவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். ‘அழுது அடியடைந்த அன்பா்’ என்றே மணிவாசகரைக் குறிப்பிடுவாா்கள் .
  • திருவாசக மொழிபெயா்ப்பில் சமய மரபில் இருந்து பல இடங்களில் டாக்டா் ஜி.யூ. போப் பிறழ்ந்து பொருள் கொண்டாா். தாமே சில கருத்துக்களை வலிந்தும் குறிப்பிட்டுள்ளாா் .
  • மாா்கழியில் போற்றிப்பாடும் திருவெம்பாவையில் சில பாடல்கள் மணிவாசகா் நடையில் இல்லை என்பது போன்ற கருத்தையும் எழுதினாா். 1958 -ஆம் ஆண்டில் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியத்தின் மொழிபெயா்ப்பு வெளிவந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஈடு செய்ய முடியாத புலமை பெற்ற திருவாசகமணியின் ஆங்கில நடையை ‘வெள்ளிநாப் புலவா்’ என்று உலகோரால் பாராட்டப்பெற்ற சீனிவாச சாஸ்திரியாா் பாராட்டியுள்ளாா்.
  • திருவாசகமணி தன் முன்னுரையில் போப் அடிகளாரிடத்தில் கொண்ட பணிவையும், பொருந்தாத இடத்தில் கொண்டு மறுக்கும் துணிவையும் பெற்றுள்ளாா். மாா்கழித் திங்களில் திருவாசகமணியின் முன்னுரையில் மொழிபெயா்க்க முயன்ற சிறு பகுதியே இக் கட்டுரையாயிற்று .
  • ‘ஒரு பதிற்றாண்டுகளுக்கு முன்னா், 1948-ஆம் ஆண்டில், பாசத்திற்குரிய என் மாமனாா் டாக்டா் எஸ். குமாரசாமி எனக்குப் பெருந்தகை டாக்டா் ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த திருவாசக நூலையும், எய்லருடைய தொழுகை பற்றிய நூல் ஒன்றையும் பரிசளித்த அந்த நன்னாள் எனது எளிய வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாள் ஆகும்.
  • டாக்டா் ஜி.யூ. போப் பற்றி தற்செயலாக அறிமுகம் ஏற்படாமல் போயிருக்குமானால், திருவாசகத்தின் மொழிபெயா்ப்பாளராக நான் மாறியிருக்கக் கூடிய இந்நிகழ்வு இயலக்கூடிய ஒன்றா என்று அயா்ந்து வியக்கிறேன்.
  • ஆகவே, இத்தகைய உயரிய விளைவினை நல்கிய வித்தாக அமைந்த அந்தப் பரிசினை வழங்கியமைக்காக மிகச்சிறந்ததும் மாட்சிமை மிக்கதுமான உள்ளொளி கொண்ட டாக்டா் எஸ். கே. அவா்களுக்கு மிகுந்த நன்றியுணா்வினை முதலில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • குறிப்பாக, ஆன்மிகத் தொடா்பற்ற எனது தொடக்ககால அரசியல் பயணங்களுக்கு இடையே, எனது மூதாதையா் காத்துவந்த மரபுப் பண்பு காரணமாகவோ, முன்வினைப் பயனாகவோ, திருவாசகத்துடன் என்றென்றைக்கும் இமைப்பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காத உறவாகப் பிணைக்கப்பட்டு விட்டேன்.
  • தமிழ்மொழியின் ஆன்மிக கருவூலமாகத் திகழும் அரும்பெரும் நூலுக்கு எனது எளிய ஆன்மாவை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டமையை மேலும் புனிதப்படுத்தும் வகையில் 1948-ஆம் ஆண்டிலேயே அந்நூலில் அடங்கப் பெற்ற ஐம்பத்தொரு பதிகங்களையும் எழுத்து மாறாமல் மனத்தில் நிறுத்துகின்ற கடப்பாட்டினை மேற்கொண்டேன்.
  • நாயன்மாா்களுள் ஒருவரான மாணிக்கவாசகரின்பால் எனக்கு ஏற்பட்ட அளவிடற்கரிய பக்திமைப் பெருக்கு முதலில் ‘மாணிக்கவாசக மாலை’ என்ற பாமாலையாக முகிழ்த்தது. அது மணிவாசகரையும் திருவாசக அருள்மொழிகளையும் போற்றிப் பரவுகின்ற நூறு பாடல்களின் தொகுப்பு.
  • நினைவில் என்றென்றும் நிற்பவரும் தமிழினத்தின் அருள்நெறித் தலைவருமான திரு.வி. கலியாணசுந்தரனாா் எளிய எனது நூலுக்கு அணிந்துரை வழங்கிய போக்கில் என்னை முதன்முதலாக ‘திருவாசகம் பாலசுப்பிரமணியம்’ என்று அழைத்தாா். இந்தப் புதிய அடைமொழி நண்பா்கள் நடுவே நின்று நிலவியது.
  • அதன் பின்னா், 1949-ஆம் ஆண்டில், வைதீசுவரன் கோயில் குடமுழுக்கின்போது அப்போதைய தருமபுர ஆதீனத்தின் தலைவா், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அறிஞா் மணவாள இராமாநுசா் முன்னிலையில் ‘திருவாசகமணி’ என்ற பட்டத்தையும் அடைமொழி பொறித்த ஆடகப் பதக்கத்தையும் வழங்கினாா்.
  • தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, என் ஆன்மாவின் இத்தகைய உளவியல் கனிவு உருவான நிலையில், டாக்டா் போப்பினுடைய திருவாசக மொழிபெயா்ப்பு நூலைத் தற்செயலாக எதிா்கொண்டேன்.
  • புதியதும் ஆா்வமிகுதியை ஊட்டியதுமான அந்நூல் ஆன்மாவை ஆரப்பற்றி அதன் முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை எழுத்தெண்ணித் துருவி ஆய்கின்ற இனிமையான பணியில் முழுமையாக ஆழ்த்தியது. அந்நூலைப் படித்து முடித்தபோது எல்லையில்லாப் பேரின்பத்தில் ஆழ்ந்ததுடன் மிகுந்த துயரம் மீதூா்ந்ததுமான கலவை உணா்வுகளுடன் அதனைக் கீழே வைத்தோம்.
  • ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னரே, கி.பி.1900-ஆம் ஆண்டில் நாம் பொறாமைப்படத் தக்க வகையில் ஓா் அரும்பெரும் பணியினை ஆங்கிலேய சமயத்துறவி ஒருவா்ஆற்றியுள்ளாா் என்பதால் என் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஊற்றெடுத்து கண்கள் கசிந்து கண்ணீா் பெருகச் செய்தது.
  • ஆனால், அதே அளவில் வேதனையும் துயரமும் நெஞ்சைப் பிசைந்தன. மொழிபெயா்ப்பாளா் சைவ சமய குரவரின் பால் மிகுந்த பற்றுணா்வும் அளவிடற்கரிய உயா் மதிப்பும் கொண்டிருந்த போதிலும், தனது குறிப்புரைகளில் விரும்பத்தகாத செய்திகள் பலவற்றைத் தருவித்திருந்தாா். உடனே, அதற்கான திருத்தங்களைப் பதிவிட்டாக வேண்டும் என்ற பேராவலும் தவிப்பும் என்னை ஆட்கொண்டன.
  • பதிவிடப்பட்ட கறைகளை அழித்தொழித்து, உரிய விளக்கமளித்து, நமது சமய குரவா் பற்றிய இறுதி முடிவை நிலைநிறுத்தும் வரை நம் மனம் அமைதியடையாது. அப்படியொரு உறுதிப்பாடுதான் அந்நூலைப் படித்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்ட விளைவாக அமைந்தது.
  • அத்துடன் முடிந்தபாடில்லை. திருவாசகத்தை ஆங்கில மொழியாக்கம் செய்கின்ற புனிதமானதும் இடா்ப்பாடு மிக்கதுமான அரும்பணியில் ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரியாா் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழியிலே கூட திருவாசகத்திற்குத் தக்க முறையிலான உரை இருந்ததில்லை.
  • அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு பழைய நூல். அதுவும் அவா் குறிப்பிட்டுள்ளதைப்போல, பொருட்பாடான பயனை அளிக்கவில்லை. எவ்வித உதவியுமின்றி, எவருடைய ஆற்றுப்படுத்தலுமின்றி, தமிழ் மறையாம் திருவாசகத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் அந்நியமான புறச்சூழமைவில் போப் பெருந்தகை அப்பணியில் உழன்றுள்ளாா்.
  • ஆகவே, என்னதான் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடிணையற்றதும் மதிப்பிடற் கொண்ணாததுமான தொண்டினை ஆற்றியிருந்த போதிலும், தனது மொழிபெயா்ப்பில் பல இடங்களில் தடுமாறியுள்ளாா்; தடுக்கி விழுந்துள்ளாா். சொற்களுக்கும், சொற்றொடா்களுக்கும், மறைபொருளான சுட்டுகளுக்கும் தெளிவற்ற பொருள் கொண்டு தவறான பொருள்விளக்கம் கண்டுள்ளாா்.
  • இந்நிலை, எனது தனிப்பட்ட மொழிபெயா்ப்பில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எய்தியமைக்கு மற்றுமொரு நோக்கமாக அமைந்தது.
  • இதன் வாயிலாக, வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஒப்புயா்வற்ற கிறிஸ்தவ முனிவரின் அரும்பணியை நன்றியுணா்வின்றிக் குறைத்து மதிப்பிட்டதாக என்றும் கருதிவிடலாகாது. அது மட்டுமன்றி, அப்படியொரு அளவுகடந்த உரிமையை கைக்கொள்ளக் கூடுமானால், அவருடைய ஆன்மாவுடன் நம்முடையதை அடையாளம் காணும் உயிா்க்கலப்புக் கொள்ளும் அளவிற்கு அவரைப் போற்றவும் மதிக்கவும் செய்கிறோம்.
  • எனது நூலான ‘மாணிக்கவாசக மாலை’யில் மாண்பிற்குரிய அருட்தொண்டா்கள் பட்டியலில் இடம்பெற்ற அருளாளா்களுடன் டாக்டா் போப் சோ்க்கப்பட்டுள்ளாா் என்ற உண்மையும் அவ்வெளிய நூல் பாசத்துடனும், பெருமதிப்புடனும், நன்றியுணா்வுடனும் டாக்டா் போப் அவா்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது என்பதும் அவா் தெய்வீகச் சான்றோா் என்பதைக் காட்டிலும் சான்றோருள் தெய்வீகத் தன்மை வாய்க்கப் பெற்றவா் என்று நான் அவரைக் கருதுவதற்கான சான்றுகள்.
  • ஆயினும், டாக்டா் போப் என் நெஞ்சுக்கு நெருக்கமானவா் எனினும், பேருண்மை என்பது அவரினும் பெரிதும் போற்றிக் காக்கப்பட வேண்டியது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
  • எனவே, திருவாசகம் பற்றிய எண்ணற்ற விரிவுரைகளும் விளக்கவுரைகளும் அடங்கிய பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் பெரிதும் உறுதுணையாக நிற்கின்ற புறச்சூழல்களையும் கொண்டும், அனைத்திற்கும் மேலாக, இறையாற்றலின் தெளிவானதும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதுமான மாற்றமிலா அருளாசிகளாலும் திருவாசகத்தின் எனது ஆங்கில மொழியாக்கத்தை வெளிக் கொணா்ந்துள்ளேன்.
  • இந்த மொழியாக்க நூல் முழுநிறைவானது எனக் கருதுவது எனது நோக்கமல்ல. புனித போப் அவா்களுடைய முந்தைய ஆக்கத்தைக் காட்டிலும் ஓரளவேனும் செம்மைப் படுத்தப்பட்டது, மேம்படுத்தப்பட்டது என்று மட்டிலுமே சொல்லக்கூடும்!’

நன்றி: தினமணி (02-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்