TNPSC Thervupettagam

திரையிட்டு மறைத்தாலும் ஒளிர்ந்த கல்விச் சுடர்

November 12 , 2023 426 days 284 0
  • ஒருவரது பிறப்பு அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதில் வடக்கே சாவித்ரிபாய் புலே உறுதியாக இருக்க, தெற்கிலோ இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்ததால் கல்வி என்னும் அடிப்படை உரிமை சி.என்.முத்துலட்சுமி ரெட்டிக்கு மறுக்கப்பட்டது. இசை வேளாளர் குடும்பத்தில் பிறக்கும் பெண்களைக் கடவுளுக்கு சேவை செய்யும் பொருட்டுக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் சடங்கு நடத்தப்படுவது அந்தக் காலத்தில் வழக்கம். ‘பொட்டுக்கட்டுதல்’ என்று சொல்லப்படும் அந்தச் சடங்குக்கு ஆள்படுத்தப்படும் பெண்கள் ‘தேவதாசிகள்’ என அழைக்கப்பட்டனர். பிற பெண்களைப் போல் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது.
  • இசை, நடனம் போன்ற கலைகளில் அவர்கள் சிறந்து விளங்கியபோதும் சமூகத்தில் அவர்களின் நிலை தாழ்ந்தே இருந்தது. புரவலர்கள், செல்வந்தர்களின் பாதுகாப்பில் வாழ்ந்த அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குச் சமூக அங்கீகாரமும் சம உரிமையும் மறுக்கப்பட்டன. கோவிலூர் சந்திரம்மாளுக்கு 11 வயதில் ‘பொட்டுக்கட்டுதல்’ சடங்கு நடத்தப்பட்டபோது அந்த நிகழ்வில் புரவலராக இருக்கும்படி நாராயணசாமி ஐயரிடம் புதுக்கோட்டை மன்னர் ராஜா ராமச்சந்திர தொண்டைமானின் சகோதரி சிறப்பு வேண்டுகோளை வைத்தார். (‘முத்துலட்சுமி ரெட்டி’, ஆசிரியர்: வி.ஆர். தேவிகா). அப்போது நாராயணசாமி ஐயருக்கு 30 வயது.

திண்ணைப் பள்ளியில் கல்வி

  • மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி, சந்திரம்மாளைத் தன்னுடைய இணையராக ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தது அந்நாளில் யாரும் எதிர்பாராதது. முத்துலட்சுமியின் கல்விப் பயணத்துக்குக் குடும்பமாக இவர்கள் இணைந்ததும் முக்கியக் காரணம். முத்துலட்சுமி தன் தாயைப் போலவே அறிவானவர். முத்துலட்சுமி பிறந்தபோது சந்திரம்மாளுக்கு 16 வயது. குழந்தைத் திருமணத்தின் மூலம் பிறந்த முத்துலட்சுமி பின்னாளில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராக ஆனதும் ஆணின் திருமண வயதை 21 ஆகவும் பெண்ணின் திருமண வயதை 16 ஆகவும் உயர்த்துவதற்காகக் குரல் எழுப்பியதும் வரலாறு! நான்கு வயதுச் சிறுமியான முத்துலட்சுமி தன் வீட்டுக்கு அருகில் இருந்த திண்ணைப் பள்ளிக்குப் படிக்கச் சென்றதே அந்நாளில் புதுமையாகப் பார்க்கப்பட்டது.
  • பள்ளிப் படிப்பை முடித்ததும் தன் மகளுக்கு வீட்டிலேயே நாராயணசாமி ஐயர் பாடங்களை நடத்தினார். 1902ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி அதில் முதல் மாணவியாகத் தேர்வானார். முத்துலட்சுமிக்குக் கல்லூரியில் சேர விருப்பம். அவருடைய அம்மா சந்திரம்மாளோ மகளுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். இறுதியில் முத்துலட்சுமியின் பிடிவாதமே வென்றது. அதுவரை ஆண்கள் மட்டுமே படித்துவந்த புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் இடம் கேட்டு தன் மகளுக்காக நாராயணசாமி விண்ணப்பித்தார். பெண்களின் இருப்பால் ஆண்களின் கவனம் சிதறும் என்கிற பொதுவான மனநிலை அந்நாளில் பெரும்பாலானோரிடம் இருந்தது. அதுவும் ‘தேவதாசிகள்’ என்று இழிவாகக் கருதப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த முத்துலட்சுமியைக் கல்லூரி இருகரம் நீட்டி வரவேற்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதானே?

ஆண்களின் உறுதி குலையுமா

  • கல்லூரியின் அன்றைய முதல்வரும் பொதுச் சமூகத்தின் கருத்தையே தன் கருத்தாகக் கொண்டிருந்தார். ஆண்களோடு சேர்த்து முத்துலட்சுமிக்குப் பாடம் நடத்துவது சரியாக இருக்காது என்றும் முத்துலட்சுமியால் ஆண்களின் மன உறுதி குலைந்துவிடக் கூடும் என்றும் புதுக்கோட்டை மன்னருக்குக் கடிதம் எழுதினார். எல்லாக் காலத்திலும் பெண்களால் குலைந்துவிடக் கூடிய ‘மன உறுதி’ கொண்டவர்களாகத்தான் பெரும்பாலான ஆண்கள் இருந்திருக் கிறார்கள் போல! கல்லூரி நிர்வாகமும் முதல்வரின் கருத்தை ஆமோதித்தது.
  • அமெரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்த போது பொதுப்பள்ளியில் கல்வி கற்க விரும்பிய ஆப்ரிக்க அமெரிக்கச் சிறுமி ரூபி பிரிட்ஜஸ் எதிர்கொண்ட எதிர்ப்பையும் அவமானத்தையும் தமிழகத்தின் புதுக்கோட்டையில் முத்துலட்சுமி சந்தித்தார். முத்துலட்சுமியைப் போன்றவர்கள் படிக்கிற கல்லூரியில் தங்கள் குழந்தைகள் படிப்பதைப் பெரும் அவமானமாகப் பெரும்பாலான பெற்றோர் கருதினர். முத்துலட்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டால் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்ப மாட்டோம் என்று ஒரே குரலில் உறுதியாக எதிர்த்தனர்.

மூன்று மாத நிபந்தனை

  • இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சிமாணவியாக கமலா சோஹோனி சேர்த்துக்கொள்ளப் படுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைதான் முத்து லட்சுமிக்கும் விதிக்கப் பட்டது. அதாவது முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் அவரைத் தற்காலிக மாணவியாகச் சேர்த்துக்கொள்வது எனக் கல்லுரி நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது. அந்த மூன்று மாதங்களும் முத்துலட்சுமி தன் நன்னடத்தையை நிரூபிப் பதற்கான சோதனைக் காலம். அவரது நடத்தையில் கல்லூரி நிர்வாகத்துக்குத் திருப்தி ஏற்பட்டால் அவரைப் போலவே பிற மாணவிகளும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றுபுதுக்கோட்டை மன்னர் தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.
  • அந்த உத்தரவாதத்தை முத்துலட்சுமி இறுகப் பற்றிக்கொண்டார். தன்னுடைய வெற்றி தன்னைப் போலவே கல்வி பெறத் துடிக்கும் பல நூறு பெண்களின் வெற்றி என்பது முத்துலட்சுமிக்குப் புரிந்தது. ஒரு பெண் கல்வி பெறுவதற்கு அவருடைய பிறப்பு ஒருபோதும் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சேர்த்துத்தான் முத்துலட்சுமி கல்லூரியில் கால்பதித்தார். கல்லூரிக்குள் நுழைந்த பிறகும் பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு பக்கம் ஆண் மாணவர்கள் அமர்ந்திருக்க, மறுபக்கம் முத்துலட்சுமி தனியாக உட்காரவைக்கப்பட்டார். இருதரப்பையும் பிரிக்கும் வகையில் நடுவில் திரையொன்று தொங்கவிடப்பட்டது.
  • தங்களைச் சூழ்ந்திருக்கும் அவமானத் திரைக்கு முன்னால் துணியால் நெய்யப்பட்ட திரை ஒரு பொருட்டே அல்ல என்று நினைத்த முத்துலட்சுமி கல்வி ஒன்றே காரியமாக இருந்தார். மாலையில் கல்லூரி முடிந்ததும் முத்துலட்சுமி முதல் ஆளாக வெளியேறிய பிறகே மற்ற மாணவர்கள் வெளியேறினர். 1902இல் நடந்த நிகழ்வு இது. நாம் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரைக்கும் இதுதான் நிலை. புதுக்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மேற்படிப்பைத் தொடர முத்துலட்சுமி விரும்பினார். மேற்படிப்பில் மருத்துவத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்