TNPSC Thervupettagam

திறந்தவெளி நெல் கிடங்குகளில் தொடர் கண்காணிப்பு அவசியம்

January 14 , 2022 933 days 538 0
  • சம்பா பருவ நெல் அறுவடைக்குத் தயாராகிவரும் காவிரிப் படுகை விவசாயிகள் வழக்கம்போல நேரடி நெல் கொள்முதலை எதிர்பார்த்திருக்கிறார்கள். அதே நேரத்தில், கடந்த குறுவையின்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் போதிய பராமரிப்பு இல்லாததன் காரணமாக மழைநீரில் வீணாவது கண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
  • அண்மையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சன்னாபுரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானது, காவிரிப் படுகை விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லின் ஈரப்பதத்தைக் காரணம்காட்டி, கொள்முதல் செய்ய மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முறையாகப் பாதுகாக்கத் தவறுவது முரணாக இல்லையா என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர். தங்களது நான்கு மாத உழைப்பு வீணாவது அவர்களிடையே வருத்தத்தை உருவாக்கியுள்ளது.
  • சன்னாபுரம் கிடங்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்தும் கருத்தும் வீணாகியுள்ளன. எனினும், 45 டன் நெல் மட்டுமே வீணாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த சாகுபடி பருவத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டதைச் சொல்லிப் பெருமைகொள்ளும் தமிழ்நாடு அரசு, சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பாதுகாப்பு வசதிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • குறுவை பட்டக் கொள்முதலானது, தஞ்சை மாவட்டத்தில் 5 நிலையான சேமிப்புக் கிடங்குகளிலும், 24 திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாசனப் பரப்பையும் சாகுபடி பரப்பையும் விரிவுபடுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு, வேளாண் விளைபொருள்களை விற்பனைக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பதற்கான சேமிப்புக் கிடங்குகளைக் கட்டமைப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
  • தெலங்கானா மாநிலத்தில் விளையும் நெல்லில் பாதியை மட்டுமே இந்திய உணவுப்பொருள் கழகம் கொள்முதல் செய்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மத்திய அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களையே நடத்திவருகிறது. தமிழ்நாட்டின் நல்வாய்ப்பாக, விளைவிக்கப்படும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்யும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
  • அவை முறையான பராமரிப்புடன் அரைவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தரமான அரிசி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு வேளை போதுமான உணவுக்கு வாய்ப்பற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் இந்த நாட்டில் திறந்தவெளியில் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று பத்தாண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தனது வேதனையை வெளிப்படுத்தியது.
  • இடைப்பட்ட காலத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திப் பட்டினியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் உணவு தானியங்கள் வீணாவது தொடரவே செய்கிறது. புதிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட வேண்டிய காலத்தின் தேவையை இனிமேலும் தள்ளிப்போடக் கூடாது.

நன்றி: தி இந்து (14 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்