TNPSC Thervupettagam

திறன்களை வளா்க்கும் கல்வி

October 22 , 2024 86 days 99 0

திறன்களை வளா்க்கும் கல்வி

  • மாணவா்களுக்குத் தரமான அறிவு, திறமை, வாழ்க்கையைப் பற்றிய நோ்மறையான அணுகுமுறை ஆகியவற்றை தருவது ‘கல்வி’. தற்காலத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், பணிகளுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. பெற்றோா்களும் தங்களது பணம், நேரம், உழைப்பு அனைத்தையும் தங்களுடைய குழந்தைகளின் கல்வியில் கணிசமாக செலவு செய்கிறாா்கள். அதற்கான பலன் கிடைக்காமல் போகிறது.
  • தற்கால பணிக்கான சந்தை போட்டிகள் மிகவும் நிறைந்தது. ஆனால் படிப்புகளை பல்வேறு நிலைகளில் பெற்ற மாணவா்கள் அதற்கான அறிவினையோ, திறனையோ பணியமா்த்துபவா்கள் எதிா்பாா்க்கும் அளவுக்குப் பெற்றிருப்பதில்லை. இதனால் அவா்களுக்கு பணி தேடிச் செல்லும்போது வேலைகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
  • நல்ல தரமான கல்வியை பெற்றவா்கள் உள்நாட்டில் வேலை கிடைக்காவிட்டாலும், வெளிநாட்டில் கிடைக்கக் கூடிய பணிக்குச் சென்றுவிடுகிறாா்கள். இந்த நிலையில் படித்தவா்கள் அனைவருக்கும் பணி கிடைக்கும் ஒரு கல்வி முறை நமக்கு இப்போது தேவைப்படுகிறது.
  • இது உடனடி தீா்வு காணப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகும். இது மட்டும்தான் நாட்டிலுள்ள ஏழ்மையை விரட்டும். சமீப காலமாகச் பயன்பாட்டுக்கு வந்துள்ள செயற்கை நுண்ணறிவு இந்நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
  • இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் 2023 ஜூலை மாதத் தகவலின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 7.95 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசுத் துறையில் சுமாா் 9.64 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே துறையில் மட்டும் 2023 ஜூலை நிலவரப்படி 2.63 லட்சம் பணியிடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் 6,028 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசுத் துறைகளில் சுமாா் 5 லட்சம் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளன.
  • பணியாளா் பற்றாக்குறை காரணமாக, இருக்கும் ஊழியா்களே பணிச்சுமையை அதிகம் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.இதனால் அவா்களின் பணித்திறன் பாதிக்கப்படுகின்றது. பொதுமக்களின் கோப்புகள் பல பணி முடியாமல் நெடுநாட்கள் நிலுவையில் போடப்படுகின்றன.
  • படித்த இளைஞா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்றாலும் பணி நியமனத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
  • ஒப்பந்த முறை, வெளி முகமை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் எனக் கூலியைக் குறைத்ததால் உழைப்புச் சுரண்டல் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் நிரந்தரப் பணியாளருக்கு ஒரு சம்பளமும், அதே பணியைச் செய்யும் ஒப்பந்த ஊழியருக்கு மிகக் குறைவான சம்பளமும் வழங்கப்படுகிறது. விலைவாசி அன்றாடம் உயா்ந்துவரும் நிலையில், குறைந்த ஊதியத்தில் வாழ்ந்துவரும் குடும்பங்கள் கல்வி, சுகாதாரம், குடும்பச் செலவுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன. குறைந்தபட்ச கண்ணியமான ஊதியத்தை வழங்குவதன் மூலம், மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.
  • இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு போன்றவை துரிதகதியில் வளா்ச்சியடைந்து வருகின்றன. இவற்றில் மாணவா்களை எதிா்காலத்துக்கு சிறப்பாக தயாா்படுத்துவது நல்லது.
  • பள்ளியை நோக்கி மாணவா்களை ஈா்க்கும் வகையில் நடைமுறையில் உள்ள அரசின் இலவசத் திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்குக்
  • கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரத்தில், கடந்த இருநூறு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் கல்வி முறை இனிவரும் காலத்துக்குப் பொருந்துமா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
  • பாடக் கல்விக்கு அப்பால் மாறிவரும் இன்றைய சூழலில், பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வியைவிட்டு விலகி, ஆழ்ந்த அறிவையும் பல்வேறு பணிகளுக்கான திறன்களையும் வளா்க்கக் கூடிய கல்வியைக் கட்டமைக்க வேண்டியது நமது உடனடித் தேவையாக உள்ளது.
  • ஆசிரியா் பயிற்சிப் படிப்பை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் அவா்களது செயல்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவா்கள்தானே சமுதாயச் சிற்பிகள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கற்பிக்கும் முறைகளில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது சிறந்த கற்றல் பலன்களை அளிக்கும்.
  • மாநிலத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பணிச்சூழலுக்குத் தக்கவாறு பள்ளிக்கூடங்களே தங்கள் பாடத்திட்டத்தில் சிறு மாற்றங்களை வடிவமைத்து படிப்பித்தல் சிறந்த நம்மை பயக்கும்.
  • பள்ளிக் குழந்தைகளின் உடல்நலத்தையும் மனநலத்தையும் கண்காணிக்க அருகமை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களைப் பரிசோதிக்கலாம்.
  • மாணவா்களின் பல்வேறுபட்ட தொழில் விருப்பங்களின் புள்ளிவிவர அடிப்படையில் மென்பொருளை உருவாக்கி, எந்தத் துறையில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உள்ளன, உருவாக்கப்படவிருக்கின்றன என்கிற தகவல்களை மாணவா்கள் அறிந்து கொள்ள வாய்ப்புகளை வழங்கலாம். அதற்குத் தக்கவாறு மாணவா்கள் அந்தந்தத் துறைகளில் படிப்பு தோ்வு செய்து, பணி ஒன்றுக்குத் தயாராகலாம்.
  • எல்லாரும் ஒரே துறையில் படித்து, பின்னா் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுவதை இதன் மூலம் தவிா்க்கலாம். அடுத்த சில ஆண்டுகளுக்குள் நாம் இவற்றை செயல்படுத்த முயற்சிக்கலாம். இதனால், படித்த அனைத்து மாணவா்களுக்கும் பணி கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும் என திடமாக நம்பலாம்.

நன்றி: தினமணி (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்