TNPSC Thervupettagam

திறப்பாடு இலாதவர்! | நாடாளுமன்ற அமளி

February 3 , 2021 1250 days 580 0
  • ஏற்கெனவே குளிர்கால கூட்டத்தொடரை கொள்ளை நோய்த்தொற்றைக் காரணம் காட்டி நடத்தாதது மிகப் பெரிய தவறு.
  • இப்போது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல, பட்ஜெட் கூட்டத்தொடர் அமளி, வெளிநடப்பு, புறக்கணிப்பு, ஒத்திவைப்பு என்று தொடங்கியிருக்கிறது.
  • பல கோடி மக்கள் தங்களது குறைகள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், அரசு கொண்டுவரும் திட்டங்களும், கொள்கைகளும் முறையாக விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • நாடாளுமன்ற அவைகள் கூடாமல் இருப்பதற்கும், அவசரச் சட்டங்களின் மூலம் ஆட்சி நடத்துவதற்கும் மக்களின் பல நூறு கோடி ரூபாய் வரிப்பணம் விரையமாகிறது என்பது குறித்து அரசும், எதிர்க்கட்சிகளும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
  •  பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் மிக முக்கியமான அம்சம். நாடாளுமன்றம் மிக அதிக நாள்கள் கூடுவது பட்ஜெட் கூட்டத்தொடரின்போதுதான்.
  • அடுத்த நிதியாண்டில் அரசின் வருவாய் எப்படியெல்லாம் செலவாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு அறிக்கையை அரசு சமர்ப்பிக்கும் நிகழ்வு அது.
  • நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தால், குறிப்பாக மக்களவையால், நிறைவேற்றப்பட்டால்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். அரசின் செயல்பாடுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறும் நிகழ்வுதான் பட்ஜெட் கூட்டம்.
  • இந்த முறை கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
  • குறைந்த அளவிலான மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற ஊழியர்கள் மட்டுமே அவை கூடும்போது அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இந்த வழிமுறையைக் கடைப்பிடித்து குளிர்கால கூட்டத்தொடரையும் நடத்தியிருக்கலாமே என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. நடந்து முடிந்ததை இனிமேல் பேசிப் பயனில்லை.
  • இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி வித்தியாசப்படப் போகிறது, ஆளுங்கட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கும், ஆளுங்கட்சியுடன் கருத்து வேறுபாடால் அகன்று நிற்கும் எதிர்க்கட்சிகள் எப்படி செயல்படப் போகின்றன, அரசின் கொள்கை முடிவுகளை எந்தவிதத்தில் எதிர்கொள்ளப் போகின்றன போன்ற பல கேள்விகளை பட்ஜெட் கூட்டத்தொடர் எழுப்புகிறது.
  • ஆளுங்கட்சிக்கு எண்ணிக்கை பலம் இருப்பதால், நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றிக் கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்கப் போவதில்லை. இதைக் கருத்தில் கொண்டுதான் எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டத்தொடர் வியூகத்தை வகுக்க வேண்டும்.
  •  2014-இல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தது முதலே எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருவித பலவீனம் உருவாகியிருக்கிறது. வாக்காளர்கள் அவர்களுக்கு மக்களவையில் போதிய அளவு எண்ணிக்கை பலம் வழங்கவில்லை என்பதேகூட தன்னம்பிக்கையின்மையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
  • கூட்டத்தொடரில் கலந்து கொள்வதாலோ, கருத்துத் தெரிவிப்பதாலோ, வாக்களிப்பதாலோ எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்கிற மனோநிலையுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல்படுவதுதான் அதற்குக் காரணம்.
  • எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி, மிகப் பெரிய தவறிழைக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலம் மட்டுமல்லாமல், சொல்லாற்றலும், விவாதத் திறமையும், ஆளுங்கட்சியை திணறடிக்கும் விதத்திலான புள்ளிவிவரங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
  • ஒற்றுமையுடனும், விவேகத்துடனும், தெளிவான அணுகுமுறையுடனும் அரசை எதிர்கொள்ளத் தெரியாமல், "கார்ப்பரேட்டுகளின் அரசு', "சூட் - பூட் அரசு', "விவசாயிகளுக்கு எதிரான அரசு' என்று கோஷம் எழுப்பி அவையை முடக்குவதாலோ, வெளிநடப்பு செய்வதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை. காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சி அனுபவம் இதைக்கூடவா கற்றுக்கொடுக்கவில்லை?.
  • இந்திய நாடாளுமன்றத்தின் முதல் ஐந்து அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றும் பலமாக இருக்கவில்லை. 1952-இல் அமைந்த முதல் மக்களவையில் 489 இடங்களில் 364 இடங்களுடன் காங்கிரஸ் அசுரப் பெரும்பான்மை பெற்றிருந்தது. குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சியாக இருந்த ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 16 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது.
  • 1957-இல் அமைந்த இரண்டாவது மக்களவையில் 494 இடங்களில், 371 இடங்களையும், 1962-இல் அமைந்த மூன்றாவது மக்களவையில் 494-இல் 361 இடங்களையும் காங்கிரஸ் பெற்றிருந்தது. பண்டித ஜவாஹர்லால் நேரு என்கிற பேராளுமை மிக்க பிரதமர் இருந்தும்கூட, மிகக் குறைந்த எண்ணிக்கை பலத்துடனான எதிர்க்கட்சி வரிசையினர் தங்களது வாதத் திறமையாலும், சாதுர்யத்தாலும் அமளியிலும் வெளிநடப்பு செய்வதிலும் ஈடுபடாமல், பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களுக்கும் தங்களது சொல்லாற்றலால் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
  • எதிர்க்கட்சிகள் கோரும் விதத்தில் விவாதம் அமைத்துத் தரவும், அவர்கள் விரும்பும் விதத்தில் அவையை நடத்தவும் ஆளுங்கட்சி கடமைப்பட்டதல்ல. எதிர்க்கட்சிகள் கருத்தைப் பதிவு செய்யும் உரிமை பெற்றவையே தவிர, நாட்டை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு.
  • இன்றைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயவு செய்து அரைநூற்றாண்டுக்கு முற்பட்ட விவாதங்களை நாடாளுமன்ற நூலகத்துக்குச் சென்று படித்துப் பார்த்துத் தெளிவு பெற வேண்டும். அங்குசம் சிறிதாக இருக்கலாம், பெரிய யானையை அடக்கிவிட முடியும். இதுகூடத் தெரியாமல் இருக்கிறதே எதிர்க்கட்சியினருக்கு...

நன்றி: தினமணி  (03-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்