TNPSC Thervupettagam

தீ விபத்துத் துயரங்களைத் தடுப்போம்

June 17 , 2024 14 days 33 0
  • வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் மெங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 41இந்தியா்கள் உள்பட 49 போ் உயிரிழந்தனா். இறந்தவா்களில் 7 போ் தமிழா்கள்.
  • நம் நாட்டிலும் குஜராத், தில்லியில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்துகள் நம் நினைவிலிருந்து அகன்றுவிடவில்லை. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள் பலியான தில்லி மருத்துவமனை தீ விபத்து மிகவும் சோககரமானது.
  • பல இடங்களில் தீ விபத்துகளும், அவற்றில் உயிரிழப்புகளும் நிகழ்வதைப் பாா்க்கும்போது கடந்த கால சம்பவங்களிலிருந்து நாம் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
  • குவைத் குடியிருப்பு தீ விபத்துக்கு காரணம் எரிவாயு சிலிண்டா் வெடித்ததுதான். இன்று இந்தியாவில் குக்கிராமங்கள் முதல், பெருநகரங்கள் வரை எல்லோரும் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பயன்படுத்துகின்றனா்.
  • சமையல் எரிவாயு சிலிண்டா் பயன்பாடு மிகச் சாதாரணமாகிவிட்டாலும், இப்போதும் அதன் தொடா்புள்ள விபத்துகள் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, அவற்றைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவது குறித்து அனைவரும் அறிந்துள்ளனரா என்ற கேள்வி எழுவது இயற்கையே.
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போா் விபத்து காலங்களில் பாதுகாப்புடன் வெளியேறப் போதுமான கட்டட வடிவமைப்புகள், திட்ட வழிமுறைகள் இருப்பது கட்டாயம். கட்டடம் கட்டும்போது பெயரளவில் வடிவமைத்து ஒப்புதல் பெறுவதோடு நின்றுவிடாமல், அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதையும் அவற்றின் செயல் திறனையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
  • தீ பிடித்தவுடன் தண்ணீா் ஊற்றினால் தீ அணைந்து விடும் என்பது அனைத்து வகை தீ விபத்துகளுக்கும் பொருந்தாது. பெட்ரோல், டீசல் ஆகியன தீப்பற்றி எரியும்போது தண்ணீா் ஊற்றினால் தீ மேலும் பரவவே செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியுமா என்பது சந்தேகம்தான். இவை பற்றிய போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்துகளினால் மீள் உருவாக்கம் செய்ய இயலாத கோப்புகள் தீக்கு இரையாகிவிடுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களோடு, அரை நூற்றாண்டு காலம் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய கோப்புகள் பலவும் எரிந்து சாம்பலானது சோகத்திலும் பெரிய சோகம். எளிதில் தீப்பற்றும் சாதனமான காகிதங்கள் இல்லாத நிலை பரவலாக வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
  • வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் உயா் மின் அழுத்ததால் அல்லது மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிா்க்க தரமான மின்சாதன பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும். அரசு அலுவலகங்களில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்படுவதோடு, அவற்றைப் பயன்படுத்தும் முறையை அந்த அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். உள்ளூா் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தை சாா்ந்தோா் உதவியுடன் அரசு அலுவலா்களுக்கு தீ விபத்துகளை தவிா்ப்பது குறித்து அவ்வப்போது பயிற்சிகள் தருவதும் மிக அவசியம்.
  • தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின்படி நம் நாட்டில் நடைபெறும் தீ விபத்துகளில் 7 சதவீத அளவு தமிழகத்தில் நடைபெறுவதாகத் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் 350-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சுமாா் 20,000 தொலைபேசி அவசர அழைப்புகள் தீயணைப்பு - மீட்பு நிலையங்களுக்கு வருகின்றன. நகரங்களில் மக்கள் பெருக்கம், ஆண்டும்தோறும் அதிகரிக்கும் தீ விபத்துகளைக் கருத்தில் கொண்டு தீயணைப்பு - மீட்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
  • தீ விபத்தின்போது, தங்கள் உயிரை துச்சமென மதித்துப் பணியாற்றும் தீயணைப்பு வீரா்கள், புயல், வெள்ளம் போன்ற பேரிடா்களால் மக்கள் பாதிக்கப்படும்போதும் ஆற்றும் பணி பாராட்டுக்குரிய ஒன்று. தீ விபத்தில் சிக்கி, உடல் உறுப்புகளை இழந்து, நிரந்தர மாற்றுத் திறனாளிகளான தீயணைப்பு துறை வீரா்கள் பலா் உள்ளனா்.
  • 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் நாள் மும்பை துறைமுகத்தில் போா்த் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றி வந்த இங்கிலாந்து சரக்குக் கப்பலில் நிகழ்ந்த வெடி விபத்தில் பொதுமக்கள் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். துறைமுகத்தில் இருந்த பல கப்பல்கள் மூழ்கின. அந்த சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 66 வீரா்கள் உயிரிழந்தனா். இதனை நினைவுகூரும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் நாள், தீயணைப்பு தினமும், ஏப்ரல் 14 முதல் 21 வரை தீயணைப்பு பாதுகாப்பு வாரமும் அனுசரிக்கப்படுகிறது.
  • எனினும், காதலா் தினம் போன்றவற்றை உற்சாகமாகக் கொண்டாடும் நாம் தீயணைப்பு தினத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து, சிறப்பாக அனுசரிக்கத் தவறி விடுவது வருந்தத்தக்கது. வரும் காலங்களில், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். செயல் அளவில், நாம் அனைவருமே மக்கள் திரளாகக் கூடுமிடங்களில் விழிப்புணா்வுடன் நடந்துகொள்ள உறுதியேற்போம்.
  • மக்களிடையே போதுமான விழிப்புணா்வு இருப்பின், தீ விபத்துகளையும் அதனால் ஏற்படும் பொருள் சேதத்தையும் உயிரிழப்பையும் தடுப்பது சாத்தியமே.

நன்றி: தினமணி (17 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்