TNPSC Thervupettagam

தீட்சிதர்கள் சொத்தா சிதம்பரம் நடராஜர் கோயில்

June 30 , 2023 561 days 352 0
  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சன தரிசனத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் பொன்னம்பலமாகிய  'கனகசபை'யில் ஏறி வழிபடுவது வழக்கமாக இருக்கும் நடைமுறையாகும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, அந்தக் கோயிலை நிர்வகிக்கும் பூசகர்களாகிய தீட்சிதர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். 2023 ஜூன் 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி வழிபடத் தடை விதித்து, அது தொடர்பான அறிவிப்புப் பதாகையை அவர்கள் வைத்தனர்.
  • இதற்கு எதிர்ப்பு எழுந்த சூழலில், கடந்த ஜூன் 24ஆம் தேதி இந்து சமய அறநிலைத் துறையினர் காவல் துறையினர் உதவியோடு பதாகையை அகற்றச் சென்றபோது, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், ஜூன் 26ஆம் தேதி மாலை காவல் துறையினரின் பாதுகாப்புடன் அந்தப் பதாகை அகற்றப்பட்டது. பதாகையை அகற்றிய பிறகும் கனகசபையில் ஏறி வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் அங்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக ஜூன் 28 காலை 7 மணி முதல் கனகசபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபாடு நடத்தினர். தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களுடன் சிதம்பரம் கீழ வீதியிலிருந்து ஊர்வலமாகச் சென்று, கனகசபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர்.
  • பின்னர் இதையொட்டி உருவான விவாதங்கள் கோயில் நிர்வாகம், வரலாறு தொடர்பான விவாதத்துக்கு இட்டுச்சென்றன.

தீட்சிதர்கள் சொத்தா கோயில்?

  • இந்தப் பிரச்சினையை ஒட்டிப் பொதுவெளியில் எழுந்துள்ள விவாதத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. அதில் முக்கியமான ஒன்று, 'சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது தீட்சிதர்களின் தனிச் சொத்து. இதன் பொருட்டு அதன் நிர்வாகத்தை தீட்சதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும்' என்பதாகும். இது அபத்தமான கருத்து.
  • சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவந்துள்ளது. அதற்கு முன்னரே - நூறாண்டுகளுக்கு முன்னரே - 1885ஆம் ஆண்டிலேயே இக்கோயில் தொடர்பாக  வழக்கு நடந்திருக்கிறது. அந்த வழக்கில் 1888ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள் முத்துசாமி அய்யரும், ஷெப்பர்ட் என்பவரும் “சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்று சொல்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளனர் (judgment dated 17th March, 1890, in A.S.Nos.108 and 159 of 1888). அதன் பின்னர் நடைபெற்ற பல்வேறு வழக்குகளிலும் நீதிமன்றங்களால் அதே நிலைதான் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அந்தக் கோயிலின் நிர்வாக சீர்கேடுகள் குறித்துப் பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே நிர்வாக அதிகாரியை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு நியமித்தது.
  • இந்த நடவடிக்கை 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மறுஉறுதி செய்யப்பட்டது. அந்த முடிவை எதிர்த்து தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும் நிர்வாக அதிகாரியை நியமித்தது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 2009 பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. இந்தச் சூழல் 2014இல் மாறியது.
  • உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற தீட்சிதர்கள் தங்களுக்குச்  சாதகமான தீர்ப்பை அங்கே பெற்றனர். 'சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க அதிகாரியை நியமித்தது செல்லாது' என உச்ச நீதிமன்றம் 2014இல்  தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் மூலம் முன்னதாக எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அதிமுக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லாததாக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தீட்சிதர்களுக்கு ஆதரவாக மேற்கொண்ட நிலைப்பாடும், அது தமிழக அரசின் சட்டப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கமும் அந்தத் தீர்ப்பு அவ்வாறு வர முக்கியமான ஒரு காரணமாக இருந்தது என்ற விமர்சனங்கள் அப்போதே எழுந்தன.
  • இதன் பின்னர் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்த காரணத்தால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவோ, புதிதாக சட்டம் இயற்றவோ அவர்கள் முன்வரவில்லை.

உண்மை என்ன?

  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இன்றைய திமுக அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஆராய்வது ஒருபுறம் இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள்தான் நிர்வகித்துவருகின்றனர் என்று கூறப்படும் வாதம் எந்த அளவுக்கு சரி என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.
  • “சிதம்பரம் கோயில் சுற்று மதில்கள் கட்டப்பட்டு அவற்றில் கல்வெட்டுகள் செதுக்கப்பட்ட கி.பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் குறித்த செய்திகள் பெரும்பாலும் புராணக் கதைகள் மூலமாகவே அறியக் கிடைக்கின்றன” எனச் சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர் பால் யங்கர் குறிப்பிடுகின்றார் (The Home of Dancing Sivan, OUP, 1995). அப்படிச் சொல்லப்படுகிற கதைகளில் மூன்று கதைகள் முக்கியமானவை என அவர் குறிப்பிடுகின்றார்.
  • வங்க தேசத்திலிருந்து வந்த ஹிரண்ய வர்மன் என்ற மன்னனின் தோல் வியாதி சிதம்பரத்தில் இருந்த பொய்கையில் மூழ்கி எழுந்ததால் குணமான கதை ஒன்று; சிதம்பரத்துக்கு வந்த இலங்கை மன்னன் ஒருவனின் ஊமை மகளை மாணிக்கவாசகர் பேசச் செய்ததாக கூறப்படும் கதை இரண்டு; கோச்செங்கணான் என்ற சோழ மன்னனின் பெற்றோர் குழந்தையில்லாத ஏக்கத்தோடு சிதம்பரம் வந்து வணங்கி பிள்ளைப் பேறடைந்த கதை மூன்றாவது. இந்தக் கதைகள் மூன்றும் சைவ சமய மேன்மையை அற்புதங்களோடு (Miracles) இணைத்துப் பேசுவது கவனிக்கத்தக்கது ஆகும்.

சோழர்களும் கோயிலும்

  • முற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி. 850 வாக்கில் விஜயாலயச் சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி மீண்டும் சோழராட்சியைப் பெரிய அளவில் நிறுவுவதற்கு முன்னர், சிதம்பரம் மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளில் சோழர்களது பாத்திரம் என்னவாக இருந்தது என்பது பற்றி வரலாற்றில் தெளிவான செய்திகள் இல்லை. விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த சோழன் காலத்தில்தான் (கி.பி. 871 - 907) சோழப் பேரரசுக்கான அரசுக்கான வலுவான அடித்தளம் போடப்பட்டது. அதற்கு முன்னர் நிலவியிருந்த 'நாடு' என்ற அமைப்பு பெரும்பாலும் வேளாளர் குழுக்களால் நிர்வகிக்கப்பட்டுவந்தது. அங்கே கோயிலே மையமாக விளங்கிவந்தது.
  • இந்த அமைப்பு அப்பர், சுந்தரர், சம்பந்தர் முதலானோர் தமது மதப் பிரச்சாரத்தைப் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்வதற்கு வசதியாக இருந்தது. அவர்கள் சைவத்துக்கு அரசு ஆதரவைப் பெற்றது மட்டுமின்றி ஊர் ஊராகச் சென்று மக்களிடையே சமயப் பிரச்சாரத்தைச் செய்தனர். சோழப் பேரரசு உருப்பெற்று சைவச் சார்பான மத நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடுவதற்கான அடிப்படையை அவர்களது மதப் பிரச்சாரம் ஏற்படுத்தித் தந்தது.

கலிங்கத்துப் பரணியின் விவரிப்பு

  • ஆதித்த சோழன் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதைச் சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினார் என பால் யங்கர் குறிப்பிடுகின்றார். ஆதித்தனின் பேரனான சுந்தர சோழனால் எழுதப்பெற்ற அன்பில் செப்பேடுகளில் ஆதித்தனுக்கும் சிதம்பரத்துக்குமான தொடர்பு விவரிக்கப்பட்டுள்ளது. ஆதித்தன் பல்வேறு சைவக் கோயில்களைக் கட்டினார். படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவரும் அவரது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.
  • சோழ அரசர்களின் சமய நடவடிக்கைகளில் ஆதித்தன் காலத்தில்தான் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. சைவக் கோயில்களை மட்டுமே அவர் கட்டினார். அக்கோயில்களைக் கட்ட பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளை அழைத்து வந்தார். அவருக்குப் பிறகு வந்த பராந்தகனும் தந்தை வழியிலேயே சென்றார். பல்வேறு நாடுகளின் மீது போர் தொடுத்தது மட்டுமின்றி, சிதம்பரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்திலும் அவர் தனது தந்தையையே பின்பற்றினார். ராஷ்டிரக் கூடர்களால் தக்கோலத்தில் கி.பி. 949இல் அவர் தோற்கடிக்கப்பட்டார். அந்தப் போரில் பட்டத்து இளவரசனான ராஜாதித்தன் கொல்லப்பட்டார். இந்தத் தோல்வி சோழ அரசர்களின் போக்கையே மாற்றி அமைத்தது. அதற்குப் பின்னர் வந்த சோழ மன்னர்கள் சிதம்பரத்தை வேறுவிதமாகப் பார்த்தனர்.  ராஜராஜன் ஆட்சிக்கு வரும் வரை (கி.பி.985) சோழ அரசில் பெரும் குழப்பமே நிலவியது.
  • ராஜராஜன் காலத்தில் பெரும் செல்வாக்கான  இடத்தைச் சோழ அரசு அடைந்தது. அவரது மகன் ராஜேந்திரன் காலத்தில் தென்னகத்தின் பேரரசாகத் திகழ்ந்தது. ஆயினும், ராஜேந்திரனுக்குப் பிறகு (1012 - 1044), குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வரும் வரை (1070 - 1120) சோழர் அரசில் இறக்கம் இருந்தது. குலோத்துங்கன் பதவியேற்பதற்குப் முன்னர் சோழ நாடு உள்நாட்டுக் குழப்பங்களாலும், குறுகிய மன்னர்களின் கலகங்களாலும் அல்லலுற்றது. இதைக் கலிங்கத்துப்பரணி இப்படியாக விவரிக்கிறது:

“மறையவர் வேள்விக்குன்றி மனுநெறி யனைத்து மாறித்

துறைகளோ ராறுமாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே” (245)

“சாதிகளொன்றோ டொன்று தலைதடுமாறி யாரும்

ஓதிய நெறியினில்லா தொழுக்கமு மறந்து போயே” (246)

  • அதுவரை சோழ நாட்டை ஆண்டிருந்த ஆதிராஜேந்திரன் 1070இல் இறந்துபோன பின்பு பட்டத்து இளவரசர் எவரும் இல்லாததால், கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனும் சாளுக்கிய வம்சாவழியினருமாகிய  குலோத்துங்க சோழனுக்கு முடி சூட்டப்பட்டது. ஐம்பது ஆண்டு காலம் நடைபெற்ற அவரது ஆட்சியில் மீண்டும் சிதம்பரம் முக்கியத்துவம் பெறலாயிற்று. அவர் காலத்தில் சைவ, வைணவ கோயில்களில் செதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் அவரது நிர்வாக முறையின் சிறப்புகளைக் கூறுகின்றன.

குலோத்துங்கனின் நடவடிக்கை

  • சிதம்பரம் தொடர்பாக குலோத்துங்கன் இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கம்போடிய மன்னன் தனக்கு அனுப்பிய அபூர்வமான ரத்தினக் கல்லினை சிதம்பரத்தில் உள்ள எதிரம்பலத்தில் வைக்கச் செய்தார். அவரது முன்னாள் படைத் தலைவனான நரலோக வீரன் என்பவரின் தலைமையின் கீழ் சிதம்பரம் கோயிலில் பல்வேறு கட்டிடப் பணிகளை மேற் கொண்டான். அப்போது, கோபுரங்களும், மதில் சுவர்களும், அம்மன் கோயில்களும் கட்டப்பட்டன. இவை மட்டுமின்றி கோயில் காரியங்களுக்கு என ஏராளமான நிலமும் தானமாகத் தரப்பட்டது. குலோத்துங்கனின் கீழிருந்த சிற்றரசர்கள் பலரும்கூட சிதம்பரம் கோயிலுக்கு தானங்களை வழங்கினர். இந்தக் காலக்கட்டத்தில்தான் இக்கோயிலில் பூசை செய்துகொண்டிருந்த தீட்சதர்கள் செல்வாக்கு பெறத் தொடங்கினர்.
  • குலோத்துங்கனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த விக்கிரம சோழன் (1118 - 1135) துவக்கத்திலிருந்தே சிதம்பரத்தோடு நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். நரலோக வீரன் தலைமையில் நடந்த கட்டுமானப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டிருந்த விக்கிரமன், சிதம்பரத்தைச் சிறு கோயில்களை நிர்வகிக்கும் மையமாக மாற்றினார். பிற கோயில்களுக்கு அவர் தந்த கொடைகள் பற்றிய செய்திகளையும் சிதம்பரம் கோயிலில் கல்வெட்டுகளாகச் செதுக்கி வைத்தார். கி.பி. 1128க்குப் பிறகு சிதம்பரத்திலிருந்த அரண்மனையில் இருந்துதான் அவர் அரசாணைகளைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது.
  • விக்கிரமனுக்குப் பின்னர் வந்த இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 - 1150) சிதம்பரத்தில்தான் முடிசூட்டிக்கொண்டார். அவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் ராஜராஜனும், இரண்டாம் ராஜாதிராஜனும் அவ்வளவு சிறப்பு வாய்ந்த மன்னர்களாகக் கருதப்படுவதில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்றாம் குலோத்துங்கன் (1178 - 1216) பல போர்களில் வென்றார். அவருக்குப் பின்னர் சோழப் பேரரசு வீழ்ச்சியுறத் தொடங்கியது.

இருக்கிறதா வரலாற்றுச் சான்றுகள்?

  • பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பரத்தைக் கோப்பெருஞ்சிங்கன் என்ற சிற்றரசர் தனது ஆளுகைக்குக் கீழே கொண்டுவந்தார். அவரது ஆட்சிக் காலத்தை நிர்ணயிப்பதில் வரலாற்று அறிஞர்களிடையே சற்று குழப்பம் நிலவுகிறது. சிதம்பரத்தில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டு 1231ஆம் ஆண்டில் அவரது ஆட்சிக்காலம் ஆரம்பமாகி இருக்கலாம் எனப் பால் யங்கர் குறிப்பிடுகிறார். இந்த அரசர் பல்லவர் மரபைச் சேர்ந்தராவார். இதற்கு சற்றுப் பின்னால் சோழப் பேரரசை வென்ற சுந்தர பாண்டியன் சிதம்பரத்தில் பல பணிகளை மேற்கொண்டார். இப்படியாக, சோழர், பல்லவர், பாண்டியர் என மாறி மாறி சிதம்பரம் கோயிலின் நிர்வாகத்தைக் கைப்பற்ற அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. பாண்டியர்களின் ஆளுகை அங்கே நீடிக்கவில்லை எனினும் அவர்கள் அந்தக் கோயிலின் மரபின் மீது ஏற்படுத்திய தாக்கம் நீடித்தது.
  • “பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவ்வாறாக அரசர்கள் இடையே ஏற்பட்ட பகையானது சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் ஆதிக்கம் வலுப்பெற வழிவகுத்தது. அவர்கள் பூசைகள் செய்வது மட்டுமின்றி கோயில் நிர்வாகத்தையும் தமது கையில் எடுத்துக் கொண்டனர்” எனக் குறிப்பிடும் பால் யங்கர் இந்தக் காலக்கட்டத்தில்தான் சிதம்பரத்தை வடஇந்திய வைதீக மரபோடு முழுதுமாகப் பிணைத்து சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்தலபுராணம்’ எழுதப்பட்டது என்கிறார். ‘சிதம்பர மஹாத்மியம்’ என்ற அந்த நூலில், அது எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்ற குறிப்பு இல்லாவிட்டாலும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில்தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை அதனுள் பேசப்படும் தகவல்களைக் கொண்டு பால் யங்கர் உறுதி செய்கிறார்.
  • சோழப் பேரரசுக்குப் பின்னர் வந்த விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிதம்பரம் கோயில் தனது முக்கியத்துவத்தை இழந்தது. கோவிந்தராசப் பெருமாள் கோயிலை இப்போதுள்ள இடத்தில் நிறுவும்படி கி.பி. 1539ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவிர சிதம்பரம் கோயில் குறித்து விஜயநகர மன்னர்கள் அதிகம் அக்கறை காட்டவில்லை. இக்காலத்தில் திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் ஆகியவையே முக்கியமான கோயில்களாக மதிக்கப்பட்டன. வடக்கிலிருந்து மதுரைக்குச் செல்லும் முக்கிய பாதையில் சிதம்பரம் இல்லை என்பது அது புறக்கணிக்கப்பட ஒரு காரணம். அரச ஆதரவு சைவ மதத்திலிருந்து வைணவ மதத்தை நோக்கி மாறியது இன்னொரு முக்கிய காரணமாகும்.
  • விஜயநகரப் பேரரசுக் காலத்தில், அரசின் பிடியிலிருந்து விடுபட்டு சுயேச்சையாக இருந்த தீட்சிதர்கள் அந்தக் கோயில் முழுவதையும் எவ்விதக் குறுக்கீடும் இன்றி தங்களது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து தாங்களே அக்கோயிலின் உரிமையாளர்கள் என்பதுபோல் ஆக்கிக் கொண்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடராஜர் கோயில் இருந்தது என்பதற்கோ, தீட்சிதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கோயிலுடன் தொடர்புகொண்டிருந்தனர் என்பதற்கோ வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடையாது

நன்றி: அருஞ்சொல் (30  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்