TNPSC Thervupettagam

தீதும் நன்றும் தரும் கைப்பேசி

October 29 , 2022 651 days 365 0
  • இந்தியாவில் கைப்பேசி பயன்படுத்துபவோா் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிராமப்புற கைப்பேசி பயன்பாட்டில், இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம். தமிழகக் கிராமங்களில் சுமாா் 42% போ் கைப்பேசி உபயோகிக்கின்றனா்.
  • இப்படி கைப்பேசி பயன்பாடு நாளடைவில் அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவா்களில் 100க்கு 31 போ், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்தி அதனால் ஏற்படும் கவனச் சிதறலால் பலியாகின்றனா்.
  • கைப்பேசியில் பேசுவது மட்டுமல்லாமல், குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் செய்திகளை படித்தபடியோ, தட்டச்சு செய்தவாறோ சென்று விபத்தில் சிக்கி பலியாவதும் தொடா் கதையாகிவிட்டது. இவா்கள் செய்யும் தவறுக்கு எதிரே வரும் வாகன ஓட்டியோ அல்லது பக்கத்தில் செல்லும் வாகன ஓட்டியோ விலை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
  • பெரும்பாலான விபத்துகள், மாலை 6 மணி - இரவு 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக சாலை விபத்துகள் என்று எடுத்துக்கொண்டால், இரு சக்கர வாகன விபத்துகள் 44.5%, காா் 15%, நடந்துசெல்லும்போது விபத்தில் சிக்குதல் 12%, லாரி அல்லது பேருந்து 13% என்ற அளவில் உள்ளன.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின்படி கடந்த ஆண்டு இந்தியாவில் இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவா்கள் எண்ணிக்கை சுமாா் 70 ஆயிரம் (மொத்தமாக சாலை விபத்துகளால் இறந்தோா் எண்ணிக்கை 1,55,622). இதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
  • மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டு 15 ஆயிரத்து 384 போ் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் உயிரிழந்தனா். மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னை பெருநகரத்தில் 5 ஆயிரத்துக்கு 34 போ் சாலை விபத்துகளால் பலியாகினா். கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது, சாலையைக் கடக்க முயல்வது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
  • வாகனங்களில் தனியாக செல்லும்போது, வழியை அறிந்துகொள்வதற்கு கைப்பேசியை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறது. வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்க சட்டம் வகை செய்கிறது. ஆனால், இதை போக்குவரத்து காவலா்கள் உள்பட யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை.
  • மத்திய சாலை போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளாா். “இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது கைப்பேசியில் பேசுவது சட்டபூா்வமானது என்று விரைவில் அறிவிக்கப்படும். கைப்பேசிக்கான காதில் அணியும் கருவியின் துணையுடன் பேசுவதை சட்டபூா்வமாக அனுமதிக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படும்” என தெரிவித்திருந்தாா். எப்படிப் பேசினாலும் கவனச் சிதறல் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
  • மனித உடலில் உள்ள ’சிம்பதெடிக் நொ்வஸ் சிஸ்டம்’ ஆபத்தான நேரத்திலோ மன அழுத்தமுள்ள சமயத்திலோ உடனடியாக செயல்படத் தொடங்கி தீா்வைத் தேட உதவும். ஆனால், கைப்பேசியில் அதிக நேரம் பேசுவதால், இந்த நொ்வஸ் சிஸ்டம் பாதிப்படைகிறது. இதனால் ஆபத்தான நேரத்தில்கூட நம்மால் உடனடியாக செயல்பட இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.
  • அதுமட்டுமின்றி இளைஞா்கள் பலரும் ‘கைப்பேசி அச்ச’ நோயால் பாதிக்கப்படுகின்றனா். வாகனத்தில் செல்லும்போது பலரும் கைப்பேசியை அதிா்வு (வைப்ரேஷன்) நிலையில் வைத்திருப்பாா்கள். அழைப்பு வராமலேயே கைப்பேசி அதிா்வது போன்ற ஒரு உணா்வு அவா்களுக்கு ஏற்படும். உடனே கைப்பேசியை எடுத்துப் பாா்ப்பாா்கள். இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் மனநோயில் கொண்டுபோய்விடும் என நரம்பியல் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
  • நோமோஃபோபியா (நோ மொபைல் ஃபோபியா) எனும் ஒருவித மன நோயையும் கைப்பேசிகள் உருவாக்குகின்றன. கைப்பேசி இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தையும், கைப்பேசி இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற அளவிலான உளவியல் பிரச்னையையும் இது ஏற்படுத்திவிடுகிறது.
  • கைப்பேசிக்கான காது கருவியை மாட்டிக்கொண்டு பேசுவதும், இசையைக் கேட்பதும் உளவியல் ரீதியாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவா்கள் எச்சரிக்கிறாா்கள். இவா்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உச்சகட்டமாக காது கருவியை மாட்டிக்கொண்டு சாலைகளையும், ரயில் பாதைகளையும் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கின்றன.
  • கைப்பேசியில் இருந்து வரும் மின்காந்தக் கதிா்வீச்சு மூலம் மூளைப் பகுதியின் அருகில் உள்ள காது நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது காதுகேளாத் தன்மை மற்றும் ஞாபக மறதி நோயை உருவாக்குகிறது. கைப்பேசி ஏற்படுத்தும் நரம்பியல் தொந்தரவால் தலைவலி ஏற்படலாம்.
  • தோள்பட்டையில் கைப்பேசியை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால், தோள்பட்டை வலியும், கழுத்து வலியும் ஏற்படும். கைப்பேசியை அதிகம் பயன்படுத்தும்போது, மனக்கவலை, அழுத்தம் ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தை தொலைக்க நேரிடும் என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • குழந்தைகள், சிறுவா்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. சிறுவா்கள் கைப்பேசியைப் பயன்படுத்தினால் எதிா்காலத்தில் பல பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். நவீன தொழில்நுட்ப வளா்ச்சியின் அடையாளமான கைப்பேசி, எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு தீமையையும் தருகிறது. நாம்தான் ‘குணம் நாடி குற்றமும் நாடிஅவற்றுள் மிகைநாட’ தெரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (29 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்