TNPSC Thervupettagam

தீராத எழுத்து நதி

May 19 , 2024 61 days 109 0
  • இந்திய ஆங்கில இலக்கியம்-சிறார்இலக்கியம் பற்றிப் பேசப் புகும்போது ரஸ்கின் பாண்ட்டைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. மிகவும் இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட ரஸ்கின் பாண்டுக்குஇன்றுடன் (மே 19) 90 வயது நிறைவடைகிறது. எழுத்து ரீதியிலோ 75ஆண்டுகளைத் தொட்டுவிட்டார்.
  • மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தும் தனது நூல்கள் அனைத்தையும் வணிகப் பதிப்பகங்களுக்குக் கொடுக்காத பழக்கம் ரஸ்கின் பாண்டிடம் உண்டு. என்னுடைய பள்ளி நாள்களிலேயே நேஷனல் புக் டிரஸ்ட் வழியாக அவருடைய புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய புத்தகங்கள் எனக்குத் துணையாக வந்திருக்கின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரையும் வசீகரிக்கக்கூடிய எளிமையான, சுவாரசியமான எழுத்துப் பாணி அவருடையது.

நிழலும் நிஜமும்:

  • கதைகளை நிஜத்தில் நடப்பதுபோன்று, யதார்த்தத்திலிருந்து பெரிதும் விலகாத வகையில் படைக்கக்கூடிய திறனைப் பெற்றிருக்கும் ரஸ்கின் பாண்ட், அதே நேரத்தில் தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைக் கதை போலவே சுவாரசியமாக விவரிக்கும் கட்டுரைகளையும் வடிக்கக்கூடிய அரிதான கலை கைவரப்பெற்றவர். அவரது கதைகளில் வரும் ரஸ்டி, கென் மாமா, தாத்தா, அத்தை, பாட்டி, வீட்டு வேலையாள் உள்ளிட்ட கதாபாத்திரங்களை அவர் சித்தரித்துள்ள விதம் தனித்துவமானது. ஒருவேளை கதைகளை நாம் மறக்க நேரிட்டாலும், இந்தக் கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களைக் கவனமாகச் செதுக்கியிருப்பார்.
  • ‘சட்டில் காமெடி’ (subtle comedy) எனும் நுட்பமான நகைச்சுவை ரஸ்கின் பாண்டின் தனித்த அடையாளம். அவருடைய பெரும்பாலான கதைகளில் ஊடுபாவாகக் கலந்திருக்கும் நகைச்சுவையைப் புன்னகையுடன் ரசிக்க முடியும். ஒரேயொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ‘ரோட்ஸ் டு முசௌரி’நூலில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையில் டெல்லியை நோக்கி ரஸ்கின் காரில் பயணித்துக்கொண்டிருப்பார். அந்தக் காரின்ஓட்டுநர் எந்த வேகத்தில் காரை ஓட்டினார் என்றால், விமான ஓடுதளத்தில் டேக்ஆஃப் செய்வதற்கான வேகத்துடனே காரை ஓட்டிக்கொண்டிருந்தார் என ரஸ்கின் கூறியிருப்பார். தேவையற்று அதிவேகத்தில் ஓட்டினார் என்பதை இதைவிடக் கிண்டலடித்து எழுத முடியாது.

ரஸ்கினும் ரஸ்டியும்:

  • ஆங்கிலோ இந்தியரான ரஸ்கின் பாண்டின் தந்தையும் தாயும் அவரது எட்டு வயதிலேயே விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு தந்தையுடன் மிகுந்த பாசத்துடன் வசித்தாலும், 10 வயதிலேயே தந்தையையும் மலேரியாவுக்குப் பலிகொடுத்தார். சிறு வயதில் சொந்த வாழ்க்கையில் நேரிட்ட இந்த விஷயங்களால் அவரது மனதில் ஏற்பட்ட வடுவும் வலியும் அவரது கதைகளில் பெருமளவு பிரதிபலிக்கப்பட்டதில்லை. மாறாக நகைச்சுவையும் சாகச உணர்வுமே அவருடைய பெரும்பாலான கதைகளில் வெளிப்பட்டுள்ளன.
  • அவருடைய கதாபாத்திரங்களில் பெரும் புகழ்பெற்றது சாகசக்காரச் சிறுவன்/இளைஞன் ரஸ்டி. இந்தக் கதாபாத்திரம் பல வகைகளில் ரஸ்கின் பாண்டினுடைய பிரதிபலிப்பு எனலாம். ரஸ்டியை மையமாகக் கொண்ட கதைகள், நாவல்களில் அவரது தன்வரலாற்றுத் தாக்கம் உண்டு. அவரது முதல் நாவலான ‘தி ரூம் ஆன் தி ரூஃப்’ பின் நாயகனும் ரஸ்டிதான். ரஸ்டி கதைகள் பல பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அவை தூர்தர்ஷனில் ஒரு தொடராகவும் வெளிவந்துள்ளன.
  • உண்டு உறைவிடப் பள்ளியிலிருந்து, பிறகு காப்பாளர் ஜானிடமிருந்து ஓடிப்போவதை ரஸ்டி பெரிதும் விரும்புகிறான். உலகை அறிந்துகொள்ளவும் அனுபவித்து ரசிக்கவும்விரும்புகிறான். குறிப்பாக, டேராடூனில் இந்தியர்கள் வாழும் பகுதிக்குப் போகவும் அங்கிருப்பவர்களை நட்பாக்கிக் கொள்ளவும் அவன் விரும்புகிறான். ஒரு வகையில் ரஸ்கினின் ஆசைகள்தான் ரஸ்டி கதாபாத்திரமாகப் பரிணமித்திருக்கின்றன என்று கூறலாம்.

இயற்கையின் புதல்வன்:

  • குழந்தைகளிடம் இயல்பூக்கமாகக் காணப்படும் உயிரினங்கள், தாவரங்கள் மீதான நேசத்தைத் தனது பல கதைகளில் ரஸ்கின் விவரித்திருக்கிறார். வண்டுகளை ஓட்டப்பந்தயத்தில் விடுவது தொடங்கி, குழந்தைகளே உருவாக்கும் விலங்குக் காட்சியகம்வரை குழந்தைகள்-உயிரின நேயம் தொடர்பாகப் பல்வேறு சுவாரசியமான கதைகளை அவர் எழுதியிருக்கிறார். செல்லப்பிராணிகள்-மனிதர்கள் இடையிலான உறவு குறித்த அவருடைய கதைகள் ஆத்மார்த்தமான உறவுக்காகவும் அறியப்பட்டவை.
  • When grandfather tickled a tiger’ என்கிற கதையில் காட்டில் கைவிடப்பட்ட ஒரு வேங்கைப் புலிக்குட்டியை வேட்டைக்குப் போகும் தாத்தா எடுத்துவந்து, வீட்டில் வைத்து வளர்ப்பார். திமோதி என்கிற பெயர் வைக்கப்பட்ட அந்தக் குட்டி வளர்ந்தவுடன் தன் இயல்பான வேட்டைத் திறன்களை மனிதர்களிடம் வெளிப்படுத்தத் தொடங்கும். அப்போது, திமோதியை லக்னோ விலங்குக் காட்சியகத்துக்குக் கொடுத்துவிடுவார்கள். சில மாதங்களுக்குப் பிறகு லக்னோ செல்லும் தாத்தா, காட்சியகத்தில் திமோதி இருக்கும் கூண்டுக்குச் செல்வார். வழக்கமாகச் செய்வதுபோல அதன் தலையைப் பாசமாகத் தடவிக்கொடுப்பார். திமோதியும் அவருடைய கையை நக்கும். காட்சியகத்துக்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் வாய்பிளந்து அதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் வரும் காட்சியகப் பணியாளர், “சார் நீங்கள் கொடுத்த புலி, காய்ச்சலால் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டது. இது ஆக்ரோசமான வேறு புலி” என்று எச்சரிப்பார். ஆனால், அந்தப் புலியும் தாத்தாவும் எந்தச் சலனமும் இல்லாமல் இயல்பாக நகர்ந்து செல்வார்கள்.
  • இப்படி உயிரினங்கள் பற்றி மட்டுமல்லாமல் பறவைகள், காடுகள், தாவரங்கள், மலர்கள் எனத் தன்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அம்சங்களைப் பற்றிச் சலிக்காமல் எழுதித் தீர்த்தவர் ரஸ்கின். இமயமலை அடிவாரத்தில் உள்ள டேராடூன், சிம்லா, மசூரி என மலை ஊர்களிலேயே அவருடைய வாழ்க்கை அமைந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அழுத்தமான சித்திரம்:

  • வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் ரஸ்கினை ஒப்பிடுவதாக இருந்தால், பிரிட்டன் எழுத்தாளர் ரோல் தாலுடன் ஒப்பிடலாம். இருவருமே சிறார்களுக்கு எழுதிப் புகழ்பெற்றவர்கள். பெரியவர்களுக்கும் கணிசமாக எழுதியிருக்கிறார்கள். இருவருமே நகைச்சுவை, சாகசக் கதைகள், சஸ்பென்ஸில் தனி முத்திரை பதித்தவர்கள். பெரியவர்களுக்காகத் திகில் கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய குழந்தைப் பருவம் குறித்த சுவாரசியமான பதிவுகளை இருவருமே நிறைய எழுதியிருக்கிறார்கள்.
  • ரஸ்கின் பாண்ட் தீவிரத்தன்மை இல்லாத எழுத்தாளர் என்றும், அவருடைய எழுத்து டயரி எழுதப்படுவதைப் போன்றி ருப்பதாகவும் சில விமர்சனங்கள் உண்டு. மேம்போக்காகப் பார்க்கும்போது அவருடைய கதைகள் எளிமையாகவும் கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்கள் போலவும் தோன்றக்கூடும். சொல்லுதல் யார்க்கும் எளிது, எழுதுவது நிச்சயம் கடினமே. காரணம், அவர் விவரிக்கும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நிஜத் துக்கு நெருக்கமானவை. அதனால்தான் பரவலாக அவர் வாசிக்கப்படுகிறார்; பெரும் வாசகக் கூட்டத்தைச் சம்பாதித்திருக்கிறார்.
  • அவருடைய எழுத்து எப்படிச் சிக்கலற்ற நேர்கோட்டுப் பாணியில் அமைந்திருக்கிறதோ, அதேபோல் கதைகளிலும் கட்டுரைகளிலும் அவர் திரும்பத் திரும்ப முன்வைக்கும் அம்சம் வாழ்க்கையின் எளிய விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். இந்த வாழ்க்கை ஒரு பரிசு; என்றோ நடக்கவுள்ள பெரிய விஷயம் ஒன்றுக்காகக் காத்திருக்காமல், அன்றன்றைக்குக் கிடைக்கும் சிறிய மகிழ்ச்சிகளை அனுபவிக்கத் தொடங்குங்கள்; நன்றியுடன் இருங்கள் என்பதுதான்.
  • பிறப்பால் ஆங்கிலோ இந்தியராக இருந்தாலும் இந்தியாதான் தனது மண் என்கிற உந்துதல் தீவிரமாக எழுந்த காரணத்தால் பெரியம்மாவுடன் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் வசித்த பாண்ட் இந்தியா திரும்பினார். தனது எழுத்துகள் வழியாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஓர் அமரத்துவத்தை உருவாக்கினார். ஆங்கிலம் வழியாக இந்தியாவை அறிய முயல்பவர்களுக்கும் சரி, இந்தியாவிலேயே வாழ்ந்து வருபவர்களுக்கும் சரி - இந்த மண்ணின் மனிதர்கள் குறித்த ஓர் அழுத்தமான சித்திரத்தை உருவாக்கியவர்களுள் ரஸ்கின் பாண்டும் ஒருவர். அவருடைய எழுத்து நதி, தலைமுறைகளைத் தாண்டித் தொடர்ந்து பாய்ந்துகொண்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்