- ஒன்பது நிமிடங்கள் 29 நொடிகள் - டெரிக் செளவின் என்கிற வெள்ளையரான காவல்துறை அதிகாரி தனது முழங்காலால் ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாயிடின் கழுத்தில் அழுத்தி கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி மனிதாபிமானமில்லாமல் கொன்ற நிகழ்வு யாருக்கும் மறந்துவிடாது.
- அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரின் நடைபாதையில் நடந்த அந்த கொடூரமான மனித உரிமை மீறலும், காவல்துறை அத்துமீறலும், வெட்டவெளியில் நடந்த படுகொலையும், அது வெளிப்படுத்திய இன
- வெறியும் மனித இன வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாகத் தொடர்கிறது.
- ஜார்ஜ் ஃபிளாயிட் ஒரு பயங்கரவாதியோ, தப்பியோடிய கொலைகாரரோ அல்ல.
- அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு, 20 டாலர் கள்ளநோட்டை ஒரு கடையில் மாற்ற முயன்றார் என்பதுதான்.
- அது உண்மையாகவே இருந்தாலும்கூட அதற்கான தண்டனை நிச்சயமாக மரணமல்ல. அந்த தண்டனையை வழங்கும் அதிகாரம் காவல்துறைக்கு அமெரிக்க சட்டங்களால் தரப்படவும் இல்லை.
மக்கள் விரும்பிய தீர்ப்பு
- முழங்காலால் கழுத்தில் அழுத்தி காவல்துறை அதிகாரி டெரிக் செளவின், ஆப்பிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாயிடை சித்திரவதை செய்தபோது அவரிடமிருந்து எழுந்த "என்னால் மூச்சுவிட முடியவில்லையே' என்கிற மரணஓலம் ஒட்டுமொத்த கருப்பர் இனத்தையும், இனவெறிக்கு எதிரானவர்களின் மனசாட்சியையும் தட்டியெழுப்பி அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பலரைத் தெருவில் இறங்கி நியாயம் கோரி போராட வைத்தது.
- அன்றைய காவல்துறை அத்துமீறலும், இனவெறியும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவைத் தலைகுனிய வைத்தன.
- அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக இருந்த இப்போதைய அதிபர் ஜோ பைடன், ஹூஸ்டனுக்குச் சென்று ஃபிளாயிடின் உறவினர்களைச் சந்தித்தபோது அளித்த, "நான் துவேஷத்தை வளர்க்காமல், தேசத்தை நீண்டநாட்களாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் இனவெறி ரணத்தை ஆற்றுவதற்கு முயல்வேன்' என்கிற உறுதிமொழி, அவருக்கு ஆதரவான அலையை உருவாக்கி அதிபர் தேர்தலில் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.
- கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நீதிமன்றம் காவல்துறை அதிகாரி டெரிக் செளவினுக்கு ஜார்ஜ் ஃபிளாயிட் கொலைக்கான குற்றங்களை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
- மூன்று வாரத் தொடர் விசாரணையும், பத்து மணிநேரம் நீண்டு நின்ற ஜார்ஜ் பிளாயிட் படுகொலை குறித்த நீதிமன்ற வாக்குவாதங்களும் காவல்துறை அதிகாரியின் அத்துமீறலுக்கு எதிராகத் தண்டனை வழங்கியிருக்கின்றன.
- தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல மாநகரங்களில் மோட்டார் வாகனங்களில் ஒலி எழுப்பியபடி ஊர்வலம் போய் மக்கள் தீர்ப்பைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
மனம் ஏங்குகிறது
- அமெரிக்கா இனவெறியிலிருந்து இன்னும் விடுபட்டுவிடவில்லை என்பதற்கான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.
- டெரிக் செளவின் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், ஒஹையோ மாகாணத்தில் பதின்ம வயதுப் பெண் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்.
- 2014-இல் எரிக் கார்னர், மைக்கேல் பிரெளன், டமிர் ரைஸ் ஆகியோரும், 2020-இல் ப்ரியானா டெய்லர் என்பவரும் காவல்துறை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது போல ஒஹையோ பெண்ணின் கொலையும் நடந்திருக்கிறது.
- இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் குற்றச்சாட்டு விலக்கப்பட்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் சமரசம் பேசப்பட்டும் வழக்குகள் முடிவுக்கு வருவதுதான் பெரும்பாலும் வழக்கம்.
- டெரிக் செளவின் வழக்கில் அவரது தண்டனைக்காலம் அறிவிக்கப்படவில்லை என்றாலும்கூட, குறைந்தது 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அதே நேரத்தில் பைடன் அரசு அமெரிக்க மக்களவையில் நிறைவேற்றியிருக்கும் காவல்துறை மசோதா சட்டமாக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுக்கான பாதை அமையும்.
- காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான அந்த மசோதா, தேசிய அளவில் தவறுகளுக்கு காவல்துறையினர் பொறுப்பேற்பதை வலியுறுத்துவதுடன், வழக்குகளில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுவதையும் கட்டுப்படுத்துகிறது.
- மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா, மேலவையான செனட்டில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகத் தொடர்கிறது.
- ஜார்ஜ் ஃபிளாயிட் கொலை வழக்கு இந்தியாவுக்குப் பல பாடங்களை உணர்த்துகிறது.
- மே 2020-இல் நடைபெற்ற நிகழ்வுக்கு அடுத்த ஓர் ஆண்டுக்குள் அமெரிக்காவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
- ஜார்ஜ் ஃபிளாயிடின் கடைசி நிமிடங்கள் தெள்ளத்தெளிவாக செல்லிடப்பேசியில் பதிவானதால் சாட்சியம் உறுதிப்படுத்தப்பட்டது என்பது உண்மை.
- அப்படியே இருந்தாலும்கூட, இத்தனை விரைவாக விசாரணை நடந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
- அதுமட்டுமல்லாமல், காவல்துறை அதிகாரியான டெரிக் செளவினை பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கவில்லை.
- செளவின் விதிமுறைகளை மீறினார் என்று காவல்துறை தலைவரே அரசுத்தரப்பு சாட்சியாக வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
- மாறாக, இந்தியாவில் காவல்நிலைய மரணங்கள், என்கவுன்ட்டர்கள், காவல்துறை அத்துமீறல்கள் உள்ளிட்ட வெளிப்படையான சட்டமீறல்களை, காவல்துறை உயரதிகாரிகளும், அரசும் அங்கீகரித்து ஆதரிக்கின்றன என்கிற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது அல்ல.
- ஜார்ஜ் ஃபிளாயிட் வழக்கைப்போல இந்தியாவிலும் பொறுப்பேற்பு உணர்வுடன் காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து செயல்படும் காலம் எப்போது உருவாகுமோ?
நன்றி: தினமணி (28 – 04 - 2021)