TNPSC Thervupettagam

துப்புரவுப் பணியாளா் துயா் துடைப்போம்

March 6 , 2022 883 days 409 0
  • பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
  • 2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
  • 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமாா் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை - மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி - அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
  • துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 - 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
  • 2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை - மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமாா் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதம் கழிவு நீா்ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்டு ஆய்வு கூறுகிறது.
  • இரட்டைக் குழி கழிப்பறைகள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா்ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
  • இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம்.

நன்றி: தினமணி (06 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்