- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் 185இலிருந்து 195வரையிலான பாடல்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தங்களைத் தேடுகிற தத்துவப் பாடல்களாகும். இப்பாடல்கள் அனைத்தும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்தவை. ‘எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்/புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று’ என்று பொருண்மொழிக் காஞ்சிக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பொருள் தருகிறது. இப்பகுதியிலேயே எல்லாரும் அறிந்த ஔவையின் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது. ‘நாடா கொன்றோ காடா கொன்றோ/அவலா கொன்றோ மிசையா கொன்றோ/எவ்வழி நல்லவர் ஆடவர்/அவ்வழி நல்லை வாழிய நிலனே’.
- அதுபோலவே கீழ்வரும் பாடலும் ஒரு தத்துவக் கருத்தை முன்வைக்கிறது: ‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி/வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்/நடுநாள் யாமத்தும் பகலும்/துஞ்சான்/கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்/உண்பது நாழி உடுப்பவை இரண்டே/பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே/செல்வத்துப் பயனே ஈதல்/துய்ப்பேம் எனினே தப்புந பலவே’. இதன் விளக்கம், தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதல் அன்றித் தமக்கே உரித்தாக ஆட்சிசெய்து வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடையாமத்தும் நாள்யாமத்தும் துயிலாது விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழித் தானியமே. உடுக்கப்படுபவை அரையாடை, மேலாடை என இரண்டே. இவை போலப் பிற தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். ஆதலால், செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தைத் தானே நுகர்வோம் என்று கருதினால், அது பல தவறான வழிகளிலே இட்டுச்செல்லும்.
- இப்பகுதியிலேயே கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற பாடலும் உள்ளது. மேலும், கணியன் பூங்குன்றனின் பாடலில் இடம்பெறுகிற ஊழ் பற்றிய கருத்தாக்கம் பின்வரும் பிறிதொரு பாடலில் விளக்கம் பெறுகிறது: 'ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்/ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப/புணர்ந்தோர் பூஅணி அணியப் பிரிந்தோர்/பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப/படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்/இன்னாது அம்ம இவ் உலகம்/இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே’. இதன் விளக்கம், ஒரு வீட்டில் சாப்பறை ஒலிக்கிறது. ஒரு வீட்டில் திருமணத்துக்கு ஒலிக்கும் குளிர்ந்த முழவு இசை முழங்குகிறது. கணவரோடு கூடிய பெண்கள் பூ அணிகிறார்கள். கணவரைப் பிரிந்த பெண்கள் வருத்தத்துடன் கண்ணீர் சொரிந்து கலங்குகிறார்கள். இவ்வாறு பண்பில்லாதவன் ஆகிய கடவுள் உலகைப் படைத்தான். இவ்வுலகத்தின் இயற்கை கொடியது. அதன் இயல்பை உணர் ந்தோர் இந்த இன்னாமையை இனியவையாகக் காணுதல் வேண்டும்.
- புறநானூற்றின் மேற்கூறிய பகுதியில் இடம்பெறும் இப்பாடல்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களைத் தொட்டுப் பேசுகின்றன. மேலே காட்டிய பாடல்களி லிருந்து விலகி நிற்கிற ஒரு சிறிய பாடல் இல்லறத்தையும் துறவறத்தையும் பற்றிப் பேசுகிறது. தமிழ் இலக்கிய மரபில், குறிப்பாகச் சங்க இலக்கியத்திலும் திருக் குறளிலும் இல்லறத்தை விடத் துறவறம் சிறந்தது என்று வலியுறுத்துகிற பாடல்கள் இல்லை. இந்தப் பிரச்சினைப்பாட்டைக் கீழ்வரும் பாடல் அழுத்தமாகக் காட்டு கிறது. ‘அதள் எறிந்தன்ன நெடுவெண் களரின்/ஒருவன் ஆட்டும் புல்வாய் போல/ஓடி உய்தலும் கூடும்மன்/ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே’ ஒரு விலங்கின் தோலை உரித்து, காய்வதற்காகஅதனை மேல்கீழாகத் திருப்பிவைத்தாற்போலத் தோற்றமளிக்கும் வெண்ணிறக் களர்நிலத்தில் ஒருவன் மான் ஒன்றினை அலைந்து துரத்த, அது தப்பிப் பிழைத்து ஓடும். அந்த மானைப் போல நானும் துறவறத்தை நாடித் தப்பிப் பிழைக்கவும் கூடும். ஆனால், சுற்றத்தோடு கூடி வாழ்கிற இந்த இல்வாழ்க்கை என் கால்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது என்கிறது பாடல்.
- இப்பாடலைப் பாடிய ஓரேருழவர் என்னும் புலவர் பாடியதாகக் குறுந்தொகையிலும் ஒரு பாடல் (131) காணப்படுகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரைக் குறித்து எழுதுகிற உ.வே.சாமிநாதர், குறுந்தொகைப் பாடலில் ஓரேருழவரை உவமை கூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றனர் என்கிறார். ஆனால், தம்முடைய செய்யுளில் இல்லறத்தை வெறுத்துக் கூறுதலின், இவர் துறவறத்தில் பற்றுடையவர் என்று கருத இடமுண்டு என உ.வே.சா. கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. உண்மையில், இப்பாடல் இல்லறத்துக்கும் துறவறத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு மனப்பாங்கினையே நுட்பமாய்ச் சித்திரிக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)