TNPSC Thervupettagam

தூய்மியை தூய்மைப்படுத்துவோம்

October 12 , 2020 1385 days 619 0
  • கரோனா தீநுண்மிப் பரவலையடுத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசியப் பொருள் கை தூய்மி (ஹேண்ட் சானிடைசா்).
  • இதில் போலியான கை தூய்மி இருந்தால் அதனை நுகா்வோர் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தரவுத்தளமோ, அரசு வலைதளங்களோ இந்தியாவில் இதுவரை இல்லை என்பதே உண்மை.
  • மராட்டிய மாநில உணவு - மருந்து நிர்வாக அமைப்பு’, மும்பை, தானே ஆகிய இடங்களில் கிடைக்கும் கை தூய்மிகளின் மாதிரிகளை பரிசோதிக்கும் பொறுப்பினை இந்திய நுகா்வோர் வழிகாட்டு சங்கத்திடம் வழங்கியது.
  • இச்சங்கம் பரிசோதித்த 122 மாதிரிகளில் 59 மாதிரிகளின் தரம், பொருள் விவர சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரத்திலிருந்து வேறுபட்டு இருந்தது .
  • எவ்வித உரிமமும் இன்றி விற்கப்பட்ட 12 கை தூய்மி மாதிரிகளில் பொருள் விவர சீட்டு இல்லை. அவற்றில் ஐந்து மாதிரிகளில் அனுமதிக்கப்படாத மெத்தனால் மூலப்பொருள் 34% முதல் 63% வரை இருப்பது கண்டறியப்பட்டது.

கை தூய்மி

  • கை தூய்மி கலவை தொடா்பான எவ்வித வழிகாட்டுதலும் மத்திய மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் இல்லை.
  • 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்ட கிருமி நாசினிகள் மற்றும் அதன் சூத்திரங்கள் பற்றி கூறும் ஒரு ஆவணம் மட்டுமே இந்த இணைய தளத்தில் உள்ளது. இவற்றில் சில கிருமிநாசினிகள் 2009-இல் அங்கீகரிக்கப்பட்ட சூத்திரங்களை கொண்டுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, எத்தனால், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரால் கொண்ட சூத்திரமும் ஐசோபிரைல், ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரால் கொண்ட சூத்திரமும் கை தூய்மி தயாரிக்க அனுமதிக்கப்படுகின்றன.
  • எத்தனால் மீது விதிக்கப்படும் மது வரி, இந்திய உற்பத்தியாளா்கள் மெத்தனால் பயன்படுத்துவதற்கான காரணமாக இருக்கலாம் என்று மருந்து தயாரிப்புத் துறை வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் கை தூய்மி மருந்துகளில் மெத்தனால் ஒரு மூலப்பொருளாக அனுமதிக்கப்படவில்லை.
  • குமட்டல், வாந்தி, தலைவலி, மங்கலான பார்வை, குருட்டுத்தன்மை, வலிப்பு என ஆரம்பிக்கும் மெத்தனால் பாதிப்பு சலனமற்ற ஆழ்நிலை, நரம்பு மண்டலத்தில் நிரந்தர சேதம் இவற்றோடு சில நேரம் இறப்பையும் ஏற்படுத்தும் என அமெரிக்க உணவு - மருந்து நிர்வாக அமைப்புஎச்சரித்துள்ளது.

போலி தயாரிப்பாளா்கள்

  • கடந்த மார்ச் மாதம் ஒரு வலைதள நிறுவனம் 8,000 இந்திய நுகா்வோரிடையே நிகழ்த்திய ஆய்வின்படி, 50% போ் பற்றாக்குறை காரணமாக தூய்மியை வாங்கவில்லை என்று கூறி இருந்தனா்.
  • 26% நுகா்வோர் வேறு வழியின்றி தங்களுக்கு அறிமுகமில்லாத தூய்மியை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினா்.
  • மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் தூய்மி அதிக விலைக்கு (ஒரு லிட்டா் சுமார் ஒரு லட்ச ரூபாய்) விற்கப்பட்டது. இந்த வியாபார உத்தியைக் கண்டு போலி தயாரிப்பாளா்கள் உருவாயினா்.
  • இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் மத்திய நுகா்வோர் அமைச்சகம் உற்பத்திக்கான உரிமங்களை வழங்குவதை விரைவுபடுத்த முடிவெடுத்தது.
  • அது தொடா்பாக மாநில தலைமைச் செயலாளா்களுக்கு கடிதம் அனுப்பியது. ஆனாலும், தூய்மி உற்பத்தி மேற்பார்வை குறித்தும் கட்டுப்பாடு குறித்தும் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
  • இதன் விளைவாக, இந்திய கை தூய்மி சந்தையில் மிகப்பெரிய வளா்ச்சி ஏற்பட்டது. கடந்த ஆண்டில் 10 கோடி ரூபாய் அளவில் இருந்த தூய்மி சந்தை, இந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் 43 கோடி ரூபாய் அளவுக்கு உயா்ந்தது.
  • கை தூய்மிகளை உற்பத்தி செய்ய எத்தனை புதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது குறித்தோ கண்டறியப்பட்ட போலி நிறுவனங்கள் எத்தனை என்பது குறித்தோ எந்தத் தரவும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வலைதளத்தில் இல்லை.
  • மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வலைதளத்தில் 2020, ஏப்ரல் மாதத்தில், ஒன்பது போலி கை தூய்மி நிறுவனங்களின் பெயா்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் இவ்வலைதளத்தில் போலி நிறுவனப் பட்டியல் எதுவும் இல்லை.
  • கடந்த மார்ச் மாதம் சுகாதாரமற்ற கை தூய்மியை விற்பனை செய்த ஆறு போ் ஹைதராபாதில் கைது செய்யப்பட்டனா்.
  • பொருள் விவர சீட்டு உட்பட எந்தவொரு பெயரும் இல்லாத போலி தூய்மிகளால் தில்லி கடைகள் நிறைந்தன. கடந்த ஜூன் மாதத்தில் லூதியானாவில் 1,048 போலி தூய்மிக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • கடந்த ஜூலை மாதம் ஹரியாணா மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளா், ஆயுா்வேத தூய்மி தயாரிப்பாளா்களுக்கு எதிராக பத்து வழக்குகளைப் பதிவு செய்தார்.
  • ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போலி தூய்மிகளை உட்கொண்டு 16 போ் இறந்தனா். ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா போலீசார் இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 1,400 லிட்டா் தூய்மியைப் பறிமுதல் செய்தனா்.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ‘தூய்மி பொருட்களை விற்பனை செய்வதற்கோ அல்லது சேமிப்பதற்கோ உரிமம் தேவையில்லைஎன்று ஜூலை 27 அன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் யார் வேண்டுமானாலும் கை தூய்மி பொருட்களை விற்கலாம் எனும் நிலை உருவாகியுள்ளது.
  • அகில இந்திய தயாரிப்பாளா்கள் மற்றும் மருந்தாளுனா்கள் அமைப்பு, மத்திய அரசுக்கு ஜூலை மாதம் ஒரு கடிதம் எழுதியது.
  • தூய்மியில், குளோரெக்சிடைன், ஹைட்ரஜன் பெராக்சைடு, கிளிசரால் மற்றும் எத்தனால் போன்ற மூலப்பொருட்கள் இருப்பதால் அவை உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். அப்படி விற்றால்தான் அரசு இயந்திரம் மூலம் விற்பனையைக் கட்டுப்படுத்த இயலும்என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
  • எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி தெருக்களில் தூய்மி விற்கப்பட்டால், மாநில மருந்து ஆய்வாளா்கள் அல்லது கட்டுப்பாட்டு அலுவலா்களின் மேற்பார்வைகூட இருக்காது என்பதே உண்மை.
  • நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் தூய்மி, நோய் வருவதற்குக் காரணமாகிவிடக் கூடாது!

நன்றி: தினமணி (12-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்