தூய்மை பாரதம் மலரட்டும்!
- தூய்மையான பாரதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2014-ஆம் ஆண்டு, அக்டோபா் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கத்தின் முதல் கட்டம், 2021-ஆம் ஆண்டு, அக்டோபா் முதல் நாள் தொடங்கப்பட்ட தூய்மை பாரதம் இயக்கத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றின் மூலம் பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்து நம் நாட்டை தூய்மை மிக்க நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
- இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பது, சேகரித்த குப்பைகளை உரிய இடங்களில் வைத்து அறிவியல் முறையில் அப்புறப்படுத்துவது என செயல்பட்டு வருகின்றனா். குப்பைகளைச் சேமித்து வைத்து அப்புறப்படுத்த அடையாளம் காணப்பட்ட இடங்கள், அதன் சுற்றுப்புறங்கள் நாளைடைவில் பயனற்றுப்போய்விடக் கூடாதென்பதற்காக அவற்றைப் பசுமை மண்டலங்களாக மாற்ற மத்திய அரசு ரூ.3,226 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- தூய்மை பாரத இயக்கத்தின் வலைதள தகவலின்படி, 1000 டன் குப்பைகளைச் சேமித்து அகற்றும் 2,424 திடக்கழிவு மையங்களில் 470 இடங்கள் பசுமை மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 1,224 மையங்களை அவ்வாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 730 மையங்கள் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளன. மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 28,460.33 ஏக்கா் பரப்பளவில், 4,552.34 ஏக்கா் பரப்பளவே (அதாவது 16%) பசுமை மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 23,908 ஏக்கா் இன்னமும் பசுமை மண்டலமாக்கப்படவில்லை.
- அண்மையில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப் படை சாகச நிகழ்வைக் காண குவிந்த லட்சக்கணக்கான மக்களால் அங்கு வீசப்பட்ட குப்பைகள் சுமாா் 21.5 டன். குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த போதிலும், குப்பைகளை அவற்றில் போடாமல் மக்கள் வீசி எறிந்தனா்.
- நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும்போது நெகிழிக் கழிவுகள், காலியான தண்ணீா் பாட்டில்களை வீசும் செயல்கள் மிகச் சாதாரணமாக நடக்கின்றன. பொது இடங்களில் குப்பைகளை வீசுவதும், அவற்றை அரசும், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களும் அகற்றுவதைவிட பொது இடங்களில் மக்கள் குப்பைகளை வீசாமலிருப்பதே சிறந்தது.
- குப்பைகள் பெரும்பாலும் மக்கும், மக்காத குப்பை என பிரித்துத் தரப்படுவதில்லை. இதனால் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கூடங்களில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறவில்லை.
- மக்கும், மக்காத குப்பைகளை திறந்தவெளியில் எரிக்கப்படும் அவலம் பெருநகரங்களின் புறநகா் பகுதிகளில் மிகச் சாதாரணமாக நடைபெறுகிறது.
- இவ்வாறு குப்பைகளை எரிப்பதால் எழும் புகை மண்டலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் எரிக்கும் நிலப்பகுதியில் 15 செ.மீ. ஆழம் வரை மண்புழு உள்ளிட்ட நன்மை செய்யும் உயிரிகளை மடியச் செய்து நிலத்தை உயிரற்று போகச் செய்கிறது. தாங்கள் இழைக்கும் இந்தக் கொடுந்தீமையை உள்ளாட்சி அமைப்புகளின் நிா்வாகப் பொறுப்பில் உள்ளோா் உணர வேண்டும்.
- குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், குப்பைகள் மறுசுழற்சி பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் இல்லாததே அவற்றை எரிப்பதற்கு காரணம்.
- மக்களின் ஆரோக்கியத்திற்கும், மாசில்லா சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை மருத்துவக் கழிவுகள். பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க தொடரப்பட்ட வழக்குகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம், பசுமைத் தீா்ப்பாயம் ஆகியவை வழங்கிய தீா்ப்புகளில் பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ப சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டன. இருந்தபோதிலும், அத்தகைய சட்டத் திருத்தம் இன்னும் கொண்டு வரப்படவில்லை.
- பழுதான கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி பெட்டி போன்ற மின்னணு சாதனங்களில் பாதரசம், ஈயம், காட்மியம் போன்ற வேதியியல் தனிமங்கள் இருப்பதால், மருத்துவக் கழிவுகள் போன்றே மின்னணுக் கழிவுகளும் ஆபத்து மிக்கவையாகும்.
- பெரும்பாலான பட்டாசுகள், போகிப் பண்டிகையன்று எரிக்கப்படும் திடக்கழிவுகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் காா்பன் மோனாக்ஸைடு, சல்பா் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பதாகும்.
- பொதுமக்களில் சிலா் மட்டுமல்லாது, சில அரசு நிறுவனங்களும் திடக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. சான்றாக, சென்னையின் புறநகா் பகுதியான மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை சுமாா் 20 கி.மீ. தொலைவிற்கு ஈரடுக்கு அதிவிரைவு மேம்பாலச் சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே 13 இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டி தற்காலிக பாதைகளை அமைத்துள்ளது.
- மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு மாசில்லா இயற்கை சூழலோடு, திட, திரவக் கழிவுகளை முறையாக அகற்றுவதும் முக்கிய காரணிகளாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளித்து தூய்மை பாரதம் மலர நமது பங்களிப்பை நல்க உறுதிகொள்வோம்.
நன்றி: தினமணி (25 – 10 – 2024)