TNPSC Thervupettagam

தென்னகத்துக்கு தண்டனை, வடக்குக்குப் பரிசும் பாராட்டும்

October 10 , 2023 283 days 186 0
  • இந்தியக் கூட்டரசு ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையானது அரசியல் – பொருளாதாரரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. வலிமையான மொழி அடையாளமும், மாநில அளவிலான மறுமலர்ச்சியும் இணைந்து, தென்னிந்திய மாநிலங்களை அனைத்துத் துறையிலும் அதிக வளர்ச்சி காண வழி வகுத்தன.
  • வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்திய மாநிலங்கள் சாதனை படைத்தன. கூட்டாட்சி அரசியல் அமைப்பில், மக்கள்தொகைப் புவியலில் ஏற்படும் மாற்றங்கள், அரசியல் – பொருளாதார புவியலில் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தொகுதி மறுவரையறையும், அரசியல் பிரதிநிதித்துவமும்

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 81வது கூறு, நாட்டின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை, மக்கள்தொகைக்கு ஏற்ப சமமாக இருக்க வேண்டும் என்கிறது. 1971ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு, ‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே அளவுதான்’ என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 1976இல் 42வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2001இல் மீண்டும் 84வது சட்டத்திருத்தத்தின்படி, ‘2026இல் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் வரையில் இதே எண்ணிக்கைதான்’ என்று நீட்டிப்பும் அளிக்கப் பட்டது.
  • மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது இந்தி மொழி பேசாத தென்னிந்திய மாநிலங்களிடையேயும், இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களிடையேயும் வேறுபடுகிறது. 1971 முதல் 2011 வரையில் பிஹார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் மக்கள்தொகை தேசிய அளவில் 44%லிருந்து 48.2%ஆக அதிகரித்தது.
  • அதே காலத்தில், ஐந்து தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை (ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம்) 24.9%லிருந்து 21.1%ஆகக் குறைந்தது. 2023இன் மக்கள்தொகை எவ்வளவாக இருக்கிறது என்ற கணிப்புப்படி பார்த்தால், ஐந்து தென்னிந்திய மாநிலங்களும் இப்போதுள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளில் 23 தொகுதிகளை இழந்துவிடும், வட மாநிலங்கள் கூடுதலாக 37 தொகுதிகளைப் பெறும். வேறு வார்த்தையில் சொல்வதானால், வட இந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 6.81% அதிகரிக்கும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 4.24% குறையும்.
  • மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை சமப்படுத்துவது உலகின் அனைத்து கூட்டாட்சிகளுக்கும் ஒரு சவாலாகவே தொடர்கிறது. கனடா நாடு மக்கள்தொகை குறையும் தனது மாநிலங்களுக்கு, தேசிய நாடாளுமன்றத்தில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து கூட்டிக்கொண்டேவருகிறது. ‘ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படையில், மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • பல கட்சி ஜனநாயகம் உள்ள நம் நாட்டில், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றியாளர் என்று அறிவிக்கும் முறைதான் ஆரம்பத்திலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. பலமுனைப் போட்டி இருந்தால் சில வேளைகளில், பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெற்றவர்கூட வெற்றியாளர் ஆகிவிடுகிறார். ஒரு தொகுதியில் வென்றவர் மொத்தம் எவ்வளவு ஆதரவைப் பெற்றார் என்று கணக்கிட்டால், சில வேளைகளில் பதிவுசெய்துகொண்ட வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பங்கு வாக்குகளை மட்டுமேகூட அவர் பெற்றிருப்பார், அதையே தொகுதியின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஆறில் ஒரு பங்கினர் ஆதரவிலேயே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.
  • இந்த அமைப்பில் சில வேட்பாளர்கள் தனக்கு ஆதரவாக இருக்கக்கூடிய சமூகக் குழுக்களிடம் மட்டும் வாக்கு வேட்டையாடினால்கூட போதும் வெற்றிபெற்றுவிடலாம். இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிஹார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு மக்களவை உறுப்பினர் சராசரியாக 18 லட்சம் பதிவுபெற்ற வாக்காளர்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.
  • ஐந்து தென்னிந்திய மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் சராசரியாக 16 லட்சம் பதிவுபெற்ற வாக்காளர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்த முறையில், ‘ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு’ என்ற கொள்கைக்கு அர்த்தமே இல்லை. எனவே, மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலும் பொருள் இல்லை.
  • குடும்பநல திட்டமும் மக்கள்தொகைக் கட்டுப்பாடும் ஒன்றிய, மாநில அரசுகளின் அறிவிக்கப்பட்ட கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அதைத் திறம்பட அமல் செய்த தென்னிந்திய மாநிலங்கள், தொகுதிகள் குறைப்பு நடவடிக்கை மூலம் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது. வெறும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளால் மட்டும் மக்கள்தொகை குறைந்து விடுவதில்லை, சமூகத் தலைவர்கள் மேற்கொள்ளும் இதர மக்கள் நல நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன. தென்னிந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பட்டது இதற்கு நல்ல உதாரணம்.
  • மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி தென்னிந்திய மாநிலங்களுக்குத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைப்பது அவற்றை ஊக்கமிழக்கச் செய்வதுடன், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் – சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவராமல் இருந்தால் தொகுதிகள் அதிகரிக்கும், அரசியல் செல்வாக்கும் கூடும் என்று ‘செயல்படாமலிருந்த’ வட இந்திய மாநிலத் தலைவர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பு அளிப்பதைப் போலாகிவிடும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும்வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே நீட்டிப்பதுதான் சரி.

பொது நிதிப் பங்கீடுகளில் மக்கள்தொகையின் பங்களிப்பு

  • வரி வருவாயை ஒன்றிய அரசும் மாநிலங்களும் எந்த விகிதத்தில் – எந்த அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பொதுவில் முடிவுசெய்ய, ஐந்தாண்டுகளுக்கொரு முறை ‘நிதி ஆணையம்’ (ஃபைனான்ஸ் கமிஷன்) ஒன்றிய அரசால்  நிறுவப்படுகிறது. அனைத்து நிதி ஆணையங்களும் வரி வருவாயை கிடைமட்டமாக எப்படிப் பிரித்துக் கொள்ளலாம் என்ற பரிந்துரையை வழங்குகின்றன.
  • மாநிலங்களின் மக்கள்தொகையும், தனிநபர் வருவாயும் இதைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கியக் காரணிகளாகும். இவை போக, வேறு சில அம்சங்கள் அடிப்படையிலும் பரிந்துரைகள் அமையும். அந்தந்தச் சூழலுக்கேற்ப சில அம்சங்களுக்கு கூடுதல் மதிப்பீடுகள் சேர்க்கப் படுவதும் உண்டு.
  • மாநிலத்தின் மக்கள்தொகை என்பது அந்த மாநிலத்தின் செலவு கோரிக்கைக்கு முக்கியமான அடிப்படை. எனவே, நிதிப் பங்கீட்டு உத்தியில் அது முக்கியமான மாறிலி. முதலாவது நிதி ஆணையம், மாநிலங்களுக்கான பங்கை அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில்தான் தீர்மானித்தது. அடுத்தடுத்து வந்த ஆணையங்கள், மக்கள்தொகைக்கு அளிக்கப்பட்ட மதிப்பீட்டை சிறிது சிறிதாகக் குறைத்து, வேறு அம்சங்களுக்கு அதைச் சேர்த்து முடிவுசெய்தன.
  • எட்டாவது நிதி ஆணையத்துக்கு (1984-89) ஒன்றிய அரசு நிர்ணயித்த பரிசீலனை வரம்பு, ‘1981 மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ள வேண்டாம் – 1971 மக்கள்தொகையையே அடிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்றது.
  • பதினாலாவது நிதி ஆணையத்துக்கு அரசு பரிசீலனை வரம்பை அறிவித்தபோது, ‘1971ஆம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்ளும் அதேசமயத்தில் 1971க்குப் பிறகு மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், மக்கள்தொகையைப் பரிசீலிக்க வேண்டியிருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டது.
  • இவ்விதம் முதல் முறையாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குப் பரிசு தரப்பட்ட நிலை மாறி, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் மெத்தனமாக இருந்த வட மாநிலங்களுக்கு ஊக்குவிப்பாக கூடுதல் பங்கு ஒதுக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையம், 2011 மக்கள்தொகையை அடிப்படையாகப் பின்பற்றுவதாக வெளிப்படையாகவே அறிவித்தது.
  • இத்தோடு, தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகப் பெற்றுவந்த ஊக்குவிப்புகள் முடிவுக்கு வந்தன. தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்துவிட்டது.
  • நடப்பு மக்கள்தொகையை, வரி வருவாய் பங்கீட்டுக்குத் தொடர்ச்சியாக கணக்கில் கொள்ளும் முறை வேறு வகையிலும் கையாளப்படுகிறது. மாநிலத்தின் தனிநபர் சராசரி வருவாயும் பங்கீட்டுக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. அதிக தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களுக்கு பங்கைக் குறைத்தும், குறைந்த தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களுக்கு அதிகமாக்கியும் நிதி வழங்கப்படுகிறது. குறைந்த சராசரி வருவாய் உள்ள மாநிலங்களுக்கு வரி வருவாயை உயர்த்திக்கொள்ளும் ஆற்றல் போதவில்லை என்று அதற்குக் காரணம் கூறப்படுகிறது.
  • உண்மையில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் அல்லது மெத்தனமாகச் செயல்பட்டால் அது அதிகரித்து, அதன் காரணமாக சராசரி தனிநபர் வருவாய் குறையத்தான் செய்யும். மாநிலத்தின் மொத்த வருவாயை, மொத்த மக்கள்தொகையைக் கொண்டு வகுத்தால் வரும் ஈவுதான் தனிநபர் சராசரி வருவாய். வரி வருவாயைப் பங்கிடுவதற்கான காரணிகளைப் பரிசீலிக்கும்போது, ‘தனிநபர் சராசரி ஆண்டு வருவாய்’க்கு அதிக மதிப்பு தரப்படுகிறது.
  • இதில் 2000-05 முதல் 2021-26 வரையிலான காலத்தில் ஒன்றிய அரசின் வரி வருவாயில் ஐந்து தென் மாநிலங்கள் பெற்றுவந்த நிதியளவு 21.1%லிருந்து 15.8%ஆக சரிந்துவிட்டது. இதற்கு நேர்மாறாக, பிஹார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெற்ற நிதிப் பங்கீடு 51.5%லிருந்து 53.2%ஆக அதிகரித்துள்ளது.
  • நடப்பு மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை மறுவரையறை செய்வதும், ஒன்றிய அரசின் வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பதும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை வெளிப்படையாகவே தண்டிக்கும் நடவடிக்கையாகும், அதேசமயம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத வட மாநிலங்களைப் பாராட்டி பரிசு வழங்கும் ஊக்குவிப்பாகும்.

நன்றி: அருஞ்சொல் (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்