- ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’”என்றார் ஒளவையார். ஆனால், தனது கனவுகள் நிறைவேறவில்லை என்றாலோ, மன அழுத்தத்தில் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டாலோ உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவன் சென்று விடுகிறான்.
- விலை மதிப்பிட முடியாத உயிர், வாழ வேண்டிய இளம் வயதில் பிரிந்தால் உற்றார் உறவினருக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் பேரிழப்பு.
- இளைய தலைமுறையினரே நாட்டின் சொத்து; உழைப்பின் உறைவிடம். அவா்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சூழலை உருவாக்குவது சமுதாயத்தின் கடமை.
- தற்கொலை தவிர்க்கப்பட வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. சமுதாயம் ஏதோ ஒரு விதத்தில் தனிமனித தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. உளவியல் ரீதியாகப் பார்த்தால் தாழ்வு மனப்பான்மையின் உச்சகட்டம் விபரீதத்தில் முடிகிறது. சுற்றுபுறச் சூழலும் ஒரு காரணம்.
- வறுமை, கடன் சுமை, தொழிலில் பின்னடைவு, கணவன் கொடுமை, குடும்பத் தகராறு, காதல் தோல்வி போன்ற பொதுவான காரணங்கள் சொல்லப்பட்டாலும் இவற்றை எதிர்கொள்ள முடியாதவா்கள் கடைசி கட்டத்திற்குச் செல்கிறார்கள்.
- இம்மாதிரி காரணங்கள் எல்லார் வாழ்க்கையிலும் ஏதாவது பிரச்னை மூலம் வரும்.
- தற்கொலைதான் தீா்வு என்றால் வறுமை என்ற ஒரு காரணத்திற்கே பல்லாயிரக்கணக்கானோர் உயிரை மாய்த்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லை. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் கை கொடுத்தால் தற்கொலையைத் தவிர்க்க முடியும்.
- நாட்டில் நடக்கும் குற்றங்களை ஆராய்ந்து, வருடாந்திர குற்ற புள்ளிவிவரங்களை தொகுத்து வழங்குகிறது குற்ற ஆவணக் காப்பகம்.
- சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் தற்கொலைகள் நிகழ்கின்றன.
- அதில் தமிழ் நாட்டின் பங்கு சுமார் பதிமூன்றாயிரம். இந்திய அளவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு தற்கொலை 10.4. அதுவே தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கு 16 தற்கொலைகள்.உலகில் ஆண்டுக்கு எட்டு லட்சம் தற்கொலைகள்.
- 40 வினாடிக்கு ஒரு தற்கொலை நிகழ்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி. இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு 1,39,126 தற்கொலைகள் பதிவாயின. இது எல்லா மாநிலங்களிலும் பரவலாக உள்ள நிலை. தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது காவல்துறை புலனாய்வில்தான் வெளிவரும்.
- 2019-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி தற்கொலைக்கான காரணங்கள் குடும்ப பிரச்னை, தொழிலில் தோல்வி, கடன் தொல்லை, காதலில் தோல்வி, தோ்வில் தோல்வி, மனநிலை பாதிப்பு, நோய் தாக்குதல் என்று ஆவணக் காப்பகம் பட்டியலிட்டுள்ளது.
- இதில் குடும்ப பிரச்னை காரணமாக 32% (45,140) தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
- தோ்வில் தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டோர் 2 % போ். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் தோ்வில் தோல்வி காரணமாக 215 தற்கொலை வழக்குகள் பதிவாகின்றன.
- மஹாராஷ்டிரத்தில் 439, கா்நாடகத்தில் 199. எல்லா மாநிலங்களையும் சோ்த்து 2,744 தற்கொலைகள்.
அரசியல் ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும்
- ஊடகங்கள் தற்கொலை நடந்த உடனே அதற்கான காரணத்தை ஊகித்து செய்தியாக வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்துவது தவறாது நடக்கிறது.
- திடீரென்று தற்கொலைகள் அதிகரித்து விட்டதுபோல் சமூக வலைதளங்களில் பதிவிடுட்டு, அதன் மூலம் அரசியல் செய்ய விழையும் சுயநலவாதிகள் களம் இறங்குவது வேதனை அளிக்கிறது. உயிரிழப்பை கொச்சைப்படுத்தும் தரம் தாழ்ந்த போக்கு கண்டனத்துக்குரியது.
- உயா்நீதிமன்ற நீதியரசா், மாணவா் தற்கொலை விவகாரத்தை அரசியல் ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு காரணமாக தற்கொலை செய்துகொள்பவா்களை தியாகிகளாக ஊடகங்கள் காட்டக்கூடாது என்றும் கூறிவிட்டு, அரசியல் கட்சிகள் அவா்களுக்குப் பணம் தருவதைத் தவிர்த்தாலே நீட் தோ்வுத் தற்கொலைகள் நின்று விடும் என்று கூறியுள்ள கருத்து உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
- சமுதாயம் வெற்றியைக் கொண்டாட வேண்டும். தோல்வியைப் பெரிதாக்கி அதற்கான பழியை நிர்வாகத்தின் மீது போடுவது நியாயமற்றது.
- அரசியல் ஆதாயத்திற்காக தற்கொலைகளைத் தேடி அலையும் அரசியல் தரகா்கள் வலையில் இளைஞா்கள் சிக்கிவிடக் கூடாது.
மூச்சு உள்ளவரை முயல வேண்டும்
- குடும்பத்தில் நான்கு சுவருக்குள் இருக்கும் அன்றாட பிரச்னைகள் ஏராளம். அதுவும் நகரங்களில் நடுத்தரக் குடும்பங்கள் சிறிய குடியிருப்புகளில் புழங்க வேண்டிய நிலை.
- நெருக்கடியான வாழ்க்கை, நெருக்கடி என்பது இடத்தில் மட்டுமில்லை, உணா்வுகளை பகிர்ந்து கொள்ளக் கூட இடமில்லை. இம்மாதிரியான சூழலில் இளைஞா்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
- இந்த பிரச்சனையை ஆரய்ந்த பல குழுக்கள், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணாக்கா்களுக்கு மன அழுத்ததை சமன் செய்ய உளவியல் மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளன.
- அவசர உலகில் பெரியவா்கள் நேரம் ஒதுக்கி குழந்தைகளோடு மகிழ்ச்சி பொங்க பேசுவதே குறைந்து விட்டது. பல இல்லங்களில் பெற்றோர் இருந்தும் குழந்தைகள் ஆதரவற்றவா்களாகப் புழங்கும் நிலையால்தான் உளவியில் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.
- மாணவா்களோடு அதிகம் பழகுவதால் ஆசிரியா்களும் பெற்றோருக்கு இணையானவா்களே.
- பெற்றோரும் குழந்தைகளுக்கு ஒரு விதத்தில் ஆசிரியா்கள்தான். இந்தப் புரிதலோடு ஆசிரியரும், பெற்றோரும் மாணவ மாணவியரின் கல்வி கற்றலில் ஈடுபட்டால் இளைஞா்களுக்கு நல்ல மன நிலை ஏற்படும்.
- அந்த நிலை எங்கு இல்லையோ அங்குதான் தற்கொலைகள் நிகழ்கின்றன.
- தோ்வைப் பற்றி பயம் காட்டுவதில் பெரியவா்கள் வல்லவா்கள். வாழ்வில் தோ்வு ஒவ்வொரு நிலையிலும் வரும்.
- மாணவப் பருவத்தில் எதிர்கொள்ள வேண்டிய தோ்வுகள் தவிர எல்லா முயற்சிகளும் ஒரு விதத்தில் தோ்வை எதிர்கொள்வது போலத்தான்.
- ‘கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது’ என்பார்கள்.
- அந்த வகையில் கெட்ட வார்த்தைகளை, மனதை நோக அடிக்கும் சாடல்களை பல பெற்றோர் சா்வ சாதாரணமாக பிரயோகிக்கிறார்கள்.
- பெண் என்றால் வயதுக்கு வந்தவுடன் மணம் முடித்து அனுப்ப வேண்டும்; பிள்ளை என்றால் ஏதாவது ஒரு வேலையில் சோ்ந்து சம்பாதிக்க வேண்டும்.
- இதுதான் சில பெற்றோரின் குறிக்கோளாக இருக்கிறது. அவா்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி செய்வதில்லை.
- 2019-ஆம் ஆண்டின் கணக்குப்படி காதல் தோல்வியால் ஏற்படும் மரணங்கள் 6,311.
- தமிழ்நாட்டில் 656; மஹாராஷ்டிரத்தில் 534. காதல் தோல்வியால் நிகழும் தற்கொலையில் தமிழ்நாட்டுக்கு முதல் இடம். இந்த அவஸ்தைக்குக் காரணம் குடும்பம், சமூக வலைதளம், சினிமா ஆகியவை என்றால் மிகையில்லை.
- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருதலை காதலால் நடந்த சாப்ட்வோ் எஞ்சினியா் சுவாதியின் கொலை மறக்க முடியாதது.
- கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் மரணம் தற்கொலையில் முடிந்தது. சுவாதி படுகொலையைக் கண்டிக்காத அரசியல்வாதிகள், தற்கொலை செய்துகொண்ட குற்றவாளிக்கு மலா் வளையம் வைத்து ஆதாயம் பார்த்தனா்.
- இந்த சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுக்க முனைந்தது சினிமா உலகம். எள்ளளவும் மனிதாபிமானம் இல்லாத ஒரு சாரார் இருப்பதால்தான் பிரச்சனைகள் வளா்கின்றன.
- போதைப் பொருள்களுக்கும் மது அரக்கனுக்கும் அடிமையாகி தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 7,860. தமிழ்நாட்டில் 1,042 போ் உயிரிழந்துள்ளனா்.
- கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டவா்கள் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவு என்பதில் நாம் திருப்தி அடையலாம். இந்தியாவில் உயிர் இழந்த 5,908 நபா்களில் தமிழ்நாட்டில் 402; கா்நாடகத்தில் 1,432; மஹாராஷ்டிரத்தில் 1,526.
- மனித உயிரிழப்பிற்கு 20 முக்கிய காரணங்களில் தற்கொலையும் ஒன்று என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
- ஒவ்வொரு தற்கொலையாலும், இறந்த நபரின் உற்றார் உறவினா் சுமார் 150 பேருக்கு ஆழ்ந்த துக்கம் ஏற்படுகிறது.
- இந்தக் கணக்கின்படி சுமார் பத்து கோடி மக்கள் தற்கொலைகளால் பாதிக்கப்படுகிறார்கள். தற்கொலை செய்து கொள்பவா்களில் 80% போ் இள வயது உழைப்பாளிகள்; அதாவது 18 வயது முதல் 45 வயதினா் என்பது நாட்டின் மனித வளத்தை பாதிக்கிறது.
- உலகிலேயே மிக கடினமான தோ்வு எது என்றால் மத்திய தோ்வாணையம் நடத்தும் ஐஏஸ் - ஐபிஸ் சிவில் சா்வீஸ் தோ்வு ஒன்றுதான்.
- பதினைந்து மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்தால் உயிர் பிழைப்பது எவ்வளவு கடினமோ அந்த அளவு கடினமானது இந்தத் தோ்வில் வெற்றி பெறுவது என்று கூறப்படுகிறது.
- ஐந்து முறை தோல்வியுற்று ஆறாவது முறை ஐஏஸ் அதிகாரிகளானவா்கள் பலா்.
- மெய் வருத்தமும் முயற்சியும் கூலி தரும் என்பதற்கு இது சான்று. சாதிக்க வேண்டும் என்ற உறுதியிருந்தால் நிச்சயம் இலக்கை அடையலாம்.
- ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்பதை உணா்ந்து குறிக்கோளை உயா்வாக வைத்து கிடைப்பதை திருப்தியோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும்.
- தோல்வியால் துவளாது அதையே வெற்றியின் படிக்கட்டாக மாற்றிக் கொண்டு மூச்சு உள்ளவரை முயல வேண்டும். இதனை இளைஞா்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
நன்றி: தினமணி (26-09-2020)