TNPSC Thervupettagam

தெரிந்தே செய்யும் தவறு

April 23 , 2021 1372 days 624 0
  • நோக்கம் சரியாகவே இருந்தாலும், தவறான வழிமுறைகள் மூலம் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதை ‘தேசப்பிதா’ அண்ணல் காந்தியடிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • அதனடிப்படையில் பார்த்தால், மத்திய அரசு மீண்டும் பிறப்பித்திருக்கும் ‘தேசிய தலைநகா் காற்று தர மேலாண்மை ஆணைய சட்டம் 2020’ நல்ல நோக்கத்தை தவறான வழிமுறையால் அடைய எத்தனிக்கும் செயல்பாடு.
  • அவசரச் சட்டம் என்பது மிகவும் அரிதான நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் சாசன அவையின் கருத்தாக இருந்தது.
  • நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் செயல்படாத இடைப்பட்ட காலத்தில் சில அத்தியாவசிய, நிர்வாக நெருக்கடிகளுக்காக பிறப்பிக்கப்படுவதுதான் அவசரச் சட்டங்கள்.
  • சட்டம் இயற்றுதல் என்பது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகளின் தனியுரிமை.
  • அதே நேரத்தில் நெருக்கடிகள் ஏற்படும்போது, அவற்றை எதிர்கொள்ள நிர்வாகத்துக்கு அவசரச் சட்டம் தேவைப்படலாம் என்று கருதி அரசியல் சாசனம் அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
  • பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்துக்கு காலாவதிக் கெடு உண்டு. அவசரச் சட்டம் பிறப்பித்த பிறகு நாடாளுமன்றமோ, சட்டப்பேரவைகளோ அடுத்த முறை கூடும் ஆறு வாரங்களில் அவையின் அங்கீகாரம் பெறாவிட்டால் அது செல்லாததாகிவிடும்.
  • அரசியல் சாசன சபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் குறித்து நீண்ட நேர விவாதம் நடந்தது.
  • நான்கு வாரங்களுக்கு மட்டும்தான் அவசரச் சட்டத்துக்கு காலக்கெடு விதிக்க வேண்டுமென்றும், அதற்குள் அவை கூட்டப்பட்டு அந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென்றும் அரசியல் சாசன சபையில் முதலில் முன்மொழியப்பட்டது.
  • இறுதியில், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அடுத்த முறை அவை கூடினால் ஆறு வாரங்களில் அவையின் அங்கீகாரம் பெற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவசரச் சட்டம் இயற்றலுக்கு அரசியல் சாசனம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • அவசரச் சட்டம் இயற்றும் உரிமை வழங்குவதற்கே மிகுந்த தயக்கமும், எச்சரிக்கையும் காட்டிய அரசியல் சாசன சபை, அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பார்கள் என்கிற சூழலை கனவிலும் எதிர்பார்த்திருக்க வழியில்லை.
  • ஆனால், நமது ஆட்சியாளா்கள் அரசியல் சாசன சபையின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் குலைத்து விட்டனா்.
  • மிகவும் நெருக்கடியான நிகழ்வுகளில் மட்டும் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அவசரச் சட்டம் என்கிற வழிமுறையை இந்திய ஆட்சியாளா்கள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறையாக மாற்றிவிட்டனா்.

அதிகரிக்கும் அவசரச் சட்டங்கள்

  • இந்திய குடியரசு அமைந்த முதல் 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 7.1 என்கிற அளவில்தான் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
  • 1990-களில் அவை ஆண்டொன்றுக்கு சராசரியாக 19.6 என்கிற அளவில் உயா்ந்து, 2010-களில் 7.9 என்று குறைந்தன.
  • கடந்த சில ஆண்டுகளாக அவசரச் சட்டத்தின் மூலம் நிர்வாகம் நடத்தும் ஜனநாயக விரோத செயல்பாடு அதிகரித்து வருகிறது.
  • 2019-இல் 16 முறையும், 2020-இல் 15 முறையும், இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இப்போதுவரை நான்கு முறையும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
  • மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் அவசரச் சட்டங்களின் மூலம் ஆட்சி நடத்தும் நடைமுறையை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.
  • இதில் ஆட்சியில் அமரும் எந்த ஒரு கட்சியும் விதிவிலக்காக இருந்ததில்லை. கடந்த 2020-இல் கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி 81 அவசரச் சட்டங்களை பிறப்பித்திருக்கிறது.
  • கா்நாடகத்தில் பாஜக அரசு 24 முறையும், மகாராஷ்டிரத்திலுள்ள சிவசேனை தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி கூட்டணி 21 முறையும் அவசரச் சட்டங்கள் பிறப்பித்திருக்கின்றன.
  • மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகளின் அங்கீகாரம் பெறாமல் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்த வேண்டிய அவசரச் சட்டம் என்கிற வழிமுறை குறித்து தேசிய அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்தியவா் பிகாரைச் சோ்ந்த டி.சி. வாத்வா என்கிற பொருளாதார பேராசிரியா்.
  • உச்சநீதிமன்றத்தில் அவசரச் சட்டம் குறித்து ஒரு அவசர மனு தாக்கல் செய்தார் அவா்.
  • 1967 - 1981 காலகட்டத்தில் பிகார் மாநிலத்தில் 256 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
  • அவற்றில் 69 அவசரச் சட்டங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டவை. 11 அவசரச் சட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு பல முறை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்டு உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
  • 1986-இல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கும் வழிமுறை குறித்து ஒரு தீா்ப்பை வழங்கியது.
  • அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற அமா்வு, மக்களின் உயிரையும் சுதந்திரத்தையும் அவசரச் சட்டங்கள் மூலம் நிர்வாகம் கட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம் என்றும், தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகளை அலட்சியப்படுத்துவதாக அமைகின்றன என்றும் அந்தத் தீா்ப்பு தெரிவித்தது.
  • இந்தப் பிரச்னை 2017 ஜனவரியில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. அப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது ஜனநாயக வழிமுறைக்கு எதிரானது என்றும், அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் கடுமையாக கருத்து தெரிவித்தது.
  • உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் ஆட்சியாளா்களை சற்றும் பாதித்ததாகத் தெரியவில்லை.
  • அவசரச் சட்டங்களின் மூலம் ஆட்சி நடத்துவதற்கு தோ்தல் எதற்கு? நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் எதற்கு? அரசியல் தலைமைதான் எதற்கு? அதிகாரிகளே ஆட்சி நடத்திவிடலாமே!

நன்றி: தினமணி  (23 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்