தெருமுனை கடைகளுக்கு போட்டியா? - நவீன விரைவு வணிகம்
- இந்தியாவில் சில்லறை வணிகம் தற்போது கவனிக்கத்தக்க மாற்றத்தை கண்டு வருகிறது. பிளிங்கிட், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ, பிக்பாஸ்கெட் போன்ற விரைவு வணிக தளங்கள் மக்களின் வாழ்க்கைப் போக்கை பெருமளவில் மாற்றியமைத்துவிட்டன.
- இந்த தளங்கள் 10 நிமிடங்களில் பொருள்களை டெலிவரி செய்யும் சேவைகளையும், தனிப்பட்ட பிற தேவைகளுக்கேற்ப சேவைகளையும் வழங்கி வருகின்றன. விரைவு வணிகத்தின் இந்த வேகமான வளர்ச்சி இந்திய சில்லறை வணிகத்தின் முதுகெலும்பாக இருந்து வந்த பாரம்பரியமான தெருமுனைக் கடைகள் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
2 லட்சம் கடைகள் மூடல்:
- அகில இந்திய நுகர்வோர் பொருள் விநியோகிப்பாளர்கள் கூட்டமைப்பின் (ஏஐசிபிடிஎப்) சமீபத்திய தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பலசரக்கு கடைகள் மூடப்பட்டுள்ளன. முதல் நிலை நகரங்களில் 60,000 கடைகளும், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 கடைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் மொத்தம் 1.3 கோடி மளிகை கடைகள் உள்ளன. இதில் 17 லட்சம் கடைகள் பெருநகரங்களிலும், 12 லட்சம் கடைகள் முதல் நிலை நகரங்களிலும், மீதமுள்ள 1.01 கோடி கடைகள் இரண்டாம் நிலை நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ளன.
- கடந்த 2-3 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது நமக்கு அருகில் இருக்கும் சில்லறை விலை கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. கரோனா காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பலர் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மாறினர். குறிப்பாக இளைய தலைமுறையினர் விரைவு டெலிவரி சேவைகளை விரும்புகின்றனர்.
2 மடங்கு பொருளாதார தாக்கம்:
- இந்த மாற்றத்தின் விளைவாக பொருளாதார தாக்கம் சுமார் 2 மடங்கு அதாவது, விரைவு வணிகத்தின் வர்த்தகம் ரூ.27,500 கோடியிலிருந்து அடுத்த ஆண்டுக்குள் ரூ.50,461கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப மாற்றத்தால் சவால்:
- 20% முதல் 30% வரை அதிரடி தள்ளுபடிகள், அதிவேக டெலிவரி, மளிகை சாமான்கள் முதல் ஐபோன் வரை என பரந்த அளவிலான தயாரிப்புகளின் விநியோகம் போன்ற அம்சங்கள் விரைவு வணிகத்துக்கு சாதகமானவை.
- நமக்கு அருகில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் குறைவையும் விற்பனை குறைவையும் உணர்ந்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் தளங்களில் விலைகளை ஒப்பிட்டு அதிக தள்ளுபடியை எதிர்பார்க்கின்றனர். அவற்றை சில்லறை விற்பனை கடைகளால் வழங்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.
- இவற்றையெல்லாம் தாண்டி சில்லறை வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஆனாலும், 2022-23 நிதியாண்டு முதல் 2023-24 வரை ரூ.3.89 லட்சம் கோடி மதிப்பிலான மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் ரூ.3.47 லட்சம் கோடி நம்மூர் சில்லறை கடைகளே செய்திருக்கின்றன!.
ஏராளமான தள்ளுபடிகள்:
- விரைவு வணிகத்துக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானவை சாத்தியமே இல்லாத வகையில் வழங்கப்படும் தள்ளுபடிகள்தான். இது, வணிகத்தில் நியாயமே இல்லாத ஒரு போட்டிச் சூழலை உருவாக்குகிறது. துணிகர மூலதனம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் இதுபோன்ற தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன என்பதே உண்மை.
- பெரு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் சந்தைப் பங்கைப் பெறுவதற்காக இதுபோன்ற குறுகிய கால இழப்புகளை ஏற்றுக் கொள்கின்றன. இதை சரி செய்யாவிட்டால் விரைவு வர்த்தகத்தின் விலை நிர்ணயம், பல உள்ளூர் சிறுகடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும்.
விநியோக சங்கிலி:
- நமது தெரு முனைகளில் உள்ள சிறிய சில்லறை கடைகள்தான் நகர்ப்புறமல்லாத பகுதிகளில் முக்கியமான விநியோக சங்கிலியாக செயல்படுகின்றன. இதை கருத்தில் கொண்டுதான் ஏஐசிபிடிஎப் போன்ற அமைப்புகள் சிறிய கடைகளை பாதுகாக்க கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. 2023-ல் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் இருந்த விரைவு வணிக சந்தை 2024-25-ல் ரூ.50 ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏராளமான வேலைவாய்ப்புகள்:
- “நாங்கள் சிறிய கடைகளுக்கு எதிரிகள் அல்ல, அவற்றுக்கு துணையாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த விரைவு வணிக தளங்கள் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதோடு டெலிவரி பணியாளர்களின் சம்பளங்கள் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. விரைவு வணிக தளங்கள் மூலம் வரக்கூடிய வர்த்தகத்தின் மூலம், அடுத்த 2-3 ஆண்டுகளில் ரூ.8,400 கோடிக்கு மேல் நேரடி வரியாக அரசுக்கு கிடைக்கும்” என்கிறார் ஜெப்டோ நிறுவனர் ஆதித் பாலிச்சா. சில்லறை விலை கடைகளும் விரைவு வணிக தளங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது இத்துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்து. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆன்லைன் ஆர்டர்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் போன்றவற்றை சிறு கடைகள் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முடியும். விரைவு வணிக தளங்கள், டெலிவரி செயல்திறனை மேம்படுத்த உள்ளூர் நெட்வொர்க்குகளை மேம்படுத்தி, இரு துறைகளுக்கும் வெற்றி சூழ்நிலையை உருவாக்கலாம் என்பதே வல்லுநர்களின் கருத்து.
மாற்றம் அவசியம்:
- விரைவு வணிகம் ஆண்டுக்கு சராசரியாக 9.1% வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், பாரம்பரியமான சில்லறை கடைகள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நிலைமைக்கு மாற வேண்டியது அவசியம். அந்தவகையில் ஒழுங்குமுறை, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் சரியான சமநிலையை கொண்டிருந்தால், உள்ளூர் கடைகளும் விரைவு வணிகங்களுக்கு இணையாக செழித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.
- இந்திய சில்லறை வர்த்தகத்தின் எதிர்காலம் போட்டியை விட ஒத்துழைப்பில் தான் இருக்கிறது. உள்ளூர் கடைகளுக்கு பரிச்சயமான வாடிக்கையாளர்கள், பழகிய முகங்கள், சமூக உறவுகள் போன்றவற்றோடு விரைவு வணிகத்தின் தனித்துவமான பலத்தை இணைக்கும் போது சமூகத்தில் மிகப்பெரும் பொருளாதார மாற்றம் உருவாவது நிச்சயம்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)