TNPSC Thervupettagam

தெலங்கானா உக்கிரமான மும்முனைப் போட்டி

November 30 , 2023 232 days 165 0
  • கடைசியாக உருவாக்கப்பட்ட இந்திய மாநில மான தெலங்கானா, மூன்றாவது சட்டமன்றத் தேர்தலை இன்று (நவம்பர் 30) சந்திக்கிறது. 2014, 2018 தேர்தல்களில் வென்ற பாரத ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ் - முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி), ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கிறது. காங்கிரஸும் பாஜகவும் ஆட்சிக்குக் குறிவைக்கின்றன. ஆக, இந்த முறை தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
  • 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், ஆட்சிஅமைக்க 60 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தனித் தெலங்கானா அமைய பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்த பிஆர்எஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவு அபரிமிதமாகக் கிடைத்தது. 2014இல் ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெலங்கானா பகுதியில் 63 தொகுதிகளில் வென்று பிஆர்எஸ் ஆட்சியைக்கைப்பற்றியது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்) மக்கள் நலத் திட்டங்களை அடுக்கடுக்காகச் செயல்படுத்தினார். அந்தத் தெம்பில், 2018இல் முன்கூட்டியே தேர்தலை நடத்தி 88 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஆர்எஸ், ஆட்சியை வலுவாகத் தக்கவைத்துக் கொண்டது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் பிஆர்எஸ் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த முறை நிலைமை வேறு!

பலமும் பலவீனமும்

  • ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திலேயே தெலங்கானாவின் முக்கிய முகமாக அறியப்பட்ட கேசிஆர், இன்னமும் தன் செல்வாக்கை இழந்துவிடவில்லை. விவசாயிகளுக்கு ரைத்து பந்து’, பட்டியல் சாதியினருக்குத் தலித் பந்து’, பிற்படுத்தப்பட்டோருக்கு பிசி பந்து’, ஏழை மக்களுக்கு 2பிஎச்கேதிட்டம் எனக் கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். சிறிய மாநிலமான தெலங்கானாவில் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.50,000 கோடிக்கு மேல் கேசிஆர் அரசு செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில்கூட தமிழ்நாட்டைப் பின்பற்றி பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை கேசிஆர் தொடங்கினார்.
  • ஆனால், நலத் திட்டங்களால் பலனடையாதவர்களின் கோபம், திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆளுங்கட்சி யினருக்கு முன்னுரிமை, குடும்ப அரசியல், காலேஷ்வர் அணைத் திட்ட ஊழல் புகார்கள், மதுபான ஊழல், கோழித் தீவன ஊழல், கிரானைட் ஊழல் புகார்கள் எனப் பல நெருக்கடிகளை பிஆர்எஸ் கட்சி எதிர்கொள்கிறது. கரோனாவுக்குப் பிறகு நிதிநிலைமையில் ஏற்பட்ட தொய்வால்,வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனதும் அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • எனினும், நலத் திட்டங்களால் பலனடைந்த மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேசிஆர் இருக்கிறார். குறிப்பாக, கிராமப்புறங்களில் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று நம்புகிறார். எனவேதான், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிடும் என்று வாக்காளர்களை எச்சரிக்கிறார். யாருடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலைச் சந்திக்கும் கேசிஆர், எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்க மாநிலம் முழுவதும் அணிவகுக்கும் கார்களில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். 100 பொதுக்கூட்டங்களுக்கு மேல் பங்கேற்றுப் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

பாஜகவின் கனவு

  • சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் கர்நாடகத்தில்தான் இதுவரை பாஜக வென்றிருக்கிறது. இந்த முறை, தெலங்கானாவில் ஆட்சியமைக்க அக்கட்சி கடுமையாக உழைக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் பெற்ற வெற்றி, 2020இல் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பிஆர்எஸ்-க்கு இணையாக வார்டுகளில் வென்றது போன்ற அம்சங்கள் தெலங்கானாவில் பாஜக வளர்ந்துவிட்டதற்கான சான்றுகளாக அமைந்தன. பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் கேசிஆர் மோதல் போக்கைக் கையாண்டதால், தெலங்கானாவில் பாஜக ஆட்சியை ஏற்படுத்தியே தீர வேண்டும் என அக்கட்சியினர் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ஜனசேனா என்ற கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பாஜக, மொத்தம் 111 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
  • பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், மாநிலமுதலமைச்சர்கள், பாஜகவின் அகில இந்தியத் தலைவர்கள்,பல்வேறு மாநில நிர்வாகிகளையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது பாஜக. பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்யப்பட்டது. கேசிஆர் ஏழைகளுக்கு எதிரானவர்என்ற பிரச்சாரத்தை மோடி முன்னெடுத்தார். தெலங்கானாவில் மோடி சாதனைகள் வேண்டாமா?’ என்கிற கேள்வியை, பிரச்சார உத்தியாக பாஜக பயன்படுத்துகிறது. ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என்று மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்குவோம், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் தங்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் மடிகா சமூகத்தினரின் நீண்டகாலக் கோரிக்கையை ஆராய்வதற்கான குழு அமைக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருக்கிறார்.
  • இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அது இதர சமூகத்தினருக்குப் பிரித்து வழங்கப்படும், கேசிஆருக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணையம், மாநிலத்தில் பொது சிவில் சட்டம், ஏழை மக்களுக்கு இலவசமாக நான்கு சமையல் எரிவாயு உருளை, ஏழைப் பெண் குழந்தைகள் 21 வயதை அடையும்போது ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் என பாஜகவின்தேர்தல் வாக்குறுதிகள் அணிவகுக்கின்றன. வழக்கமான இந்துத்துவ ஆதரவு கோஷங்களையும் அக்கட்சி எழுப்பமறக்கவில்லை. இலவசங்களுக்கு எதிராகப் பிரதமர் மோடியும்பாஜகவினரும் பேசிவரும் சூழலில், தெலங்கானாவில் இலவச வாக்குறுதிகளை அக்கட்சியும் அளிக்கத் தவறவில்லை. சீட்டு கிடைக்காத விரக்தியில் நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தது அக்கட்சிக்குச் சிறிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

காங்கிரஸின் எழுச்சி

  • ஒன்றுபட்ட ஆந்திரத்தில் காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த பகுதி தெலங்கானா. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவும் கைகொடுத்த பகுதி அது. கடந்த தேர்தலில் 21 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. 2019 மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் வென்றது. இந்த முறை போட்டி, பிஆர்எஸ்ஸா - பாஜகவா என்றே இருக்கும் என்று அரசியல் நிபுணர்களால் கருதப்பட்டது. ஆனால், தற்போது பிஆர்எஸ்ஸா - காங்கிரஸா என்கிற அளவுக்குத் தேர்தல் களம் மாறியிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் வியூகங்கள், ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை போன்றவை காங்கிரஸ் கட்சி எழுச்சிபெற உதவியிருக்கின்றன. ராகுல் பங்கேற்கும் கூட்டங்களில் எதிர்பாராத அளவுக்குக் கூட்டம் கூடுவது அக்கட்சியினருக்குப் புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. கர்நாடகத்தில் பெற்ற வெற்றியால் காங்கிரஸ் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது.
  • கர்நாடகத்தைப் போலவே தெலங்கானாவிலும் இலவச வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது. குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.500 மானியம்,நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் ரூ.12,000, ரூ.15,000ஆக உயர்த்தப்படும், விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், முதியோர் உதவித்தொகை ரூ.4,000அதிகரிக்கப்படும் என்பன உள்பட ஏராளமான இலவசவாக்குறுதிகள் அணிவகுக்கின்றன. கர்நாடகத்தில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் உடனே நிறைவேற்றப்பட்டதை எடுத்துக் கூறியும் காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரிக்கிறது.
  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் மாநில முதலமைச்சர்களும் தீவிரப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பாஜகவின் பிஅணிதான் பிஆர்எஸ் கட்சிஎன்று ராகுல் விமர்சிக்கிறார். டெல்லி மதுபான கொள்முதல் ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையதாக விசாரிக்கப்பட்ட சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை ஏன் கைது செய்யவில்லை என்று கூறித் தன் வாதத்துக்கு வலுசேர்க்கிறார். அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவதாகவும் ராகுல் விமர்சித்திருக்கிறார்.
  • ஐந்து மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தவரை - தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அதிக நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது தெலங்கானாவில்தான். எனவே, தெலங்கானா தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து தேசமே காத்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்