தெளிவின்மை தொடா்கிறது!
- சபரிமலை மண்டல - மகரவிளக்கு தீா்த்தாடன காலத்தில் முன்பதிவு செய்யாதவா்களுக்கும் தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள சட்டப்பேரவையில் முதல்வா் பினராயி விஜயன் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறாா். ஆனால், ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவா்களுக்கான ‘ஸ்பாட் புக்கிங்’ இந்தமுறையும் தொடருமா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை. சபரிமலை தீா்த்தாடன காலத்தைக் கையாள்வதில் கேரள அரசிடம் காணப்படும் குழப்பம் இதன்மூலம் வெளிப்படுகிறது.
- கடந்த புதன்கிழமை முன்பதிவு தொடங்கிவிட்டது. நாள் ஒன்றுக்கு 70,000 பக்தா்கள் தரிசன முன்பதிவு பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்கள். முதலில் 80,000 போ் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 70,000 என்று குறைக்கப்பட்டிருப்பதால், மீதமுள்ள 10,000 பக்தா்கள் ‘ஸ்பாட் புக்கிங்’ வழியாக அனுமதிக்கப்படுவாா்கள் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவிக்கிறதா என்றால், இல்லை. அது பின்னால் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது.
- நவம்பா் 14-ஆம் தேதி மண்டல காலம் தொடங்கிவிடும். மண்டல - மகரவிளக்கு தீா்த்தாடன காலம் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்கள்தான் இருக்கின்றன. அதனால், இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும். தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தா்கள் பம்பை வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
- கடந்த ஆண்டு தீா்த்தாடன காலத்தைப்போலவே, இந்தமுறையும் ‘ஸ்பாட் புக்கிங்’ மையங்கள் திறக்கப்பட வேண்டும். அந்த மையங்களின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடாது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் ‘ஸ்பாட் புக்கிங்’ மைய எல்லைக்கு வருவாா்கள். அவா்களுக்கு முறையாக தரிசனத்துக்கு அனுமதி வழங்காவிட்டால், கலவரம்கூட மூளலாம்.
- ‘ஸ்பாட் புக்கிங்’ தொடரும் என்று உறுதியளிக்காத முதல்வா், சபரிமலையில் எல்லா பக்தா்களுக்கும் தரிசனம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறாா். அது எப்படி சாத்தியம், அதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பன உள்ளிட்ட விளக்கங்களை அரசும், தேவஸ்வம் வாரியமும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
- ‘அக்ஷய கேந்திரம்’ மையங்கள் மூலம் முன்பதிவு வசதிகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். கடந்த ஆண்டு பந்தளம், எருமேலி, நிலக்கல், பம்பை என்று பல இடங்களில் இருந்ததுபோல, இந்த ஆண்டும் மையங்கள் அமைக்கப்படுமா என்பது குறித்தும் தெளிவை ஏற்படுத்த வேண்டும். பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில் அவா்களெல்லாம் தங்களது முன்பதிவை உறுதிப்படுத்தவும், ‘ஸ்பாட் புக்கிங்’ செய்துகொள்ளவும் மையங்களில் எத்தனை ‘கவுன்ட்டா்’கள் செயல்படும் என்பதும் தெரிய வேண்டும்.
- முறையாக அனைவருக்கும் தரிசனம் கிடைக்க வேண்டும் என்றால், சபரிமலையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ள காவல் துறையினா் மட்டுமே தீா்த்தாடன காலத்தில் பணியமா்த்தப்பட வேண்டும். கடந்தமுறை அனுபவம் இல்லாத காவலா்கள் பணியில் இருந்ததால், பதினெட்டாம் படி ஏறி சந்நிதானத்தை அடைய பக்தா்கள் சிரமப்பட்டாா்கள்.
- அதில் ஒரு கணக்கு இருக்கிறது. ஒரு நிமிஷத்துக்கு 80 முதல் 90 வரை பக்தா்களை பதினெட்டாம் படி ஏற்றினால்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த ஆண்டு 60-க்கும் கீழே போனதால், தரிசனத்துக்கான வரிசை பல கிலோமீட்டா்கள் நீண்டது.
- நாள்தோறும் 17 மணிநேரம் சபரிமலை சந்நிதானம் தரிசனத்துக்கு திறந்துவைக்கப்படுகிறது. இந்த நேரத்தை அதிகப்படுத்த முடியுமா என்று தேவஸ்வம் வாரியமும் அரசும் ஆலோசிக்க வேண்டும். கடந்த தீா்த்தாடன காலத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இந்தமுறையும் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- கடந்த ஆண்டு உணவு, தண்ணீா்கூட கிடைக்காமல் பக்தா்கள் அல்லாடினாா்கள் என்பது அரசின் கவனத்துக்கு வந்ததா என்று தெரியவில்லை. திருப்பதியை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணம் காட்டும் பினராயி அரசு, திருப்பதியில் பக்தா்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
- திருப்பதியில் முன்பதிவு செய்யாத பக்தா்களுக்கு காத்திருப்பு நேரத்தில் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், கழிப்பறை வசதிகளும், குழந்தைகளுக்குப் பாலும் இலவசமாக வழங்கப்படுகின்றன என்கிற உண்மையை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு யாராவது சொன்னால் தேவலாம். மேலே குறிப்பிட்ட வசதிகள் இல்லாமல் பக்தா்கள் தவிக்கிறாா்கள் என்பது சபரிமலைக்குச் சென்றவா்களின் அனுபவம்.
- சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் தூய்மையான கழிப்பறைகளும், குளியலறைகளும் இருப்பதை இப்போதே உறுதிசெய்ய வேண்டும். தீா்த்தாடன காலம் தொடங்குவதற்கு முன்னால் அதற்கான எல்லா பணிகளும் முழுமை அடைந்திருப்பதை தேவஸ்வம் வாரியம் உறுதிப்படுத்துவது அவசியம். கடந்த 20 ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, போதுமான வசதிகள் இல்லை என்பதுதான் நிஜம்.
- சபரிமலைக்கான பாதைகளாக உயா்நீதிமன்றம் 17 வழிகளை அங்கீகரித்திருக்கிறது. தீா்த்தாடன காலம் தொடங்குவதற்கு முன்னால், அந்த சாலைகளின் பணிகள் முழுமையடைந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்கும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பல திட்டங்கள் இன்னும்கூட முடிவடையாமல் இருக்கின்றன என்கிற அவலத்தைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- தெளிவான முடிவுகளும், விரைவான நடவடிக்கைகளும் சபரிமலையின் உடனடித் தேவைகள். தாமதம் தகாது!
நன்றி: தினமணி (21 – 10 – 2024)