TNPSC Thervupettagam

தேக்கு மரம் வளர்ப்போம்

April 11 , 2024 280 days 192 0
  • உலகின் வன்மர இனங்களில் முதன்மையானதாகவும் செழிப்பின் சின்னமாகவும் கருதப்படும் தேக்கு மரங்கள் இயற்கையாக நமது நாட்டில் 90 லட்சம் ஹெக்டேர் பரப்பில் செழித்து வளர்ந்துள்ளன. 20 முதல் 30 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. உலகின் முதல் தேக்குத் தோட்டம் 1842 -ஆம் ஆண்டு நமது நாட்டின் கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூரில் கோனோலி, சோட்டு மேனன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • 1980-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டுக்கான தேசிய வனக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு சொந்தமான காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. மரத் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிலங்களில் இருந்து மரங்கள் வெட்டிக்கொள்ள வனக் கொள்கை பரிந்துரைத்தது.
  • இந்தியாவில் தேக்கு மரங்களை தனியார் தோட்டத்தில் நடவு செய்ய தூண்டிய இந்த கொள்கை மாற்றம் தேக்கு மரங்களின் விலையை இயல்பை விட 500 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியது. அதிக லாபம் ஈட்டலாம் என இந்த வாய்ப்பைப் பொருளாதார ரீதியாக பயன்படுத்த பல நர்சரி உரிமையாளர்களும் தனியார் தோட்ட உரிமையாளர்களும் பல்வேறு தேக்கு நடவு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.
  • இந்தியாவில் இத்தகைய திட்டங்களை விளம்பரப்படுத்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமப்புற விவசாயிகள் இந்த விளம்பரங்களால் பாதிக்கப்பட்டனர். நடவு செய்த 8 முதல் 12 ஆண்டில், அதாவது குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் என்ற வாக்குறுதியுடன் விதை, நாற்றங்கால் போன்ற பாரம்பரிய நடவு முறைகளுக்கு மாற்றாக தனியார் நர்சரிகள், தோட்ட நிறுவனங்கள் திசு வளர்ப்பு தேக்கு செடி நடவு முறையை ஊக்குவித்தன. இத்தகைய வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் திசு வளர்ப்பு தேக்கு செடிகளை நடவு செய்தனர்.
  • தேக்கு நாற்று ஒன்றை 400 முதல் 2,500 ரூபாய்க்கு விற்ற சில நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரத்திற்கு 50,000 முதல் 1,00,000 ரூபாய் வருமானம் தருவதாக உறுதியளித்தன. சில மாநில அரசாங்கங்கள் தேக்கு மரத் தோட்டத்திற்கு மானியங்கள் வழங்கின. அதிக வருமானம் பெறும் நோக்கில் விவசாயிகள் அடர்த்தியாக தேக்கு நடவு செய்தனர். தேக்கு நடவு செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேக்கு மரங்கள் வளர்ச்சியடையாததால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர்.
  • தேக்கு மர வளர்ச்சி குறைபாட்டை நடவு முறை, நடவு அடர்த்தி மட்டும் தீர்மானிக்காது என்றும் தேக்கு தோட்டங்களை நிர்வகிப்பதற்கும் வளர்ப்பதற்கும் விதிமுறைகள் அவசியம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • இந்திய தீபகற்பம், பர்மிய-தாய்லாந்து-லாவோஸ், இந்தோனேசியா (இன்சுலர்) போன்ற மூன்று முதன்மையான மரபு தோற்ற தேக்கு இனங்கள் உலகில் உள்ளன. மரத்தின் தரம், வளர்ச்சி விகிதம், தண்டு வடிவம், விதை பண்பு, காலநிலை மற்றும் மண்ணின் தன்மை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தேக்கு இனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகிறது. இந்த காரணிகள் கொண்டே அந்தந்த பகுதிகளில் நடவு செய்யப்படும் தேக்கு விதைகள் அல்லது நடவுப் பொருட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
  • இந்திய தேக்கு மரங்களின் தனித்துவமான பண்புகளை காலநிலை, தேக்கு பயிடப்படும் மண் தீர்மானிக்கின்றன. அதிக மழைப்பொழிவால் செழித்து வளரும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மலபார் கடற்கரை தேக்கு மரங்கள் கப்பல், படகு கட்டுமானத்திற்கும் மத்திய இந்திய தேக்கு மரங்கள் மரச்சாமான்கள், மரத் தளவாடங்கள், அழகு பொருட்கள் செய்வதற்கும் ஏற்றவை.
  • மத்திய பிரதேசம் சியோன் பகுதி தேக்கு மரங்கள் குடன்மரம் (ஹார்ட்வுட்), சோற்றிமரம் (சப்வுட்) ஆகியவற்றின் கலவையில் தங்க மஞ்சள் நிறத்திலும் மராட்டிய மாநிலம் சந்திராபூர் பகுதி தேக்கு மரங்கள் தனித்துவமான வளர்ச்சி வளைய இழையமைப்புடன் கூடிய பிரத்யேக நிறத்திலும் காணப்படுகின்றன. அலங்கார மரச்சாமான்கள், அலமாரிகள் தயாரிப்பதற்கு ஏற்ற தேக்கு மரங்கள் ஆந்திர மாநிலம் கோதாவரி பள்ளத்தாக்கு பகுதியிலும் மதிப்புமிக்க இளஞ்சிவப்பு நிற குடன்மரங்கள் அதே மாநிலத்தின் ராஜுல்மடுகு பகுதியிலும் காணப்படுகின்றன.
  • ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வணிக ரீதியான மரம் நடும் வழக்கம் வனத்துறையால் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்டது. மர இடைவெளிக்கான நெறிமுறை அடிப்படையில் ஒரு மரத்திற்கு 2 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்ட சதுர பரப்பு வீதம் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2,500 மரங்கள் நடப்பட்டன.
  • மரங்களின் வளர்ச்சி விகிதத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக குறிப்பிட்ட தேக்கு மரக்கன்றுகளை தேர்ந்தெடுத்து அகற்றும் பயிர்க்கலைத்தல் முறைப்படி 50 சதவீத தேக்கு மரங்கள் 4 முதல் 5 ஆண்டுகளிலும் மீதமுள்ள 50 சதவீத மரங்கள் 8 முதல் 10 ஆண்டுகளிலும் அறுவடை செய்யப்படுகின்றன.
  • பயிர்க்கலைத்தல் இன்றி வளர்க்கப்படும் தேக்கு கன்றுகள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலும் 10 முதல் 15 செ.மீ சுற்றளவு கொண்ட மரங்களாக வளரும் என்றும், பயிர்க்கலைத்தல் முறை பின்பற்றப்படும் போது 1 முதல் 2 கன மீட்டர் தடிமனான பொருளாதார மதிப்பு கொண்ட மரத்தை அறுவடை செய்யலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • இந்தியாவில், அதிக செலவு கொண்டதாகவும் சொற்ப வருமானம் தருவதாகவும் கருதப்படும் தேக்கு மரங்களை நடவு செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். இந்த தயக்கத்தை களைய தேக்கு மர நடவு செய்யும் செயல் திட்டத்தில் மாற்றம் தேவை.

நன்றி: தினமணி (11 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்