தேசப் பிதாவும் தேசப் பிரிவினையும்
- தேச விடுதலைப் போரை முன்னின்று நடத்திய காங்கிரஸின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அவை முறையே ஹியூம்ஸ் (இந்திய தேசிய காங்கிரûஸ உருவாக்கியவர்) சகாப்தம், திலகர் சகாப்தம், காந்தி சகாப்தம் ஆகும்.
- மெத்தப் படித்தவர்கள், மேல்நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடித்தவர்கள், செல்வந்தர்கள், சீமான்கள் இடம்பெற்றிருந்த காங்கிரûஸ ஏழை, எளியவர், நலிந்தவர், ஒடுக்கப்பட்டோர், மகளிர் ஆகிய அனைத்துப் பிரிவினரின் இயக்கமாக, மக்கள் இயக்கமாக மாற்றியவர் காந்தி அடிகளே!
- தனி மனித ஒழுக்கத்தையும் பொது வாழ்வில் நேர்மை, நாணயம், தியாக உணர்வையும் முன்நிறுத்தியவர் காந்திஜி. உலக மக்கள் அனைவரையுமே ஒன்றாக உடன் பிறந்த சகோதரர்களாக நேசித்தவர் அவர். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்திய தேசம் விடுதலை பெற வேண்டும் என்பது அவரின் உயரிய லட்சியங்களில் முதன்மையானது.
- ஜாதி, மத பேதமற்ற, பேதங்களும் பிரிவினைகளும் இல்லாத, எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட இந்தியா, பிரிட்டானிய ஆட்சியரிடமிருந்து விடுபட்டு, தன்னாட்சி இந்தியாவைக் காண்பதே அவரின் லட்சியம். அதை அடைவதற்கு அவர் கையாண்ட "ஆயுதங்கள்' சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம். தில்லி, கராச்சி, டாக்கா ஆகிய அனைத்துப் பகுதிகளும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த இந்தியாவே அவரின் லட்சியம். அந்த லட்சியத்தில் உத்தமர் காந்தி முழு வெற்றி பெற்றாரா என்றால், வரலாற்று ஆய்வாளர்கள் தரும் பதில், "முழு வெற்றி பெறவில்லை' என்பதே ஆகும்.
- அண்ணல் காந்தியின் லட்சியம் வெற்றி பெறாததற்கு அடிப்படைக் காரணிகள் என்ன? காரண கர்த்தாக்கள் யார்? தடைக் கற்களாக நின்றவை யாவை? என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆழ்ந்து ஆய்வு செய்து அவற்றைப் பட்டியலிடுகிறார்கள்.
- முதலாவதாக, 1945-இல் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. வெற்றிக்கு வித்திட்ட வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். தொழிலாளர் கட்சியின் சார்பாக கிளெமன்ட் அட்லி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். அட்லி தலைமையிலான அமைச்சரவை கூடியது. இந்தியாவை இதற்கு மேலும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. விரைவில் சுதந்திரம் வழங்கிவிடலாம் என்ற முடிவை எடுத்தது. சர்ச்சிலும் அதை ஆதரித்தார்.
- இங்கே கவனிக்க வேண்டியது, பிரிட்டானிய அரசின் ராஜ தந்திரம் அல்லது சூழ்ச்சி இதில் அடங்கியிருந்தது. "சுதந்திரம் வழங்கலாம், ஆனால் ஒன்றுபட்ட இந்தியாவாக அல்ல! பிளவுபட்ட, மத அடிப்படையில் பிரிவினையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்' என்பதுதான் அது.
- "பிரிவினையால் இந்தியாவில் உள்நாட்டுப் போர் நிகழலாம். அழிவை அவர்களே தேடிக் கொள்ளட்டும். அல்லது அங்கு நீண்ட காலத்துக்கு ஜனநாயகம் நிலைக்காது. பலவீனமான இந்தியாதான் நமக்கு என்றும் பயனுள்ளதாக இருக்கும்' என்று ஆங்கிலேய அரசு கணித்தது. அதற்கேற்ப காய்களை நகர்த்தியது.
- உண்மை நிலையை உணர்ந்த உத்தமர் காந்தி, "பிரிவினையை ஏற்கமாட்டேன்; பிரிவினை என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நடக்கும்' என எச்சரித்தார். அண்ணலின் எச்சரிக்கை எடுபடவில்லை. இப்படி ஆங்கிலேய அரசின் ராஜதந்திரம் அல்லது சூழ்ச்சிதான் அண்ணலின் லட்சியம் முழு வெற்றி பெறாததற்கு முதல் காரணம்.
- இரண்டாவதாக, "ஒன்றுபட்ட ஒரே இந்தியா உருவானால், இங்கு வாழும் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் அரசாக அது அமையும். சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, இஸ்லாமியர்களுக்கான தனி நாடு பாகிஸ்தான் வேண்டும்' என்ற கோரிக்கையை முஸ்லிம் லீக் கட்சி முன்வைத்தது. அந்தக் கோரிக்கையைக் கூர்மைப்படுத்தி, இஸ்லாமிய மக்களை ஒன்று திரட்டினார் முகமது அலி ஜின்னா. அவருக்கு ஊக்கம் அளித்து மறைமுக ஆதரவும் தந்தது பிரிட்டன் அரசு. மதம் என்ற பெயரால் முஸ்லிம் மக்களிடம் அச்சத்தைப் பரப்பியது முஸ்லிம் லீக்.
- நிலைமையை சரியாகப் புரிந்துகொண்ட அண்ணல், மக்களிடம் குறிப்பாக, சிறுபான்மையினரிடம், "இந்தியாவின் உயர்ந்த மலைகளும், அங்கு வளரும் மரங்களும், ஓடும் ஆறுகளும், வளம் கொழிக்கும் நிலங்களும் உங்களுக்கும் சொந்தமானவையே. இந்தியாவின் வாழ்விலும் வளர்ச்சியிலும் உங்கள் பங்கு கணிசமாக உள்ளது. இது உங்கள் மண். உங்கள் சொத்து. அத்தனையையும் துறந்துவிட்டுத் தனியாகப் பிரிய நினைப்பது உங்களுக்கு நீங்கள் இழைத்துக் கொள்ளும் தீங்காகும். ஒன்றுபட்ட இந்தியாவில் உங்களுக்குப் பாதகம் வரும் எனத் தெரிந்தால், அதைத் தடுத்து நிறுத்தும் முதல் தலைவனாக, வீரனாக, தளபதியாக நானே களத்தில் நிற்பேன்' என உறுதி அளித்தார் மகாத்மா.
- "மதம் என்பது நம்பிக்கை - இறை நம்பிக்கை சார்ந்தது. இறைவன் ஒருவனே. அவனை அழைக்கும் பெயர்கள்தான் மாறுபடுகின்றன' என்று வலியுறுத்திய அவரின் அன்றாட பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவக் கீதை, குர்ஆன், பைபிள் போன்ற அனைத்து மதப் பிரார்த்தனைப் பாடல்களும் இசைக்கப்பட்டன.
- ஆனால், அவரின் வேண்டுகோள்கள் காற்றில் கரைந்து போயின. பிரிட்டானிய சூழ்ச்சியானது உடைக்க முடியாத தடைக்கல்லாக, உறுதியாக நின்றது. இது இரண்டாவது காரணம். மதத்தின் அடிப்படையில் நாடுகள் உருவாக முடியுமென்றால், கிறிஸ்தவ மதத்தைக் கடைப்பிடிக்கும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேலைநாடுகள் ஏன் இணையவில்லை? இஸ்லாமிய மதத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள் ஏன் ஒரே நாடாக ஒருங்கிணையவில்லை?
- இத்தகைய அறிவுபூர்வமான வாதங்கள் எவையும் மக்களிடம் எடுபடவில்லை. சந்தேகமும் அச்சமும் அவர்களின் கண்களை மறைத்தன. மகாத்மாவின் லட்சியம் தோல்வி அடைந்ததற்கு இது மூன்றாவது தடைக்கல்லாகும்.
- ஜின்னா இஸ்லாமிய மதத்தைக் கையில் எடுத்தார். இஸ்லாமியர்களைப் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதிராக முன் நிறுத்தினார். அதன் பயனாக அவர்களின் கோரிக்கையான தனி நாடு - பாகிஸ்தான் உருவானது.
- அதே பாணியில் அண்ணல் காந்தி ஹிந்துக்களை ஏன் ஒன்றுபடுத்த முயற்சிக்கவில்லை? காரணம், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பது பாவம்; தவறானது; தன் லட்சியத்துக்கு எதிரானது. சுதந்திரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதை நான் செய்ய மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணல்.
- "ஒன்றுபட்ட இந்தியா என்ற லட்சியத்துக்காக என் உயிர் மூச்சான மதச்சார்பின்மை, எம்மதமும் எனக்குச் சம்மதம் என்ற கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்' என்றார். அண்ணலின் உயர்ந்த லட்சியமே அவர் ஒன்றுபட்ட இந்தியாவை அடைவதற்கான நான்காவது தடைக்கல்லாக அமைந்தது.
- 1946-இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு சரியாகச் செயல்பட இயலவில்லை. முஸ்லிம் லீக் அமைச்சர்களும் உறுப்பினர்களும் ஒத்துழைப்புத் தராமல், அரசு கொண்டுவரும் அனைத்துத் தீர்மானங்களையும் கண் மூடித்தனமாக எதிர்த்த செயல்பாடுதான் அதற்குக் காரணம்.
- "ஒன்றாக இருந்து கொண்டு, காலமெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதைவிட, சகோதரர்களாகப் பிரிவோம்; பாகிஸ்தான் பிரியட்டும். அதன்பின் புதிய நவீன பாரதத்தை நாமே உருவாக்குவோம்' என்று பண்டித நேரு, படேல், ராஜாஜி, ஆசாத், ராஜேந்திர பிரசாத் போன்ற மூத்த தலைவர்கள் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இது ஐந்தாவது தடைக்கல்லாக அமைந்தது.
- அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாதான் காந்திஜியின் லட்சியம். விரும்புகிறவர் எவரும் இந்தியாவில் வாழலாம்; மதம் அதற்குத் தடை அல்ல என்றார் அண்ணல். மத அடிப்படையில் பிரிவினை என்பதில் முஸ்லிம் லீக் பிடிவாதமாக நின்றது.
- இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு கூடியது. பிரிவினையை ஏற்பதா? எதிர்ப்பதா? என்பது விவாதப் பொருளானது. பிரிவினையை ஆதரித்து வாக்களித்தவர்கள் 153 பேர், எதிர்த்து வாக்களித்தவர்கள் 29 பேர் மட்டுமே! அண்ணல் காந்திக்கு இது ஆறாவது தடைக்கல்லாக நின்றது.
- அரசியலில் வழிகாட்டும் தெய்வமாகவும் அவதார புருஷராகவும் விளங்கிய மகான் காந்தியின் ஒன்றுபட்ட இந்தியா என்ற அறிவுரையை மக்களின் மனமும் ஏற்கத் தயாராக இல்லை. "சுதந்திரம் வருகிறது; புதிய இந்தியா உருவாகப் போகிறது அதை ஏற்க வேண்டியதுதானே!' அதுதான் அன்றைய இந்தியர்களின் மனநிலை. அந்த மனநிலையை மாற்ற முடியவில்லை. இதுதான் எவரும் அசைக்க முடியாத ஏழாவது தடைக்கல்.
- "உலகத்தின் பெரும் பகுதியை அடக்கி ஆண்ட பிரிட்டானிய பேரரசை அசைத்துவிடலாம். தான் தலைமை தாங்கும் இயக்கம் பயணிக்கும் திசையையும் மாற்றிவிடலாம். எதிரியின் மனதையும் கூட மாற்றிவிடலாம். ஆனால், மக்கள் கூட்டத்தின் அமைந்துவிட்ட ஒரு முடிவான மனநிலையை எவராலும் மாற்ற முடியாது! ஏன், அது மகாத்மாவால்கூட முடியாது' என்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் அமித் மஜும்தார்.
- விடுதலைப் போரில் தேசப் பிரிவினைக்கான காரணங்கள் இன்றும் தொடர் ஆய்வுக்குட்பட்டு வருகின்றன. இந்தியா இரண்டாவதை அண்ணலின் மனம் ஏற்கவில்லை. ஆனால், அவர் வாழும் காலத்திலேயே அது இரண்டாக உடைந்துவிட்டது. 1971-இல் வங்கதேசம் உருவாகி அது மூன்றாகிவிட்டது.
- பாரத தேசம் மேலும் உடையக் கூடாது. பலவீனப்படக் கூடாது. அத்தகைய ஒற்றுமையை நோக்கிய மனநிலையை, உறுதிப்பாட்டை நாம் உருவாக்க வேண்டும். அதை சுதந்திர தினச் சூளுரையாக நாம் ஏற்க வேண்டும்!
- அதுவே மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.
நன்றி: தினமணி (15 – 08 – 2024)