- தேசியப் புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute) பயன்படுத்தப்படும் ஆய்வு முறைகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய அரசின் முன்னாள் தலைமைப் புள்ளியியலாளர் டாக்டர் பிரணாப் சென் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்நிறுவனம்தான் அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கான தரவுகள், பல்வேறு துறைகளில் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றம், மக்களின் தற்போதைய வாழ்வாதார நிலைகளை விவரிக்கும் தரவுகள் ஆகியவற்றைத் தருகிறது. எனவே, இந்தக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியம்.
வாதப் பிரதிவாதங்கள்:
- தேசிய மாதிரி ஆய்வுகள் (National Sample Survey), தேசியக் குடும்பநல ஆய்வுகள் (National Family Health Survey, NFHS) உள்ளிட்ட கணக்கெடுப்புகளில் காலாவதியான ஆய்வுமுறைகள் பயன்படுத்தப் படுவதாகப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஷாமிகா ரவி, விவேக் தேவராய் ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள்.
- தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஆய்வுமுறைகள் இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன என்பது இவர்களின் குற்றச்சாட்டு. மேலும், கடந்த 30 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றமடைந்த இந்தியப் பொருளாதாரத்தை இந்தப் பழைய ஆய்வுமுறைகள் கணக்கிடத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
- மற்றொருபுறம், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுமுறைகள், இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் இல்லை என்று பி.சி.மோகன், அமிதாப் குண்டு போன்றோர் வாதிடுகின்றனர். நடைமுறையில் உள்ள ஆய்வுமுறையை மறுகட்டமைப்பு செய்யவோ, மாற்றியமைக்கவோ தேவையில்லை; அதேவேளையில், தற்போதுள்ள ஆய்வுமுறைகளில் உள்ள பிழைகளைக் குறைத்தால் போதும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதாவது, ஆய்வுமுறைகளில் மாற்றம் தேவையில்லை; ஆனால், மாதிரிகளைத் (sample) தேர்ந்தெடுப்பதில் உள்ள பிழைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது இவர்களின் வாதம்.
- அத்துடன், பொருத்தமான ‘மாதிரி மதிப்பு’களை (Sample Weights) பயன்படுத்துவதன் மூலம், தேவையான பிரதிநிதித்துவத்தை மாதிரிகள் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோருகின்றனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில், குறிப்பிட்ட ஆய்வுக்கு உள்படுத்தப் படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கீடு ‘மாதிரி மதிப்பு’ எனப் புள்ளியியல் துறையில் அழைக்கப்படுகிறது.
- அதாவது, ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நபரும் எவ்வளவு நபர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதாகும். உதாரணமாக, 100 பேரில் 10 மாதிரிகள் எடுத்தால் ஒவ்வொருவரும் 10 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் எனக் கொள்ளலாம்.
சந்தேகமும் ஆய்வும்:
- இந்தச் சூழலில், தேசியப் புள்ளியியல் நிறுவன ஆய்வுமுறையில் முறைப்படுத்தப்பட்ட ஊரகச் சார்பு நிலை காணப்படுகிறதா அல்லது இந்தியப் பொருளாதார முன்னேற்றம் பற்றிய வேறு பார்வைகளுக்குத் தற்போதுள்ள தரவுகள் தடையாக உள்ளனவா என அறிந்துகொள்ள முற்பட்டோம். இதற்காக, தேசியக் குடும்பநல ஆய்வின் தரவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
- இது தேசிய நல-குடும்ப நலவாழ்வு அமைச்சகம், இந்திய மக்கள் அறிவியல் நிறுவனத்துடன் (IIPS) இணைந்து கடந்த 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நடத்தும் குடும்ப நலம்-ஊட்டச்சத்து பற்றிய கணக்கெடுப்பாகும். 1992-93 (NFHS-1), 1998-99 (NFHS–2), 2005-06 (NFHS-3), 2015-16 (NFHS-4), 2019-21 (NFHS-5) என ஐந்து சுற்றுக்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
- தேசியக் குடும்பநல ஆய்வு மாதிரிக்கான கணக்கீட்டை மேற்கொள்ளும்போது, ஊரகப் பகுதிகளில் அதிகளவில் மாதிரி எண்ணிக்கை இருப்பதால், இந்தியாவின் முன்னேற்றம் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்று ஷாமிகா ரவியும் விவேக் தேவராயும் விமர்சிக்கின்றனர்.
- சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஊரக-நகர்ப்புற மாதிரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் தேசியக் குடும்பநல ஆய்வு முறையானது, ஊரக மக்கள்தொகையை மிகைப்படுத்திக் காட்டுகிறது என்பது இவர்களின் வாதம். ஆனால், இதுவரை நடந்துள்ள தேசியக் குடும்பநல ஆய்வின் ஐந்து சுற்றுக்களையும் ஆய்வுசெய்து பார்க்கையில், அவர்கள் கூறுவதுபோல் ஊரக மக்கள்தொகை தொடர்ந்து மிகைப்படுத்திக் காட்டப்படவில்லை என்பது புலனாகிறது.
- தேசியக் குடும்பநல ஆய்வில் குறிப்பிடப்படும் நகர்ப்புற மக்கள்தொகைக் கணக்கென்பது, உலக வங்கியின் மதிப்பீடுகளையும், 1991, 2001, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளின் அடிப்படையிலான ஊரக மக்கள்தொகை சார்ந்த கணிப்புகளையும் ஒட்டியே அமைந்துள்ளது. இதன் மூலம், இந்த ஆய்வில் ‘திட்டமிடப்பட்ட ஊரகச் சார்பு நிலை’ இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால், ஊரக மக்கள்தொகையைக் குறைத்து மதிப்பிடுதல் என்பது 2005-06இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் (NFHS-3) நடந்துள்ளது.
- ஊரக மக்கள்தொகையை மிகைப்படுத்துதல் என்பது NFHS-2 (1998-99), NFHS-5 (2019-21) ஆகியவற்றில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. NFHS-1 (1992-93), NFHS-4 (2015-16) ஆகிய இரண்டு சுற்றுகள்தான் உலக வங்கியின் மதிப்பீடுகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் கணிப்புகள் ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளன. அதேவேளையில், இந்தப் பிழைகள் சீரற்று அமைந்துள்ளனவே தவிர, ‘திட்டமிடப்பட்ட தவறு’ என்பது இல்லை.
பிழைகளைக் குறைக்கும் வழிகள்:
- பொதுவாக, தேசியக் குடும்பநல ஆய்வில், ஊரகப் பகுதிகளோடு ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் அதிகளவிலான மாதிரிகள் ‘பதிலளிக்கவில்லை’ என்று இருக்கும். ஆனால், இதற்கும் நகர்ப்புற/ ஊரகச் சார்பு மதிப்பீடுகளுக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை.
- உதாரணமாக, நகர்ப்புற மக்கள்தொகை மதிப்பீடுகளுடன் நெருங்கி அமைந்துள்ள NFHS-1இல்தான் அதிகளவில், அதாவது 94.5% ‘பதிலளிக்கவில்லை’ என்னும் மாதிரிகள் பதிவாகியுள்ளன. அதேபோல் நகர்ப்புற மக்கள்தொகையைக் குறைத்து மதிப்பிட்டுள்ள NFHS-5இல்தான் NFHS -1க்குப் பின் குறைந்த அளவில் (95.6%) ‘பதிலளிக்கவில்லை’ என்னும் மாதிரிகள் உள்ளன.
- மாதிரிகள் பதிலளித்தாலும் இல்லாவிட்டாலும், இவற்றுக்குக் கொடுக்கப்படும் மதிப்பை நிர்ணயம் செய்வதில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மதிப்பு கொடுக்கப்படாத நகர்ப்புற மாதிரிகளின் சதவீதத்தைப் பார்க்கையில், மாதிரிகளுக்குப் பொருத்தமான மதிப்புகளைத் தருவதன் மூலம் பிழைகளைப் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
- NFHS-1, 2, 3, 4, 5 ஆகியவற்றில் மதிப்பிடப்படாத நகர்ப்புற மாதிரிகளின் சதவீதம் என்பது முறையே 31%, 31.3% 44.2% 28%, 28.2% ஆகும். இதன் மூலம் மாதிரிகளுக்குப் பொருத்தமான மதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அனைத்து வகையான பிழைகளும் கணக்கிடப்பட்டாலும் ஊரக-நகர்ப்புறப் பிரதிநிதித்துவம் குறைத்து மதிப்பிடப்படுவதைப் பெருமளவு சரி செய்திருக்கலாம்.
அடுத்து என்ன?
- இந்தச் சூழலில், பிரணாப் சென் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒட்டுமொத்த ஆய்வு முறையையும் முழுதாக மாற்றியமைப்பதை விடுத்து, மேற்கூறிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மாதிரிகள் போதிய அளவில் பிரதிநிதித்துவம் பெற்றவையாக இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
- மாறாக, நடைமுறையிலேயே இல்லாத ‘முறைப்படுத்தப்பட்ட ஊரகச் சார்பு’த்தன்மையை ஆய்வுமுறைகளில் குறைப்பதாகக் கூறி, முறைப்படுத்தப்பட்ட நகர்ப்புற சார்புத்தன்மையை நிதி ஒதுக்கீடுகள், கொள்கை முடிவுகள் திட்டங்களிலும் பரவலாக இருக்கும் விதத்தில் தேசிய ஆய்வுகளை மாற்றிவிடக் கூடாது. எங்கெல்லாம் சார்புத்தன்மை நிலவுகிறதோ, அவற்றை நிவர்த்தி செய்வதுதானே சரியான நடவடிக்கையாக இருக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2023)