TNPSC Thervupettagam

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம்

May 20 , 2019 2057 days 21602 0
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme - MNREGS) என்றறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-MGNREGA) எனும் இந்தியச் சட்டமானது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று இயற்றப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி எனும் சொல் இச்சட்டத்தின் முன்னொட்டாக இணைக்கப்பட்டது.
  • இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கொள்கைகளின் 41வது சரத்தின் கீழ் வரும்  வேலைக்கான உரிமையை ஆதாரமாகக் கொண்டது.

  • இச்சட்டமானது கிராமப்புற குடும்பங்களில் உள்ள திறன் சாரா உடல் உழைப்பில் ஈடுபட விருப்பமுள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களுக்கும் வருடத்திற்கு அதிகபட்சமாக 100 நாட்கள் ஊதிய வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றது.
  • இது ஊதியம் தேடுபவர்களால் வைக்கப்படும் வேலைக்கான கோரிக்கையால் உருவாகும் தேவையால் வழிநடத்தப்படும் ஒரு திட்டமாகும்.
  • இச்சட்டமானதுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்னிச்சையான இலக்கு முறையின் மூலம் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.
  • இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகளுடன் இணைந்து இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றது.
  • உலக வங்கியானது அதன் 2014 ஆம் ஆண்டிற்கான “உலக மேம்பாட்டு அறிக்கையில்” இத்திட்டத்தினை “கிராமப்புற வளர்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

 

பயனாளிகள்
  • இச்சட்டமானது 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று 200 மாவட்டங்களில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2007-2008 நிதியாண்டில் கூடுதலாக 130 மாவட்டங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று முதல் கீழ் மீதமுள்ள அனைத்து மாவட்டங்களும் NREGA-இன் அறிவிக்கப்பட்டன.

  • இதனால் NREGA திட்டமானது நூறு சதவீத நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களைத் தவிர ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கியது.
  • வேறு விதமாகக் கூறினால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமங்கள் முழுவதிற்கும் இது பொருந்தும்.
  • கிராமப் புறங்களில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் MGNREGA-ன் கீழ் பதிவு செய்து கொள்ளும் உரிமை உள்ளது.

 

பணி முறைகள்
  • MGNREGA-ன் கீழ் பதிவு செய்த அனைவருக்கும் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வேலைக்கான அட்டைகள் வழங்கப்படுகின்றன.
  • கிராமப் பஞ்சாயத்தானது சரிபார்ப்புக்குப் பின்னர் வேலைக்கான அட்டையை வழங்கும்.
  • இலவசமாக வழங்கப்படும் இந்த வேலைக்கான அட்டையானது MGNREGA-ன் கீழ் வேலை செய்ய விரும்பும் அனைத்து வயது வந்த உறுப்பினர்களின் புகைப்படத்தினையும் கொண்டிருக்கும்.

  • கிராமப் பஞ்சாயத்துகளின் பணிகளுக்காக குறைந்த பட்சம் 50% பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கிராம சமுதாயத்தினருக்கு அனுமதிக்கப்பட்ட 8 பணிப் பிரிவுகளிலிருந்து வேலைகளைத் தேர்வு செய்யும் உரிமை உள்ளது.
  • கிராமப்புற சமூகத்தால் முன்வைக்கப்பட்ட வேலைகளை MGNREGA-இன் வழிகாட்டுதல்களுடன் இசைந்து செல்லாதவரை யாராலும் அதனை மாற்ற முடியாது.
  • வேலையானது கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் வழங்கப்பட வேண்டும்.
  • ஒருவேளை 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் வேலை வழங்கப்பட்டால் வேலையாட்களுக்கு 10 சதவீத ஊதியமானது கூடுதலாக வழங்கப்படும்.
  • இதற்கான ஊதியமானது 1948 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
  • வேலைவாய்ப்பானது விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாளைக்குள் வழங்கப்படும்.
  • இல்லையெனில் தினசரி வேலையின்மைப் படித்தொகை வழங்கப்பட வேண்டும்.
  • வேலையின்மைப் படித்தொகை வழங்குதலின் தொகையானது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

 

நிதியளிப்பு
  • MGNREGA சட்டத்தின் கீழ் வேலை கோருகின்ற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இயலவில்லையெனில் மாநில அரசானது முதல் முப்பது நாட்களுக்கு 25 சதவீத குறைந்தபட்ச ஊதியத்தை அன்றாட வேலையின்மை இழப்பீட்டுப் படித்தொகையாக வழங்க வேண்டும். மேலும் அது நீடித்தால் அவ்வருடத்தின் மீதமுள்ள நாட்களுக்கு பாதி ஊதியத்தினை வழங்க வேண்டும்.

  • திறன் உடைய மற்றும் பாதி திறனுடைய பணியாட்களின் ஊதியம் உட்பட பொருட்களின் செலவில் 75 சதவீதத்தினையும் திறன் சாராத உடல் உழைப்புத் தொழிலாளர்களின் ஊதியத்தில் 100 சதவீதத் தொகையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

 

அனுமதிக்கப்பட்ட பணிகள்
  • பிரதான நீர்ப் பாதுகாப்பு
  • வறட்சித் தடுப்பு (பண்ணைத் தோட்டம் மற்றும் காடுகள் வளர்ப்பு உட்பட)
  • கடுமையான வெள்ள பாதுகாப்புப் நடவடிக்கைகள்
  • நில மேம்பாடு

  • SC/ST – BPL/IAY மற்றும் நிலமற்றப் பயனாளிகளின் பகுதியில் சிறிய நீர்வள மேம்பாடு, வேளாண்மை மற்றும் நிலப்பகுதி மேம்பாடு.
  • கிராமப்புறங்களின் இணைப்பு.

 

முக்கிய அம்சங்கள்
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம ஊதியம்
  • ஊதியமானது வாரம் ஒருமுறை வழங்கப்பட வேண்டும். மேலும் அது பதினைந்து நாட்களுக்கு மிகாமல் வழங்கப்பட வேண்டும்.
  • மூன்றில் ஒரு பங்கு பயனாளிகள் பெண்களாக இருத்தல் வேண்டும்.
  • குழந்தைகள் பாதுகாப்பிடம், குடிநீர், நிழலகங்கள், அவசரகால உடல்நிலைப் பாதுகாப்பு வசதி போன்ற பணியிட வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
  • NREGA-ன் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் 60: 40 என்ற விகிதத்தில் ஊதியம் மற்றும் பொருட்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தக்காரர்கள் மற்றும் எந்திரங்களுக்கு அனுமதியில்லை.
  • பொறுப்பான செயல்படுத்தும் நடவடிக்கைகளை உறுதி செய்ய குறைதீர்ப்பு முறைமை அமைக்கப்படவேண்டும்.
  • NREGA-ன் கீழ் செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் கிராம சபையால் செய்யப்படும் சமூகத் தணிக்கை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை எழுத்துப் பூர்வமாகவும் செயல்பாட்டிலும் உறுதிப்படுத்துவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டமானது இதற்குப் பொருந்தும்.
  • இது சரத்து 48A வழியாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழி நடத்தல்களைச் சார்ந்து கிராமப்புற பணிகளின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முயல்கிறது.

 

நிறைகள் மற்றும் குறைகள்
  • வறுமையைக் குறைத்தல், புலம்பெயர்தலைக் குறைத்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேளாண் நிலத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் நீர்வளங்களைப் புனரமைத்தல் போன்ற பல்வகைப்பட்ட நன்மைகளை இது உள்ளடக்கியது.
  • ஆனால் இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்தல், கிராமப்புறங்களில் தேவையற்ற பணவீக்கம், உருப்படியற்ற சொத்துக்கள், வேளாண் துறைக்கு தொழிலாளர்கள் கிடைக்காமை போன்றவை இச்சட்டத்தின் மீதான விமர்சனங்கள் ஆகும்.

 

சமீபத்திய மேம்பாடுகள்
  • அனைத்து ஊதியங்களும் நேரடி பயன் பரிமாற்ற வழிமுறை மூலம் வழங்கப்பட வேண்டும்.
  • 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புவிசார் குறியிடுதல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
  • MGNREGA-ன் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்களுக்கு புவியியல் குறியிடுவதற்காக ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது.
  • புவியியல் குறியிடுதல் (Geo-tagging) என்பது ஊரக மேம்பாட்டுத் துறையின் கீழ் தேசிய தகவல் மையம் மூலம் இயங்கும் NREGA-Soft எனும் இடைமுகத்துடன் இஸ்ரோவின் புவன் (Bhuvan) தளத்தினை இணைக்கும் தேசிய அளவிலான முயற்சியாகும்.

  • MGNREGA சட்டத்தினைப் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பான MGNREGA சமிக்சா (MGNREGA Sameeksha) எனும் நூலை 2012 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் வெளியிட்டார்.
  • MGNREGA பற்றிய புரிதல் மற்றும் அதன் தாக்கத்தின் பிரதிபலிப்புகளை ஊக்குவிப்பதற்காக 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட இரண்டு வருட காலங்களில் மேற்கொள்ளப்பட்டட மீளாய்வு ஆராய்ச்சிகளின் தொகுப்பான MGNREGA சமிக்சா II ஆனது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

இந்தச் சட்டத்தின் சிறப்புச் சொற்கள்
  • உரிமை அடிப்படையிலான கட்டமைப்பு
  • வரையறுக்கப்பட்ட கால உத்திரவாதம்
  • தொழிலாளர்கள் அதிகமுள்ள பணிகள்
  • பரவலாக்கப்பட்ட திட்டம்
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • வெளிப்படைத்தன்மை மற்றம் பொறுப்புணர்வு
  • வறுமை குறைப்பு
  • புலம்பெயர்வு குறைப்பு
  • SC/ST மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள் போன்ற நலிவுற்றப் பிரிவினர்களை மேம்படுத்துதல்.

 

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்