TNPSC Thervupettagam

தேசிய கீதம் கட்டாயமல்ல: நீதிமன்றம் சொன்னது என்ன?

January 7 , 2025 4 days 27 0

தேசிய கீதம் கட்டாயமல்ல: நீதிமன்றம் சொன்னது என்ன?

  • தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • அவர் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை என்பதை கேள்விப்பட்டு, அவர்களை நிர்பந்தித்து முதல்முறையாக தேசியகீதத்தை இசைக்கச் செய்தவர். அதேபாணியில் தமிழகத்திலும் தேசியகீதம் இசைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் தேசியகீதம் இசைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை கடந்த 2019-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர், ஆளுநர், துணைநிலை ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரும்போதும், முடிந்து கிளம்பும் முன்பும் தேசியகீதம் இசைப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவைகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
  • தேசியகீதம் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ன் படி, தேசியகீதம் பாடும்போது இடையூறு ஏற்படுத்தினால், அவமதித்தால், தேசியக்கொடியை அவமதித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தேசியகீதம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
  • திரையரங்குகளில் தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்பது குறித்த வழக்குகளும் உச்சநீதிமன்றம் வரை விசாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது கட்டாயமல்ல; விருப்பத்தின் பேரில் ஒளிபரப்பலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
  • இதேபோன்று, கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர், ஆளுநர், தமிழக முதல்வர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டும் இசைக்கப்படவில்லை. இதை எதிர்த்து செல்வி வேம்பு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ‘‘அரசியலமைப்புச் சட்ட பிரநிதியாக உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையிலும் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. எனவே, தமிழக தலைமைச்செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று முறையிட்டார்.
  • வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி பார்த்தால் தேசியகீதம் இசைப்பது கட்டாயமல்ல,’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.
  • தேசியகீதம் மற்றும் தேசியக் கொடியை அவமதித்தால், அந்த குற்றத்தைச் செய்தவர்களை தண்டிக்க வழியிருக்கிறது. ஆனால், தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். மீறினால் குறிப்பிட்ட காலம் தண்டனை, அபராதம் என்று சட்டம் வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, சட்ட விதிமீறலாக கருத முடியும்.
  • நாமாக உருவாக்கிக் கொள்ளும் வழக்கத்தை மரபாக பின்பற்றி வருகிறோம். அதுபோல சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசியகீதம் என்ற வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். ஆளுநரின் கோபம் நல்ல நோக்கத்துக்காக இருந்தாலும், சட்ட விதிமீறல் இல்லாத நிலையில் அந்த நடைமுறையைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்