TNPSC Thervupettagam

தேசிய குடிமக்கள் பதிவேடு: விரைந்து அளிக்கப்படும் நீதியா? மறுக்கப்படும் நீதியா?

August 5 , 2019 1985 days 896 0
  • அசாமில் குடிமக்களின் பெயர்கள் அடங்கிய தேசியப் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுவரும் இப்போதைய நடைமுறைகளுக்கு மூலகாரணமாக இருந்தது எது என்பது ஊடகங்களில் அதிகம் இடம்பெறவில்லை.
  • அப்துல் குத்தூஸ் ‘எதிர்’ மத்திய அரசு வழக்கில் 15 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களின் பேரில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த மே 17-ல் ஒரு முடிவை எடுத்தது; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா இடம்பெற்றிருந்தனர்.
  • 2003 குடியுரிமை (குடிமக்கள் பதிவு, தேசிய அடையாள அட்டை விவகாரம்) விதி’ சட்டத்தின் இரண்டு பத்திகளில், ‘முரண்பாடுகள் இருப்பதாக’ கருதி அந்த அமர்வு எடுத்த முடிவுதான் இப்போதைய நடைமுறைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.
  • அசாம் மாநிலத்தில் குடிமக்களைத் தீர்மானிப்பதற்கு ஒரே சமயத்தில் இருவேறு நடைமுறைகளை இருவேறு அமைப்புகள் பின்பற்றுகின்றன. ‘அந்நியர்கள் (அடையாளம் காணும்) நடுவர் மன்றம்’ போலவே ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) தயாரிக்கும் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, அதன் கண்காணிப்பில் செயல்படுகிறது.
  • ‘அந்நியர்கள் நடுவர் மன்றம்’ தெரிவிக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் ஏதும் கிடையாது, ஏனென்றால், அது ‘அரசு நிர்வாக’ உத்தரவின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் என்று அப்துல் குத்தூஸ் வழக்கில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

தவறான அணுகுமுறை

  • இப்போதுள்ள விதிகளின்படி, அந்நியர் நடுவர் மன்றம் ஒருவரை இந்நாட்டுக் குடிமகன் இல்லையென்று கூறினாலும் அவருடைய பெயர் உடனடியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படாது.
  • புதிய சான்றுகள் தரப்பட்டால் நடுவர் மன்றமே தன் முடிவை எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ளக்கூடும்.
  • குடிமக்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையானது, அரசு நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு தவறுகளுக்கு உட்பட்டதே.
  • பிற்காலத்தில், தற்செயலாகத் சில தவறுகள் தெரியவரலாம். அப்படி ஆதாரத்துடன் தெரியும்பட்சத்தில், ‘குடிமகன் அல்ல’ என்று தீர்மானிக்கப்பட்டவர், அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, தனக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று கூறி ‘குடிமகனாக’ அறிவிக்கும்படி மீண்டும் கோரவும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
  • எனவே, அந்நியரை அடையாளம் காணும் நடுவர் மன்றத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு அமைப்பையும் ஒன்றையொன்று சாராமல் தனித்தனியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் கோரிக்கை.
  • ஆனால், உச்ச நீதிமன்றம் மனுதாரர்களின் இந்த வாதங்களை ஏற்கவில்லை.
  • அந்நியர் நடுவர் மன்றத்தின் கருத்துகளை, ‘பகுதியளவு நீதித் துறை ஆணை’யாகவே கருத வேண்டும் என்று கூறி, மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்தது.
  • அந்த நடுவர் மன்றமும் பகுதியளவு நீதிமன்ற அமைப்பாகவே நடத்தவும் பட்டது.
  • எனவே, அதன் முடிவுகள் இறுதியானதாகவும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் ஏற்கப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதே அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.
  • ஆனால், இப்படிப்பட்ட அணுகுமுறையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன.
  • இது லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையையே தனிப்பட்ட முறையில் பாதித்துவிடும்.

வெளிப்படையான குளறுபடிகள்

  • அமைப்பு என்று பார்த்தாலும், அதன் செயல்கள் என்று பார்த்தாலும் சாதாரணமாக நாம் காணும் எந்த நீதிமன்றத்துடனும் ஒப்பிடும் வகையில் அந்நியர் நடுவர் மன்றங்கள் இல்லை.
  • முதலாவதாக, அரசு நிர்வாகத்தின் ஆணை மூலம் ஏற்படுத்தப்பட்டதே இந்த அமைப்பு. நடுவர் மன்றத்தில் உறுப்பினராகச் செயல்படுவதற்கான தகுதிகள் தளர்த்தப்பட்டு, ‘நீதித் துறை அனுபவம்’ என்ற மேலோட்டமான தகுதி போதும் என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அரசு அதிகாரிகள்கூட உறுப்பினர்களாக்கப்படுகின்றனர்.
  • எல்லாவற்றையும்விட முக்கியம், ‘சாட்சியங்களைப் பார்க்க முடியாது’ என்று மறுக்கும் அதிகாரமும் நடுவர் மன்றத்துக்குத் தரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களை ஆராய்வதும் கேட்பதும், காலத்தைக் கடத்தும் என்பதுடன் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் பார்க்கப்படுகிறது.
  • எனவே, காவல் துறை அளிக்கும் சாட்சிகளை ஏற்றாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியரா இல்லையா என்று தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றும் நடுவர் மன்றத்துக்கு விலக்கு தரப்பட்டிருக்கிறது.
  • உண்மைகளைத் தொகுத்து முடிவுரை எழுதினால் போதும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  • அதாவது, நடுவர் மன்றங்கள் தங்களுக்குத் தாங்களே நடைமுறைகளை உருவாக்கிக்கொள்ளவும் தீர்மானிக்கவும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
  • இதனால்தான், கடந்த சில மாதங்களாக ஏராளமான, வெளிப்படையான குளறுபடிகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.
  • கிட்டத்தட்ட 64,000 பேர் விசாரணைக்கு அழைக்கப்படாமலேயே - அதாவது, விசாரிக்கப்படாமலேயே - இந்தியர்கள் அல்ல என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கான விடைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
  • ஒருவர் நாட்டின் குடிமகனா இல்லையா என்பதை மிகக் கவனத்துடனும் அக்கறையுடனும் ஆராய வேண்டும். அது அவரை மட்டுமல்ல; அவருடைய குடும்பத்தையும் தலைமுறையையும் பாதிக்கும் நடவடிக்கை என்ற கவனம் அதிகாரிகளுக்கு அவசியம்.
  • சட்டப்படி மட்டுமல்ல; தார்மிகப்படியும் இதில் நடந்துகொள்ள வேண்டும். அந்நியர் நடுவர் மன்றமோ இந்தக் கொள்கைகளுக்கெல்லாம் முரணாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
  • ‘மனித உரிமைகளின் கடைசிப் பாதுகாவலர்’ என்று அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில் உச்ச நீதிமன்றம் தவறிக்கொண்டிருக்கிறது.
  • மனுக்களைப் பரிசீலிக்கக் காலவரம்பு நிர்ணயிப்பதும், உத்தரவுகளை அளிக்க முன்னுரிமை தருவதும் இந்த விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்காகவும், காலவரம்புடன் பணி செய்வதற்காகவும் மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது.
  • இப்படி ஒரு தொழில்-வணிக நிறுவனத்தின் தலைவர் பேசலாம், உச்ச நீதிமன்றம் பேசக் கூடாது.
  • நியாயம் வழங்குவதற்கான சட்ட நடைமுறைகளை இப்படி மீறி, விரைந்து செயல்படுவதாகக் காட்டிக்கொள்வது ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற அம்சத்தையே சிதைப்பதாகிவிடும்.

தவறான முன்தீர்ப்பு நெறி

  • குத்தூஸ் வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையைக் கடந்த சில மாதங்களாக அது முடுக்கிவிட்டுவரும் விதமும் 2000-களின் நடுவில் அது வழங்கிய ‘சர்வானந்த சோனோவால்-I’, ‘சர்வானந்த சோனோவால்-II’ என்ற இரு தீர்ப்புகளின் நீட்சி என்றால் மிகையாகாது. உண்மையான ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், சரிபார்க்கப்படாத - மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாத தகவல்களை ஏற்று அந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
  • விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் வாக்குரிமை இழந்தவர்களும் எண்ணிலடங்காமல் இருக்கும் இந்நாட்டில் இதையே விதியாகத் திணிக்கும் அபத்தமும் நிகழ்ந்தேறிவருகிறது.
  • இவ்விதம் மனிதாபிமானமே இல்லாமல் தனிநபர்கள் மதிப்பிழக்கவைக்கப்படுகின்றனர்.
  • இந்த வகையில்தான் அந்நியர் (அடையாளம் காணும்) நடுவர் மன்றம் செயல்படுகிறது.
  • அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 ‘வாழ்வுரிமை’யை அளிப்பது உண்மையானால், அந்நியர்களை அடையாளம் காணும் இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் முடிவுகளும் முற்றுமுதலாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நன்றி – இந்து தமிழ்திசை (05-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்