மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தேசிய சுகாதாரத் தகவல்களின் (National Health Profile - NHP) 14வது பதிப்பை வெளியிட்டார்.
NHPயானது சமூக-பொருளாதார சுகாதார நிலை & நாட்டின் மக்கள்தொகை மற்றும் சுகாதார நிலைகள் குறித்த விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.
தேசிய சுகாதாரத் தகவல்களை மத்திய சுகாதாரப் புலனாய்வு அமைப்பு தயாரிக்கிறது.
இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
குறிகாட்டிகள்:
சுகாதாரத் தகவல்கள் மூன்று முக்கியமான குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. உதாரணத்திற்கு,
மக்கள்தொகைக் குறிகாட்டிகள் - மக்கள் தொகை மற்றும் முக்கியப் புள்ளிவிவரங்கள்.
சமூக-பொருளாதாரக் குறிகாட்டிகள் - வேலைவாய்ப்பு, கல்வி, குடியிருப்பு & வசதிகள் மற்றும் சுகாதாரம் & குடிநீர்.
சுகாதார நிலைக் குறிகாட்டிகள் - பொதுவான தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களின் பரவல்.
முக்கியத் தகவல்கள்
சுகாதாரத்திற்கான நாட்டின் பொதுச் செலவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2017-18 வரவு செலவு பட்டியல் மதிப்பீட்டின்படி ) 1.28% ஆக உள்ளது.
ஒப்பிட்டுப் பார்க்கையில், உலக வங்கியால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்பட்ட நாடுகள் அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.57 சதவீதத்தை சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளன.
இதன்மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் சுகாதாரத்திற்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% என்ற இலக்கை அடைவது என்பது ஒரு ஏற்றமிகு பணி என்று தெரிகிறது.
இது உலக சராசரியில் சுமார் 6 சதவீதமாக உள்ளது.
2019-20 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சுகாதார வரவு செலவுப் பட்டியல் 63,000 கோடிக்கும் குறைவாக இருந்தது.
10 தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பீட்டுத் தகவல்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.93% ஒதுக்கியுள்ள இந்தியா, அண்டை நாடான வங்க தேசத்தை (0.42% மொத்த உள்நாட்டு உற்பத்தி) விட மட்டுமே அதிகமாக ஒதுக்கி இருந்தது எனக் காட்டுகின்றது.
மற்ற தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாட்டின் தனிநபருக்கான சுகாதாரச் செலவினங்களும் (16 அமெரிக்க டாலருக்கும் குறைவான அளவில்) மிகக் குறைவாகவே உள்ளது.
இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த விகிதம் ஆகியவை அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. அதே நேரத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகிய நோய்கள் பொது சுகாதாரத்தில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 1970-75 ஆம் ஆண்டுகளில் 49.7 ஆண்டுகளில் இருந்து 2012-16 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில், பெண்களின் ஆயுட்காலம் 70.2 ஆண்டுகள் என்றும் ஆண்களுக்கு 67.4 ஆண்டுகள் எனவும் இருந்தன.
கணக்கெடுப்பின்படி, அதிக மக்கள் தொகை அடர்த்தி தேசிய தலைநகர் டெல்லியில் சதுர கிலோமீட்டருக்கு 11,320 மக்கள் என்று பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சலப் பிரதேசத்தில் சதுர கிலோமீட்டருக்கு 17 என்று கணக்கிடப் பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் மொத்த மக்கள்தொகையில்,
27% மக்கள் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்
64.7% மக்கள் 15-59 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்
8.5% மக்கள் தொகை 60-85 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வயதுப் பிரிவில் உள்ளனர் என்றும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
1991 முதல் 2017 வரை இந்தியாவில் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இயல்பான வளர்ச்சி விகிதம் ஆகியவற்றில் தொடர்ந்து குறைவு ஏற்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் பிறப்பு விகிதம் 1,000 மக்கள் தொகைக்கு 20.2 ஆகவும், இறப்பு விகிதம் 6.3 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இயல்பான வளர்ச்சி விகிதம் 1,000 மக்கள் தொகையில் 13.9 ஆக இருந்தது.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது.
இதேபோல், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் மற்றும் இயல்பான வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தன.
இருப்பினும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இது ஏனெனில் பிறப்பு வீதத்தின் சரிவு இறப்பு வீதத்தின் வீழ்ச்சியைப் போல விரைவாக இல்லை.
NHPயின் படி, நாட்டில் பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை) 2001 ஆம் ஆண்டில் 933 ஆக இருந்து 2011 ஆம் ஆண்டில் 943 ஆக உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் பாலின விகிதம் 946லிருந்து 949 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் அதிக பாலின விகிதம் - மொத்த மக்கள் தொகையில் 1,084 என்றும் கிராமப்புற மக்கள் தொகையில் 1,078 என்றும் நகர்ப்புற மக்கள் தொகையில் 1,091 என்றும் பதிவாகியுள்ளது.
கிராமப்புறங்களில் மிகக் குறைந்த பாலின விகிதம் சண்டிகரில் (690) பதிவாகியுள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate - IMR) கணிசமாகக் குறைந்துள்ளது (2016 ஆம் ஆண்டில் 1,000 குழந்தைப் பிறப்புகளுக்கு IMR 33 என இருந்தது). இருப்பினும் கிராமப்புற (37) மற்றும் நகர்ப்புற (23) வேறுபாடுகள் இன்றும் அதிகமாக உள்ளன.
நாட்டின் மொத்தக் கருவுறுதல் வீதம் (Total Fertility Rate - TFR) 2.3 ஆகவும், கிராமப்புறங்களில் இந்த வீதம் 2.5 ஆகவும் நகர்ப்புறங்களில் 1.8 ஆகவும் இருந்தது.
12 மாநிலங்களில் உள்ள TFR (ஒரு பெண்ணின் வாழ்நாளில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்ற விகிதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. ஒன்பது மாநிலங்கள் 2.1 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிற்கு மாற்று நிலைகளை எட்டியுள்ளன.
டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பிற மாநிலங்கள் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டுள்ளன.
சுகாதார நிலை குறிகாட்டிகளில், 2018 ஆம் ஆண்டில், சத்தீஸ்கரில் தொற்று நோய்கள் மற்றும் மலேரியா காரணமாக அதிகபட்ச இறப்புகள் பதிவாகியுள்ளதாக (77,140 வழக்குகள் மற்றும் 26 இறப்புகள்) கணக்கெடுப்பு குறிப்பிடுகின்றது.
இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையானது 2.68 கோடியாக உள்ளது.
விபத்துக் காயங்கள்: 2015 ஆம் ஆண்டில் விபத்துக் காயங்கள் காரணமாக 13 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
தற்கொலை: இளைஞர்களிடையே தற்கொலை விகிதம் கணிசமாக அதிகரித்து வருகின்றது. 30-45 வயதுக்கு இடைப்பட்ட மக்களிடையே அதிகபட்ச தற்கொலை வழக்குகள் (44,593) பதிவாகியுள்ளன. 1.33 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
பாம்புக் கடி: பாம்பு கடித்ததால் ஏற்பட்ட மொத்தப் பதிவுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முறையே 1.64 லட்சம் மற்றும் 885 ஆகும்.