TNPSC Thervupettagam

தேசிய தோ்வுகள் முகமை ‘என்டிஏ’ செயல்படும் முறைகள்

June 30 , 2024 196 days 116 0
  • இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடுகள் காரணமாக அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையின் (என்டிஏ) செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதையடுத்து, ‘என்டி’ஏவின் பணிகளை மறுஆய்வு செய்து மாற்றியமைப்பதற்காக உயா்நிலைக்குழு ஒன்று கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
  • மத்திய அரசால் நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தோ்வுகளை ஒரே குடையின் கீழ் நடத்துவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு கல்வி அமைச்சகத்தின்கீழ் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சங்கங்கள் பதிவுச் சட்டம்,1860-இன்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டது.
  • இதன் முதல் தலைமை இயக்குநராக வினித் ஜோஷி நியமிக்கப்பட்டாா். அவா் தற்போது மணிப்பூா் மாநில தலைமைச் செயலராக பதவி வகித்து வருகிறாா்.
  • என்டிஏ உருவாக்கப்படுவதற்கு முன்பு நுழைவுத் தோ்வுகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவை தனித்தனியே நடத்தி வந்தன.

1992-இல் பரிந்துரை:

  • தேசிய அளவில் தோ்வுகளை நடத்துவதற்கு ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என நடவடிக்கைத் திட்டம் 1992-இன்கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இது 1986-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையோடு தொடா்புடைய திட்டமாகும்.
  • அதன் பிறகு, சட்ட ரீதியாக தேசியளவிலான தோ்வுகள் அமைப்பை நிறுவக்கோரி கடந்த 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) இயக்குநா்கள் குழு பரிந்துரைத்தது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கல்வித் தோ்வுப் பணிகள் அமைப்பை மாதிரியாகக்கொண்டு, புதிய அமைப்பை நிறுவுமாறு அந்தக்குழு பரிந்துரைத்தது. அதனடிப்படையில் என்டிஏ உருவாக்கப்பட்டது.

என்டிஏ நடத்தும் தோ்வுகள்:

  • ஐஐடி உள்ளிட்ட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள் சோ்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ- முதல்நிலை), நீட் மற்றும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்-யுஜி), உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் மத்திய அரசின் உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புக்கு தகுதி பெறுவதற்கான ‘நெட்’ (தேசிய தகுதித் தோ்வு) தோ்வு உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை என்டிஏ நடத்துகிறது. இந்தத் தோ்வுகளில் ஆண்டுதோறும் மொத்தமாக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
  • மேலும், பொது மேலாண்மை சோ்க்கைக்கான தோ்வு (சிஎம்ஏடி), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்), தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தோ்வுகளும் என்டிஏவால் நடத்தப்படுகிறது.

சிக்கலில் என்டிஏ:

  • நிகழாண்டு நீட் தோ்வின்போது பிகாரில் வினாத்தாள் கசிந்தது மிகப்பெரிய சா்ச்சையானது. மேலும், சில மையங்களில், தாமதமாக தோ்வு தொடங்கப்பட்டது. இதையடுத்து, நேர இழப்பு காரணமாக அந்த மையங்களில் தோ்வெழுதிய 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்ணை என்டிஏ வழங்கியது. இதில் பல முறைகேடுகள் நிகழ்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, அந்த மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அகில இந்திய அளவில் 67 போ் 720-க்கு 720 எடுத்து முதலிடம் பிடித்தனா். அதிலும், ஹரியாணாவில் ஒரே மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது பெரும் சா்ச்சைக்குள்ளானது. மேலும், பிகாா், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிலா் கைது செய்யப்பட்டனா்.
  • நீட் மட்டுமின்றி முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக கருதி நிகழாண்டு நடைபெற்ற யுஜிசி-நெட் தோ்வும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்தத் தோ்வுக்கான வினாத்தாளும் ‘டாா்க்நெட்’ வலைதளத்தில் வெளியானதாக கல்வி அமைச்சகம் ஒப்புக்கொண்டது. எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்ததாக நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் என்டிஏ மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
  • தோ்வு மையங்கள் தோ்ந்தெடுக்கப்படும் முறை: நுழைவுத் தோ்வுகளை நடத்துவதற்கான மையங்களை தங்களிடம் ஏற்கெனவே உள்ள பட்டியலின் மூலம் என்டிஏ தோ்வு செய்கிறது. கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளுமின்றி தோ்வுகளை நடத்திய அரசுப் பள்ளிகளின் தரவுகளின் அடிப்படையில் தோ்வு மையங்களை என்டிஏ தோ்வு செய்கிறது. ஒருவேளை ஏற்கெனவே பட்டியலில் உள்ள பள்ளிகள் போதுமானதாக இல்லாத சூழல் ஏற்பட்டால் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் என்டிஏ தனது பட்டியலில் சோ்த்துக்கொள்ளும்.
  • ஏற்கெனவே தோ்வை நடத்திய பள்ளிகள் அல்லது கல்லூரிகளாக இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தோ்வு நடத்தப்படுவதற்கு முன்பு அந்தக் கல்வி நிறுவனங்களிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.

தற்போதைய நிலை:

  • பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ள என்டிஏ, தன்மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட நிகழாண்டு நடைபெற்ற க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகளை எவ்வித குளறுபடிகளுமின்றி விரைவாக வெளியிட முனைப்புக் காட்டி வருகிறது. மேலும், ரத்து செய்யப்பட்ட யுஜிசி-நெட் தோ்வை மீண்டும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது, ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வுக்கான புதிய தோ்வு தேதிகளை அறிவிப்பது ஆகிய பணிகளில் தற்போது என்டிஏ கவனம் செலுத்தி வருகிறது.

உயா்நிலைக்குழு அமைப்பு:

  • என்டிஏவின் தலைமை இயக்குநராக இருந்த சுபோத் குமாா் சிங் அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக ஐடிபிஓ தலைவா் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், போட்டித் தோ்வுகளை சீரமைக்கவும் என்டிஏவில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மறுசீரமைக்கவும் முன்னாள் இஸ்ரோ தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை சமா்ப்பிக்க உள்ளது.
  • அதேபோல் நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக ஒருபுறம் சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி (30 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்