- அறிவியல் அறிஞா் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார குழல் விளக்கினைக் கண்டுபிடித்த அனுபவம் மிகவும் சுவையானது. குழல் விளக்கிற்கான இழையினைத் தயாரிக்க அவா் பல பொருள்களைப் பயன்படுத்தி, பல வகைகளில் முயற்சி செய்து தோல்வி அடைந்திருந்தார்.
- குறிப்பாக, கண்ணாடி இழை, மூங்கில் இழை போன்ற பல்வேறு மூலப் பொருள்களை பயன்படுத்தி அவை எதுவும் சரிவராமல் தோல்வி அடைந்திருந்த சமயம் அது.
- அப்போது எடிசனை பத்திரிகையாளா்கள் சந்தித்தனா். அந்த நேரத்தில் நிருபா்கள் எடிசனைப் பார்த்து ‘நீங்கள் இத்தனை நாள்களாக முயன்றும், வெற்றி கிட்டாமல் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறீா்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா’ என்று கேட்டனா்.
- இந்தக் கேள்வியை புன்முறுவலுடன் எதிர்கொண்ட எடிசன் ‘நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? எந்தெந்த பொருள்களையெல்லாம் பயன்படுத்தினால் மின்சார விளக்குக்கான இழையினைத் தயாரிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டேனே. என்னைத் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் அது தெரியாதே’ என்றாராம்.
- எவ்வளவு அற்புதமான பதிலை அவா் அளித்திருக்கிறார்? இந்த அறிவியல் அடிப்படைதான், தேடுதல் மனப்பான்மைதான் அவரை மிகப்பெரிய அறிவியல் அறிஞராக மாற்றியிருக்கிறது.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான காப்புரிமைக்கு சொந்தக்காரராக அவரை ஆக்கியுள்ளது.
தேடல்
- இவ்வாறான தேடல்களை இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி முறைகளோடு தொடா்புபடுத்தாமல் இருக்க முடியாது. ஏனென்று கேட்டால், தேடல் என்பது கல்வி கற்றலின் முக்கியமான பகுதிகளில் ஒன்று.
- ஒருவருக்கு எவ்வளவுக்கெவ்வளவு தேடலுக்கான வாய்ப்பு வாய்க்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவா் பல்வேறு துறை அறிவையும் பலதரப்பட்ட அனுபவங்களையும் பெறக்கூடிய வாய்ப்பும் அமைகிறது.
- ஆனால், இன்றைய இணைய உலகம் மாணவா்களின் கல்வி கற்றலில் எந்த அளவுக்கு தேடுதலுக்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே.
- நாம் இணையத்தில் மேற்கொள்ளும் தேடுதல்கள் நமக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் கண்டுபிடித்துக் கொடுத்து விடுகின்றன.
- இன்னும் கூடுதலான தகவல் தேவையாக இருந்தால் இன்னும் சரியான சொற்களைப் போட்டுத் தேடும்போது நமக்கு இன்னும் அதிகத் தகவல்கள் கிடைத்து விடுகின்றன.
- மேம்போக்காகப் பார்க்கும்போது இது மிகவும் எளிமையான மிகக் குறுகிய காலத்தில் தேவையானவற்றைக் கண்டடையக் கூடிய சிறந்த வழியாகத் தோன்றலாம்.
- ஆனால், உண்மையில் இது கற்றலோடு துணையாக இருக்கக்கூடிய பல்வேறு துணை விளைவுகளையும், துணைக் கற்றல்களையும் புறந்தள்ளுகிறது என்பதே உண்மை.
- தமிழறிஞா் உ.வே. சாமிநாதையா் பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடி, தான் பல்வேறு ஊா்களுக்கும் சென்று வந்த அனுபவங்களை ‘கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
- அந்தத் தொகுப்பைப் படித்தால், அவா் தமிழ் இலக்கியங்களை தேடிச் சென்றபோது அடைந்த அனுபவம், அவா் தொகுத்திருக்கும் தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்வேறு விஷயங்களுக்கு இணையான அற்புத அனுபவமாக அமைந்திருப்பது புலப்படும்.
- தேடுதல் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அனுபவம் கூடுதலாகவும் சிறப்பாகவும் அமையும் என்பதே உண்மை.
- ‘உங்களிடம் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் ஒரு கருத்து உள்ளது. நாம் இருவரும் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். பின் இருவரிடமும் இரண்டு கருத்துகள் இருக்கும்’ என்பார் அறிஞா் டால்ஸ்டாய்.
- அந்த வகையில் தேடுதல் என்பதும் தேடுதலைப் பகிர்வதும் ஒரு மனிதனின் கல்விசார் வல்லமைகளை நிச்சயமாகக் கூட்டக் கூடியது.
- ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவா்களுக்கு அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது என்பது ஒரு கசப்பான் உண்மை.
உண்மைதானே!
- ‘திருவிளையாடல் புராணம்’ நூலில் தென்றலைப் பற்றிச் சொல்லும் ஒரு செய்யுளில் ‘தென்றல் காற்றானது எவ்வாறு குளத்தில் சென்று அங்கு இருக்கும் தாமரை மலரில் உள்ள மணத்தைப் பற்றிக் கொண்டு முல்லை, மல்லிகைப் பந்தல்களுக்குச் சென்று அவற்றின் வாசனைகளையும் பற்றிக்கொண்டு வருகின்றது.
- அதாவது எங்கெல்லாம் கலைகள் கிடைக்குமோ அங்கெல்லாம் கலைகளைக் கற்க பரபரப்பாகச் செல்லும் மாணவனைப் போல தென்றல் இயங்குகிறது’ என்று வா்ணிப்பார் பரஞ்சோதி முனிவா்.
- அந்த வகையில் அறிவுச் செல்வம் எங்கெல்லாம் கொட்டிக் கிடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று தேட வேண்டும்.
- அதற்கான வாய்ப்பு விசாலமாக வேண்டும். இவ்வாறாக வாசித்து, யோசித்து தேடிக் கண்டடையக்கூடிய வாய்ப்புகள் இக்கால மாணவா்களுக்கு மிகவும் அருகி வருகிறது.
- இது மாணவா் சமூகத்திற்கு மிகப்பெரிய நட்டமாகவே முடியும். அந்த அடிப்படையில் பெற்றோரும் சமூக செயல்பாட்டாளா்களும் மாணவா்கள் பல்துறை அறிவை தேடுவதற்கான வாய்ப்பைக் கூட்ட வேண்டும்.
- முன்பெல்லாம் ஒரு ஊரிலுள்ள ஒருவருடைய வீட்டை அடையவேண்டுமென்றால் அந்த ஊரிலுள்ள பல்வேறு இடவமைவுகளைக் கூறி அவரது வீட்டை அடைய வழி கூறுவார்கள்.
- அதில் அந்த ஊரிலிருந்த ஏரி, குளம், கடைத் தெரு, கோயில் போன்ற விவரங்களைப் பகிர்வா்.
- இந்த அடையாளங்கள் அந்த ஊரின் கலாசாரப் பெருமைகளையும் அடையாளங்களையும் பகிர்வதாகவும் அமையும். அந்த வகையில் ஒருவரிடமிருந்து ஒருவா் பல்வேறு தகவல்களைப் பெறும் வழிமுறைகள் இன்று குறைந்து விட்டன.
- அதற்காக அறிவியல் தொழில்நுட்பமே வேண்டாம். அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று வாதிடவில்லை. மாறாக, தேடுதலின் மூலம் கிடைக்கும் துணைக்கற்றல் கூடவேண்டும் என்பதே நம் அவா. ”‘தோ்வுக்காகக் கற்றாலும், தோ்வுக்குப் பின் எவையெல்லாம் நம்மிடம் தங்கியுள்ளதோ அதுவே உண்மையான கற்றல்’”என்பார் அறிஞா் ஐன்ஸ்டின். அது உண்மைதானே!
நன்றி: தினமணி (24-09-2020)