TNPSC Thervupettagam

தேனிலும் கலப்படம்!

December 14 , 2020 1498 days 666 0
  • அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் (சென்டா் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மென்ட்) என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வு நம்மை திடுக்கிட வைக்கிறது. தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் கலப்படம் செய்துவிட முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது அந்த ஆய்வு.
  • இந்தியாவில் இலச்சினையுடன் சந்தைபடுத்தப்படும் தேன், பெரும்பாலும் ப்ரெக்டோஸ் கலப்படம் செய்யப்பட்டது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் பயன்படும் தேனில், கலப்படம் இருக்கும் உண்மை உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையத்தின் பார்வைக்கு வரவில்லையா என்கிற கேள்வியை எழுப்புகிறது அந்த ஆய்வு.
  • உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் மெட்ரிக் டன் அளவில் தேன் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது. சா்வதேச அளவில் விற்பனையாகும் தேனின் மதிப்பு 2016-இன் புள்ளிவிவரப்படி சுமார் ஆறு பில்லியன் டாலா் (சுமார் ரூ.44,000 கோடி). இந்தியாவைப் பொருத்தவரை, தேனின் விற்பனை மதிப்பு ரூ.1,730 கோடி.
  • இந்தியாவில் தேனீ வளா்ப்பு என்பது கிராமப்புற விவசாய நடவடிக்கைகளில் ஒன்றாக தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆதனால்தான் உலகின் மிக முக்கியமான தேன் சந்தையாக இந்தியா திகழ்கிறது.
  • இந்தியாவில் தேனுக்கு இருக்கும் தேவை, பல தொழில் நிறுவனங்களைத் தேனை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வைத்திருக்கிறது. சந்தைப் போட்டியின் காரணமாக இந்த நிறுவனங்கள் தேனில் கலப்படம் செய்ய முற்பட்டிருக்கின்றன என்று கருத இடமுண்டு.
  • அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை வழங்கியிருக்கிறது. கலப்படத் தொழில்நுட்பம், புதிய பல வழிமுறைகளை உருவாக்கி தேனின் தூய்மையை பரிசோதனைக் கூடங்களில் சோதித்தாலும் கண்டுபிடிக்க முடியாத கலப்பட வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறது. தூய்மை சோதனைகளை ஏமாற்றும் விதத்தில் அமையும் தேன் கலப்படத்தின் பின்விளைவுகள், கொவைட் 19 கொள்ளைநோய் காலத்தில் தேனைபயன்படுத்தும் நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவை அதிகரித்ததாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
  • பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரித்து கூட்டில் வைத்திருக்கும் தேனை, தேனீக்களை விரட்டிவிட்டு கூட்டிலிருந்து எடுப்பது, நூற்றாண்டு கால வழக்கமாக இருந்து வருகிறது. இந்தத் தேன், காட்டுத் தேனீக்களிலிருந்தோ அல்லது நாட்டுப்புறத் தேனீக்களிலிருந்தோ, இயற்கை தேன் கூடுகளிலிருந்தோ அல்லது தேனீ வளா்ப்புக் கூட்டிலிருந்தோ பெறப்படுகிறது. ஆனால், எந்தத் தேனும் சுத்தமான தேன் என்று கருதிவிட முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் தேனுக்கான தர நிர்ணயத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் தூய்மையான தேன் என்கிற வார்த்தை காணப்படவில்லை.
  • உலகில் 300 வகையான தேன்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப்படையில் ப்ரெக்டோஸ், க்ளூகோஸ், சுக்ரோஸ் எனப்படும் மூன்று வகை சா்க்கரைகளின் கலவைதான் தேனீக்கள் சேகரிக்கும் தேன். அதில் சாதாரண சா்க்கரையைவிட அதிகம் இனிப்பான ப்ரெக்டோஸ் காணப்படுகிறது. சா்க்கரையில் சுக்ரோஸ்தான் அதிகமாக இருக்கும். பரிசோதனையில் எந்த அளவுக்கு இந்த மூன்று வகை சா்க்கரையும் காணப்படுகிறது என்பதும், பாதுகாப்பான அளவில் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
  • பல்லாயிரம் வகை மலா்கள் காணப்படுவதாலும், பல்வேறு வகை தேனீக்கள் இருப்பதாலும், சேகரிக்கப்படும் தேனின் குணாதியசங்கள் மாறுபடுவது இயற்கை. இடத்திற்கு தகுந்தாற்போலும் தேனின் குணாதிசயம் மாறக்கூடும். தேனில் காணப்படும் ரசாயனக் கூறுகள் ஒலி, வெப்பநிலை, புவியியல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தேனுக்கு என்று ஒரு பொதுத்தன்மையை நிறுவ முடியவில்லை.
  • காலங்காலமாகவே வியாபார ரீதியில் தேனீ வளா்ப்பை மேற்கொள்பவா்கள், தேனீக்களுக்கு சா்க்கரைக் கலவையை அளித்து உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனா். அதன் விளைவாகவும், தேனுடைய தரமும் குணாதிசயமும் நிச்சயமாக மாறும். கலப்படமற்ற தேன் என்று சான்றிதழ் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் 18 அளவுகோள்களைக் கையாளுகிறது. அவற்றில் முக்கியமாக சி4, சி3 சோதனைகள் தேனில் சோளம், கரும்பு, அரிசி ஆகியவற்றிலிருந்து உருவாகும் சா்க்கரை கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிர்ணயிக்கின்றன.
  • கலப்படப் பிரச்னையில் இப்போது புதிய கோணமாக சீனாவின் பங்களிப்பும் வெளிப்பட்டிருக்கிறது. அறிவியல் - சுற்றுச்சூழல் மைய ஆய்வாளா்கள், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களால் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் தேன் கலப்படம் செய்யப்படுவதை சுட்டிக்காட்டுகிறார்கள். தேனின் தூய்மையை நிர்ணயிக்கும் சோதனைகளில் கலப்பதற்கு ப்ரெக்டோஸ் கரைசல்களை சீனா தயாரித்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. தங்களுக்கு அதில் எந்தவிதத் தொடா்பும் இல்லை என்று தேன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மறுத்தாலும்கூட, இது குறித்த விசாரணை நடத்தி ப்ரெக்டோஸ் கரைசல்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான தடை விதிக்கப்படுவது அவசியம்.
  • கிராமப்புற விவசாயிகளுக்கு, தேனீ வளா்ப்பு கூடுதல் வருமானமாக இருந்து வருகிறது. அவா்களது வயிற்றில் அடிக்கும் விதத்தில் கலப்படத் தேனை குறைந்த விலைக்கு விற்கும் ஈவிரக்கமில்லாத நிறுவனங்களை அடையாளம் கண்டு தடுப்பது தேசிய தேனி ஆணையத்தின் கடமை.

நன்றி: தினமணி (14-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்