TNPSC Thervupettagam

தேர்தல் ஆணையர் நியமனம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

April 1 , 2023 484 days 258 0
  • பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரைப்படி தலைமைத் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
  • இதற்கென நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்வரை இந்த வழிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது.
  • தேர்தல் ஆணையராக அருண் கோயல் அவசர அவசரமாக நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் ஒரு பகுதியாகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புரீதியான அமைப்பாகும். தேர்தல்களை நடத்துவது, கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது என ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காக்கும் வகையில் மிகப் பெரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் நாட்டின் மிக முக்கியமான ஓர் அங்கம் அது.
  • இந்திய அரசமைப்பின் 324ஆவது கூறு, நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தின்படியும் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்கிறது.
  • ஆனால், பொதுவாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரிலேயே தலைமைத் தேர்தல் ஆணையரையும் பிற தேர்தல் ஆணையர்களையும் குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கமாக இருந்துவருகிறது. மத்திய அரசை ஆள்வது ஓர் அரசியல் கட்சி என்பதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டியது அவசியம்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒரு வகையில் தேர்தல்களைச் சந்திக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால், அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒரு சட்டம் உருவாக்கப்படாதது நகைமுரண். சட்டம் இயற்றும் இடத்தில் இருந்தவர்கள் அதற்கான வாய்ப்புகளைப் பல பத்தாண்டுகளாகத் தவறவிட்டிருப்பதையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது.
  • இதற்கான பிரத்யேகச் சட்டம் உருவாக்கப்படும்வரை, தேர்தல் ஆணையர் நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரையும் உச்ச நீதிமன்றத்தையும் ஈடுபடுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
  • நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த நேர்மையான, பாரபட்சமற்ற அதிகாரிகளுக்கு அந்தப் பணியை வழங்குவதையும் இந்தத் தீர்ப்பு உறுதிசெய்திருக்கிறது. மேலும் அரசியல் சார்புடைய அதிகாரிகள் இதுபோன்ற அரசமைப்புரீதியான அமைப்பில் பதவிக்கு வருவதையும் இது தடுக்கும்.
  • ஏற்கெனவே, சிபிஐ இயக்குநர் போன்ற உயர் பதவிகளுக்கான நியமனங்கள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படியே நடைபெறுகின்றன. அந்த வகையில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் முறைக்கும் குழு ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கை ஆகும்.
  • இதுபோன்ற குழுக்கள் பிற அரசமைப்புப் பதவிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். அரசமைப்புரீதியான அமைப்புகள் அரசியல் தலையீடுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், முழுமையான சுதந்திரத்துடன் அவை இயங்குவதற்குமான தொடக்கமாக இது அமையும்.

நன்றி: தி இந்து (02 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்